’உங்களுக்கு கவுண்டமணி காமெடி பிடிக்குமா?’, இந்தக் கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். அவர் நடித்த காட்சிகள் சிலவற்றைக் கண்டிருந்தாலே போதும்; இதற்கான பதிலைச் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தைக் காணும் விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியொரு விருப்பம் இருந்ததால், அப்படத்தைக் காணச் சென்றேன்.
ட்ரெய்லர் பார்த்ததும் கலவையான எண்ணங்கள் வந்தபோதும், ‘காதலர் தினம் அல்ல, கவுண்டமணி தினம்’ என்ற பஞ்ச் டயலாக்கை தாங்கி வந்த அப்படத்தின் விளம்பரங்கள் மனதை அசைத்தன. அந்த உத்வேகத்தோடு படம் பார்க்கச் சென்றேன்.
அதற்கேற்ற திரையனுபவத்தைத் தந்தா ‘ஒத்த ஓட்டு முத்தையா’?
ஒ.ஓ.மு. கதை!
முத்தையா ஒரு அரசியல்வாதி. சட்டமன்றத் தேர்தலில் அவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போகிறார். ஆனாலும், தான் சார்ந்த கட்சியில் செல்வாக்கோடு இருக்கிறார். அவர் பெரிய பணக்காரராகவும் இருக்கிறார்.
முத்தையாவுக்கு மூன்று சகோதரிகள். அவர்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
தனது கொழுந்தியாளைத் தனது கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் மகனுக்குக் கட்டிவைத்து பட்ட அவஸ்தைகள் தான் அதற்குக் காரணம். மாமியார், நாத்தனார் கொடுமை காரணமாக அப்பெண் இறந்துபோகிறார். அதனால், தனது சகோதரிகள் ஒரே வீட்டில் மணமகள்கள் ஆனால் அப்படியொரு கொடுமை நிகழ வாய்ப்பில்லை என்று கருதுகிறார்.
ஆனால், முத்தையா விரும்பியது நடக்காது போகிறது.
அவரது சகோதரிகள் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆண்மகன்களைப் பார்க்கின்றனர். அவர்களை விரும்புகின்றனர்.
ஒருகட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக அவர்களை நடிக்க வைத்து முத்தையாவை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
அதே நேரத்தில், இடைத்தேர்தல் உறுப்பினராகத் தேர்வாக முத்தையா உள்ளிட்ட சிலர் முயற்சிக்கின்றனர். அப்போதும், அவருக்கு எதிராகச் சில சதிகள் நடக்கின்றன.
இறுதியில் முத்தையா என்ன ஆனார்? அவரது சகோதரிகள் தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்தனரா? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’வின் மீதி.
உண்மையைச் சொன்னால், ஒரு ‘மைண்ட்லெஸ் காமெடி’ ஸ்கிரிப்டுக்கு இது போதுமானது தான். ஆனால், அதனைக் காட்சிப்படுத்திய வகையில் நம்மை ரொம்பவே சோதித்திருக்கிறார் இயக்குனர் சாய் ராஜகோபால்.
ஏன் இந்த சோதனை?
‘மலபார் போலீஸ்’ படத்தில் நடித்தபோதே கவுண்டமணியின் தோற்றத்தைப் பார்த்து ‘ஷாக்’ ஆனவர்கள் அதிகம். முதுமையும் சில உடல்நலக் கோளாறுகளும் அதற்குப் பின்னிருந்தன. அதற்குப் பின் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’.
ஆனால், இந்த படத்தில் கவுண்டமணிக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும், அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க அவர் முயற்சிப்பதாகவும் கதை சொல்கிறார் இயக்குனர்.
அது துருத்தலாகத் தெரிந்தாலும், நாம் தியேட்டருக்கு செல்லக் காரணமாக இருப்பது ‘கவுண்டமணி’ மட்டுமே. அந்த எதிர்பார்ப்பினைப் பொய்யாக்க விடாமல், ஆங்காங்கே ‘கவுண்டர்’களை அவர் அள்ளிவிடுகிறார். ஆனால், அது படம் முழுக்கத் தெளிக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
அது மட்டுமல்லாமல், வயோதிகமான கவுண்டமணி திரையில் தோன்றும் காட்சிகளைப் பார்க்கிறபோது ‘ஏன் அவரை கஷ்டப்படுத்தி பார்க்கிறோம்’ என்கிற வருத்தம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
இந்த படத்தில் கவுண்டமணியோடு யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சந்தானபாரதி, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், செண்ட்ராயன், ரவி மரியா, ஓஏகே சுந்தர், வையாபுரி, கணேஷ்கர், முத்துக்காளை, போண்டாமணி என்று பலர் இதிலிருக்கின்றனர்.
ஹிமா பிந்து உட்பட ஆறு இளம் நாயகன், நாயகியர் இதிலிருக்கின்றனர்.
’அவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தருகிறேன் பேர்வழி’ என்று திரைக்கதை குதறப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டவற்றைக் காட்சியாக்கம் செய்தது இன்னும் மோசமாக இருக்கிறது.
அதனால் நல்ல பல நடிப்புக்கலைஞர்கள் இருந்தும், ’ஏன் இந்த சோதனை’ என்று கவுண்டமணி வாய்ஸில் நம்மை புலம்ப வைக்கிறது, ரொம்பவே சோதிக்கிறது. காத்தவராயனின் ஒளிப்பதிவு, ராஜா சேதுபது – நோயலின் படத்தொகுப்பு, சித்தார்த் விபின் இசை உட்படச் சிலரது தொழில்நுட்பப் பங்களிப்பும் கூட அதனைச் சரி செய்ய இயலவில்லை.
இயக்குனர் சாய் ராஜகோபால் ஏன் இப்படியொரு திரைப்படத்தை ஆக்கினார்? அவர் மனதில் இதற்குப் பதில்கள் இருக்கலாம். நிச்சயமாக அப்பதில்கள் நமது ஆற்றாமையைப் போக்காது.
இப்போது, மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். ’உங்களுக்கு கவுண்டமணி காமெடி பிடிக்குமா?’ ’பிடிக்கும்’ என்றாலும் சரி; ‘பிடிக்காது’ என்றாலும் சரி; ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை விட்டு விலகி நின்றால், பர்ஸில் ‘டெபாசிட்’ பறிபோகாமல் இருக்கும்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்