தற்போதைய தலைமுறையினர் ரசிக்கிற சில நடிப்புக் கலைஞர்கள். அவர்களைத் திரையில் வேறுவிதமாகக் காட்டவல்ல இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழு. வெவ்வேறு விதமான திரைப்படங்களைத் தருகிற தயாரிப்பு நிறுவனம்.
இவையனைத்தும் ஒன்றிணையும்போது, திரையில் எப்படிப்பட்ட மாயாஜாலம் நிகழும். அப்படிப்பட்ட எதிர்பார்ப்பினை உண்டுபண்ணியது ‘ப்ரோமான்ஸ்’ மலையாளத் திரைப்பட விளம்பர வடிவமைப்புகள்.
’வேறுபட்ட பாத்திரங்களின் வழியே நகர்கிற கதை’ என்பதைச் சொன்னது ட்ரெய்லர்.
ஏடிஜே என்கிற அருண் டி ஜோஸ் இயக்கியிருக்கிற இப்படத்தில் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், மஹிமா நம்பியார், சந்தோஷ் பிரதாப், கலாபவன் சாஜன், பரத் போபண்ணா உள்ளிட்ட பலரோடு ‘பிரேமலு’ புகழ் ஷ்யாம் மோகன் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
சரி, ‘ப்ரோமான்ஸ்’ படம் எப்படியிருக்கிறது?
’ப்ரோ மற்றும் ரொமான்ஸ்’ கதை!
’ஒரு கிராமத்துல ரெண்டு பிரதர்ஸ் இருக்காங்க. அந்த எல்டர் ப்ரோ கொச்சியில இருக்காரு. அவருக்கு 33 வயசு. கல்யாணம் ஆகலை. யங்கர் ப்ரோ ஊர்ல இருக்காரு.
கிட்டத்தட்ட 25 வயசுல இருக்குற அவரு, வெட்டியா இருக்காரு.
ஆனா, வேலை தேடுறதுக்குப் பதிலா வெளிநாடு போக ட்ரை பண்றாரு. அப்பா அம்மா முதல் ஊர்ல இருக்குறவங்க வரை எல்லோருமே ‘உன்னோட அண்ணன் மாதிரி நீயும் இருக்க வேண்டாமா’ன்னு சொல்றது அந்த யங்கர் ப்ரோவை கடுப்பாக்குது.
அதனால, எல்டர் ப்ரோவை நினைச்சாலே அவருக்கு பத்திக்கிட்டு வரும்.
அப்படிப்பட்டவர் தன்னோட எல்டர் ப்ரோ காணாம போயிட்டார்னு தெரிஞ்சதும், அவரைத் தேடி பயணப்படுறார். அந்தப் பயணத்துல அவரோட சில பேர் இணையுறாங்க.
அவங்க எப்படி அந்தத் தேடல்ல சம்பந்தப்படுறாங்க? அந்த எல்டர் ப்ரோவை யங்கர் ப்ரோவோட டீம் தேடிக் கண்டுபிடிச்சாங்களா? இதுதான் கதை’ என்று ’ப்ரோமான்ஸ்’ படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் அருண் டி ஜோஸ்.
சுருக்கமாகச் சொன்னால், இரண்டு ‘ப்ரோ’க்களையும் அதிலொருவர் சம்பந்தப்பட்ட ‘ரொமான்ஸ்’களையும் சுற்றிச் சுழல்கிறது இதன் திரைக்கதை.
இக்கதையின் முக்கியப் பாத்திரங்களை திசைக்கொன்றாக நிற்கும் வகையில் படைத்திருக்கிறார். அந்தப் பாத்திரங்களின் வார்ப்பும் ‘ரோடு மூவி’ பாணியில் நகரும் திரைக்கதையும் தான் ‘ப்ரோமான்ஸ்’ படத்தின் யுஎஸ்பி.
அசத்தும் ‘காஸ்ட்டிங்’!
விதவிதமான பாத்திரங்களை வடிவமைத்த கையோடு, அதற்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளையும் தேர்ந்தெடுத்த வகையில் அசத்துகிறது ‘ப்ரோமான்ஸ்’. அந்தக் காஸ்ட்டிங் தான் இப்படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.
நகரத்தில் ஏமாற்றுக்காரனாகவும் கிராமத்தில் நல்ல பிள்ளையாகவும் அறியப்படுகிற ஷிண்டோ,
சட்டென்று ஆத்திரப்படும் பிண்டோ, அதே தொனியில் தனது கோபத்தை வெளிப்படுத்துகிற ஐஸ்வர்யா, தான் ஒரு அம்மாஞ்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிற ஷபீர்,
பெரிய கேங்க்ஸ்டர் ஆகத் தன்னை கருதுகிற கூரியர் பாபு, ‘என்னோட ஹேக்கிங் கெபாசிட்டி பெருசு’
எனும் ஹரிஹர சுதன் என்று இக்கதையில் மையப்பாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் அருண் டி ஜோஸ்.
இவை போதாதென்று தன்னைப் பற்றிய வீடியோ ஒன்று வைரலான காரணத்தால் பெரும் அவமானத்திற்குள்ளான ஒரு சப் இன்ஸ்பெக்டர், குடகு வட்டாரத்தைத் தெறிக்கவிடுகிற ஒரு அடாவடி இளைஞன், அவனைச் சுற்றியிருக்கிற அடியாட்கள், புத்தாண்டில் ‘வைஃப்’ செய்யத் துடிக்கிற இளைய தலைமுறை என்று இப்படத்தில் பல பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஷிண்டோ எனும் பாத்திரத்தில் ஷ்யாம் மோகனும் அவரது சகோதரர் பிண்டோ ஆக மேத்யூ தாமஸும் நடித்திருக்கின்றனர்.
ஷபீர் எனும் பாத்திரத்தில் அர்ஜுன் அசோகனும், கூரியர் பாபு பாத்திரத்தில் கலாபவன் சாஜனும், ஹேக்கர் ஹரிஹரசுதன் ஆக சந்தோஷ் பிரதாப்பும், ஐஸ்வர்யா ஆக மஹிமாவும் நடித்திருக்கின்றனர்.
இது போக எஸ்.ஐ. பாத்திரமொன்றில் பினு பாப்பு, கூர்க் பகுதியில் வசிக்கும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாக பரத் போபண்ணா மற்றும் அம்பரீஷ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதனை அவர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால், இவர்களது நடிப்பு எப்படி என்பதைப் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நூல் பிடித்தாற்போலச் செல்லும் காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைக்கதையே இப்படத்தின் பலம். ஆனால், அவை தரும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
தொடக்கத்தில் ‘ரொம்ப ஸ்லோவா இருக்கே’ என்றெண்ண வைக்கும் திரைக்கதை, பின்பாதியில் ‘படு ஸ்பீடாக’ உணர வைக்கும். அதனை ஒரு உத்தியாகப் பயன்படுத்தியிருக்கிறது திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் செபாஸ்டியன், அருண் டி ஜோஸ் கூட்டணி.
போலவே, இப்படத்தில் ‘ட்ரெண்டி’யாக இசை கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பின்னணி இசை மட்டுமல்லாமல் பாடல்களும் துள்ளலை விதைக்கிறது.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு வெவ்வேறு களங்களைத் திரையில் காட்டியிருக்கிறது; அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றாடியிருக்கிறது.
முழுக்க கற்பனைக் கதை என்பதை உணர்த்தும் வகையில் சினிமாத்தனம் மிளிரக் கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் நிமேஷ் தன்னூர்.
ஆங்காங்கே ‘பிளாஷ்பேக்’ உத்தி தலைகாட்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கேற்றாற்போல ‘சஸ்பென்ஸ்’களை உடைக்கும் வகையிலான கதை சொல்லலுக்கு ஏற்ற வகையில் கனகச்சிதமாக அமைந்திருக்கிறது சமன் சாக்கோவின் படத்தொகுப்பு.
இவை போக, இன்றைய யுக இளசுகளின் ‘ட்ரெஸ்ஸிங் சென்ஸ்’ இப்படத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதற்கேற்றாற் போல ஆடை வடிவமைப்பு கையாளப்பட்டிருக்கிறது.
ஒலி வடிவமைப்பு, டான்ஸ் மற்றும் ஆக்ஷன் கொரியோகிராஃபி, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
இந்தப் படத்தில் குறைகள் இருக்கின்றனவா என்றால் ‘ஆம்’ என்றுதான் சொல்ல முடியும்.
‘ரொம்ப தட்டையா, வெறுமையா, பெரிதாக சிரிக்க முடியாத வகையிலான காட்சிகள் இதில் அதிகம்’ என்று சிலர் சொல்லலாம்.
சில பாத்திர வார்ப்புகள் செயற்கையாகத் தெரியலாம். ’ஷிண்டோ எங்கே’ எனத் தேடலை மையமாகக் கொண்ட திரைக்கதை சிலருக்கு போரடிக்கலாம்.
’பின்பாதி அளவுக்கு முன்பாதி இல்லை’ என்றும் சிலர் சொல்லலாம். இது போன்ற கருத்துகள் நிச்சயம் இப்படத்தின் பலவீனங்களைக் காட்டும்.
அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் இந்தப் ‘ப்ரோமான்ஸ்’. காமெடி, த்ரில்லர், ஆக்ஷன், ரொமான்ஸ், ட்ராமா என்று இதில் நிறைய வகைமைகளுக்கான காட்சிகள் அடங்கியிருக்கின்றன.
படம் பார்த்து முடியும்போது கணிசமாக ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களை தருகிறது இப்படம். இதைவிட வேறென்ன வேண்டும் என்பவர்கள் தாராளமாக ‘ப்ரோமான்ஸ்’ பார்த்து ரசிக்கலாம்!
-உதயசங்கரன் பாடகலிங்கம்.