அருமை நிழல்:
மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா’.
படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அள்ளி முடித்த கொண்டை முடியும் கடுக்கணும் அணிந்து அசல் சோழவந்தான் கிராமத்தானின் உடல்மொழியை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுப்பதிலிருந்து வேட்டியை வரிந்து கட்டி சிலம்பு சுற்றுவதிலிருந்து பஞ்சாயத்து தலைவராக தீர்ப்பு சொல்லும் இடத்திலும் கம்பீரமான தோற்றத்தில் வலம் வருவார்.
தமிழ் திரைப்பட குத்து பாடல்களில் தனியிடம் பிடித்த ‘என்னடி ராக்கம்மா’ பாடலுக்கு அவரின் உடல் அசைவுகள் குறிப்பாக கேமராவுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டே இசைக்கேற்றவாறு அவர் பின்புறம் கால்களை உயர்த்தி ஆடும் நடன அசைவுக்கு பலத்த கைதட்டல்கள் விழும்.
வீட்டை நவீனப்படுத்துகிறேன் என்று மனைவியாக வரும் ஜெயலலிதா, தன் வீட்டு வாசலில் இருந்த கலப்பையை பின்பக்கம் வீசிவிட நான் கும்பிடற சாமியை விட கலப்பைத்தான் பெரிசு என குரல் உயர்த்தும்போது உண்மையான விவசாயியை கண் முன் நிறுத்துவார்.
இறுதிக் காட்சியில் தமிழ்ப் பண்பாட்டு நாகரீகத்தைப் பற்றி விளக்குவது அவரது நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருப்பார்.
படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் முக்கியமானவர்கள்.
‘யாரிடம் குறை இல்லை.. யாரிடம் தவறில்லை?’ எனக் கேள்வி எழுப்பி ‘பிரிவு ஒரு தீர்வில்லை’ என்பார் கவிஞர்.
‘எல்லோருக்கும் ஊர்கோலம் இரண்டு தரம்.. அதில் ஒரு கட்டம் முடிந்ததடி’ என்கிற வரிகளில் நாயகனின் விரக்தியைப் பேசுவார் மெல்லிசை மன்னர்.
தனது பங்கிற்கு ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான இசையை கொடுக்க படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களின் வரலாற்றில் அதிகபட்ச வசூலைப் பெற்ற ‘பட்டிக்காடா பட்டணமா’ மதுரை மாநகரில் வெள்ளிவிழா கண்டது.
இந்த பட்டிக்காடா பட்டணமா? படப்பிடிப்பில் நடிகர் திலகத்துடன் இயக்குநர் மாதவன் மற்றும் கதாசிரியர் பாலமுருகன் இருக்கும் காட்சி.
நன்றி: முகநூல் பதிவு