நூறாண்டு காலம் உலகை ஆட்சி செய்த ‘வானொலி’!

பிப்ரவரி – 13 : உலக வானொலி தினம்

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.நா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.

2012ம் ஆண்டில் இருந்து ‘உலக வானொலி தினம்’ கொண்டாடப்படுகிறது. இன்று உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செய்திகளை கூட நொடிகளில் தெரிந்து கொள்கிறோம். அதிலும் ஏஐ தொழில்நுட்பம் இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.

இன்று மொபைலும் அதில் கொஞ்சமாக டேட்டாவும் இருந்தால், சகல தகவல்களையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் கண்டறியப்பட்ட வானொலி, இன்றும் மக்கள் மனதில் தனியிடத்தினை தக்க வைத்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்திலும், உலகின் அதிக மக்களை சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது. ‘வானொலியின் தந்தை’ என்று இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி அழைக்கப் படுகிறார்.

இவரால் 1895-ல் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம், 1901-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சரியாக 26 வருடங்கள் கழித்து 1927ம் ஆண்டு, இந்தியாவின் மும்பை, கொல்கத்தா நகரங்களில் வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து 1936-ல் ஒன்றிய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ், நிறுவப்பட்டு பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட பிரசார் பாரதி அங்கமாக மாறியது.

ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் 208 ஒலிபரப்பு நிலையங்களோடு, ‘அகில இந்திய வானொலி’ நிலையம் செயல்பட்டு வருகிறது.

1956ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ‘அகில இந்திய வானொலி’ ஆகாஷ்வாணி என்று அழைக்கப்படுகிறது. அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக என்பதே ஆகாஷ் வாணியின் குறிக்கோளாகும். இது உலகின் மிகப்பெரிய இரண்டாவது வானொலி நெட்வொர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் ‘ஆல் இந்திய ரேடியோ’ செய்திகளுக்கு இன்றும் தனிப்பட்ட வரவேற்பு உள்ளது. தற்போது தனியார் வானொலிகள் எக்கச்சக்கமாக பெருகி விட்டாலும் கூட, கோடை பண்பலை, எஃப்எம் ரெய்ன்போ ஆகிய அரசு வானொலிகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வானொலி தன்னுடைய சேவையை, மக்களுக்காக வழங்கி வருகிறது.

தொழில்நுட்பம் வளர,வளர அதற்கு ஏற்றவாறு, வானொலி தன்னுடைய வடிவத்தையும் மாற்றி அமைத்துக்கொண்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.

சாதாரண செல்போன் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் வரை வானொலி இருப்பதால், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களும் வானொலி கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

செய்திகள் மட்டுமின்றி பாடல்கள் ஒளிபரப்பு, காலநிலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பு, கலைகளை ஊக்குவிப்பது என பல்வேறு செயல்பாடுகள் வானொலி மூலம் மேற்கொள்ளப் படுகின்றன.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாம், உயிர் தியாகம் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் போராடி, நமக்கான சுதந்திரத்தை 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பெற்றோம்.

இந்த பொன்னான செய்தியை லட்சக்கணக்கான மக்களுக்கு, தன்னுடைய குரல் மூலமாக அறிவித்தவர் ஆர்.எஸ்.வெங்கட்ராமன்.

செய்தி வாசிப்பாளரான வெங்கட்ராமன் ஆல் இந்தியா ரேடியோவின் தென்கிழக்கு ஆசிய சேனலில், இந்தியா விடுதலை பெற்ற ‘தித்திப்பான’ செய்தியை 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் அறிவித்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே இந்திய மக்களுக்கு இந்த வரலாற்று சிறப்பு மிக்க செய்தியை, முதலில் சொன்னவர் குணச்சித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் ஆவார்.

‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் மூலம், அதிகாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு இந்த நற்செய்தியை பூர்ணம் விஸ்வநாதன் அறிவித்தார்.

டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகி வந்த அதிகாலை 5.30 மணி தமிழ்ச் செய்தியில், ”ஆல் இண்டியா ரேடியோ.. செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது”, என்று தேச வரலாற்றின் முக்கியத் திருப்பத்தைச் செய்தியாக, ஆனந்த கண்ணீரோடு அறிவித்தார்.

இதற்காக இந்திய சுதந்திரத்தின் பொன் விழாவைக் கொண்டாடியபோது, பூர்ணம் விஸ்வநாதனுக்கு கௌரவம் செய்து, சென்னை வானொலி நிலையம் அவருக்கு விழா எடுத்து கவுரவித்தது.

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரும் நாட்டில், 78 ஆண்டுகளுக்கு முன்னர் நாடு சுதந்திரம் அடைந்த செய்தியை ஒரே நாளில், மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்தது என்பதே வானொலியின் சாதனையாகும்.

இன்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் கொண்டு சேர்க்க, வானொலியே முதன்மையான தொழில்நுட்பக் கருவியாக திகழ்கிறது.

எத்தனையோ கண்டுபிடிப்புகள் காலப்போக்கில் மறைந்து, மரித்துப்போய் விடுகின்றன. ஆனால் இரு நூற்றாண்டுகளாக ஒரு பேரரரசனைப் போல இன்றும், கம்பீரமாக இந்த உலகினை வானொலி ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • நன்றி : சத்யம் இதழ்
You might also like