மக்கள் மொழியே மருதகாசியின் வழி!

தமிழ்த் திரைப்பாடலில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, மண் வாசனையை வீசச் செய்தவர், திரைக்கவித் திலகம் அ.மருதகாசி.

ஐம்பது, அறுபதுகளின் இசையமைப்பாளர்களும் நட்சத்திரங்களும் இவருடைய வரிகளுக்காக வரிசையில் காத்திருந்தார்கள்.

அப்படிப்பட்டவரின் மகனான மருதபரணி தமிழ் சினிமாவில் கதை, வசனகர்த்தாவாக முத்திரை பதித்தவர். சுமார் ஆயிரம் படங்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர்.

மருதகாசி நூற்றாண்டின் நிறைவில் அவரது தந்தையார் குறித்து மருதபரணி உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…

விவசாயம், விவசாயி தொடங்கி உழைப்பின் மேன்மையை, கிராமிய வாழ்வின் சித்திரங்களை ஆழமும் அழகும் மிளிரும் எளிய மொழியில் பாடல் வரிகளாகப் பதிந்தவர் உங்கள் தந்தையார். இந்த ஈடுபாட்டின் பின்னணிக்குக் காரணம் என்ன?

அடிப்படையில் அவர் ஒரு விவசாயி என்பதே முக்கிய காரணம். கொள்ளிடம் ஆற்றின் அக்கரை தஞ்சை மாவட்டம் என்றால், இக்கரை திருச்சி மாவட்டம். அங்கே பழுர் மேலக்குடிக்காடு என்ற விவசாய கிராமத்தில் அய்யம்பெருமாள் – மிளகாயி தம்பதியின் மூன்றாவது பிள்ளையாக 13.02.1920-ல் பிறந்தவர்.

எனது தாத்தா 35 ஏக்கர் விவசாய நிலம் கொண்ட நிலச்சுவான்தார். கிராமத்து நாட்டாமையாகவும் முன்சீப்பாகவும் இருந்தவர்.

தனது மகனைச் சிறந்த கல்விமானாக ஆக்கியவர். பரிசலில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்துசென்று, அக்கரையில் நிறுத்தப்பட்டியிருக்கும் வில்லு வண்டியில் மகனை ஏற்றி கும்பகோணத்துக்கு தொடக்கக் கல்வி பயில அனுப்பினார்.

நகராட்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும் பின்னர் அங்குள்ள சிறு மலர் உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு வரையும் படித்தார். அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் ராஜகோபால்.

இவர் தமிழ்த் திரையுலகின் முன்னோடிப் பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் சகோதரரும் எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி வி.என்.ஜானகியின் தந்தையுமான ராஜகோபால் அவர்கள் இவரிடம்தான் முறையான தமிழ் இலக்கணப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

எனது பாட்டி மிளகாயி அம்மாள், பாடல்களை இட்டுக்கட்டிப் பாடுவதில் வல்லவர். தாயாரின் இந்தப் பாட்டுத் திறன் மகனைப் பற்றிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. ஒரு மகனாக நான் அவதானித்தவற்றைக் கூற விரும்புகிறேன்.

அப்பா திரையில் பாடல் எழுத வந்த காலகட்டத்தில், புராண, இதிகாசங்களின் ஆதிக்கத்தால், திரைப்பாடல்களில் சமஸ்கிருத வார்த்தைகள் மலிந்திருந்தன.

அவற்றைத் தவிர்த்து மக்கள் புழங்கும் மொழியிலிருந்து எளிய சொற்களை எடுத்தாண்டது அவரது வெற்றியையும் வீச்சையும் உறுதிப்படுத்தியது.

‘மக்களைப் பெற்ற மகராசி’யில் ‘மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி’ பாடலில் ஒவ்வொரு ஊருக்கும் உரிய மண்ணின் சிறப்பை அவர் கூறியிருப்பார்.

அதே பாடலில், ‘சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு’ என்று கிராமிய வாழ்க்கை முறையின் முக்கியக் கூறு ஒன்றை வெளிப்படுத்தியிருப்பார்.

மக்களின் மொழியே அப்பாவின் வழி. அறுபதுகளின் இறுதிவரை 21 விவசாயப் பாடல்கள்தான் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் 17 பாடல்களை அப்பா எழுதியிருக்கிறார்.

‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே.. என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே’ என்று எழுதியிருக்கிறார்.

அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை, அவரது இந்த வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். வளர்ச்சியின் பெயரால் நம் விளைநிலங்களைத் தொழிற்சாலைகளுக்கும் வீட்டுமனைகளுக்கும் கொடுத்துவிடக் கூடாது.

சந்திப்பு: ஆர்.சி.ஜெயந்தன்

– நன்றி: இந்து தமிழ் திசை

You might also like