வாழ்வின் பிம்பத்தை எல்லாக் கோணங்களில் இருந்தும் அலசும் நூல்!

நூல் அறிமுகம்: இடமிருந்து எட்டாம் விரல்

கவிஞர் சாய் வைஷ்ணவி வாழ்வு குறித்த உணர்வெழுச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எழுத்தை உடையவர். அவரது இரண்டாவது தொகுப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது.

மீறல்களின் எல்லை எதுவரை என்பதையும் மகிழ்ச்சி தருகிற அனைத்துமே நேர்மறையான மீறல் அல்ல என்பதையும் கூடவே அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஒரு பெண்ணின் வலி, வாதை, துக்கம் ஆணாதிக்கத்தின் அடக்குமுறை ரூபங்கள், வாழ்வு பற்றிய பிரதிபலிப்பு, சமூகம் உருவாக்கிய ஒவ்வாமை, காதலும் காதல் நிமித்தமும் என வாழ்வின் பிம்பத்தை எல்லா கோணத்திலிருந்தும் அலசுகிறார் சாய்வைஷ்ணவி.

அதைப் பிராச்சார நெடி தவிர்த்து கலைத்துவம் குறையாமல் கவித்துவமாக முன்வைக்கிறார். அதனாலேயே இந்தத் தொகுப்பில் தன் இருப்பைத் தக்கவைத்து கவிதை வெளியில் மறுதலிக்க முடியாத இடத்திற்கும் முன்நகர்கிறார் சாய்வைஷ்ணவி.

புரட்சி மற்றும் மாற்றம் குறித்த கவிதையின் கூறுகள் பேசுகின்ற மொழி கோட்பாடுகளாகவும், தகவல்களாகவும் மட்டும் இல்லாமல் கவிப்பொருளுக்கான அழகியலை எந்தளவு ஒருங்கமைத்து வெளிவந்திருக்கிறது என்பது முக்கியம்.

வலசை போகும் விமானங்கள் என்கிற முதல் தொகுப்பிலிருந்த இப்போக்கை இதிலும் கவனமாகக் கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கேள்விகள் எதுவுமின்றிக் கடைபிடித்து வருகின்ற பாரம்பரிய நடைமுறைகளை தற்கால வாழ்வில் கடைபிடிக்கையில் நேர்கிற சிரமங்கள், அவை தேவையற்றவை எனத் தெரிந்தபின்னும் அவற்றைப் புறக்கணிப்பதில் நேர்கிற அபத்தங்கள் ஆகியவற்றையும் பல கவிதைகள் போட்டுடைக்கின்றன.

எழுத்தைப் பொறுத்தவரை இலக்கியக்கூறுகளை மிகையற்றுக் கவிதையில் பொருத்துகிற முக்கிய செயல்பாடும் இங்கு நன்றாகக் கைவந்திருக்கிறது.

கவிதையின் போக்கில் எழுத்தின் பரப்பும், உட்பொருளும் ஒன்றையொன்று பாதிக்காத வண்ணம் வெளிப்படுகிற உத்தியே தொடர்ந்து வாசிப்பாளனை ஈர்க்கிற அம்சங்கள்.

உதாரணமாக,

அலை சறுக்கும்
மழைக்காலத்து சேற்றுத் தரைகளில்
மிதந்து வரும் மகிழுந்திலிருந்து

மனிதச் சாயலில் இறங்கியவன்…

எனத் தொடங்குகிற கவிதை.

பல கவிதைகளில் இப்பண்பு சீராக அமைந்திருக்கிறது.

மற்றபடி அடித்தட்டு, மிடில்கிளாஸ் மக்களின் பொருளாதாரம் குறித்தான மனோபாவங்கள், அவற்றை அடைவதில் உள்ள சிரமப்பாடுகள் தொடர்ந்து அங்கங்கே வெளிபடுகின்றன.

சில கவிதைகள் பேசுகிற கருத்தியல் சார்ந்த விஷயங்கள் நுண்ணிய அவதானிப்பைக் கொண்டவை.

விவரணையை விட காட்சி அனுபவங்கள் தருகிற உணர்வுகள் அலாதியானது எனும்போது இந்நூலின் வாசிப்பு தருகிற வெவ்வேறான கேள்விகள் நவீன உலகுக்குத் தேவையென நினைக்கிறேன்.

தொகுப்பில் மிகப்பிடித்த இரண்டு கவிதைகள் மட்டும் இங்கே.

மூடிய கழிவறையிடுக்கில்
மூடாத அங்கங்கள்
சத்தமிடாமல்
ஒற்றைக் கண்ணால் ஊடுருவினால் ஏதும் புலப்படலாம்.
கண்களால் புணர்பவர்களே..
அவள் தேம்பும் ஒலியும் கேட்கிறதா?

 

வாழ்ந்தோய்ந்த முதிர்சிறகு
கூடுவிட்டு உயிர் பிரிகிறது
அது
கீழ்நோக்கிச் செல்வதாய் தான் தெரியும்
எல்லாரின் சொர்க்கமும் மேலிருப்பதில்லையே.

– ந.சிவநேசன்

*******

நூல்: இடமிருந்து எட்டாம் விரல்
ஆசிரியர்: சாய்வைஷ்ணவி
வாசகசாலை பதிப்பகம்
விலை: ரூ. 152/-

You might also like