நறுமுகையே… நறுமுகையே…!

திரையிசைப் பாடல்களைப் பொறுத்தவரை, வித்தியாசமான குரல்கள் சட்டென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

அதேநேரத்தில், தொடர்ச்சியாக ஒலிக்கையில் சலிப்பு தட்டாத வகையில் சுவாரஸ்யத்தை அள்ளித்தரும் வகையில் அந்தக் குரல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட குரல்களே ‘என்றென்றும் இனிமை’ என்று போற்றத்தக்க சாதனைகளைப் படைக்கும். அந்த வகையில் இடம்பெறத்தக்கவர் பாம்பே ஜெயஸ்ரீ.

நல்ல உயரமும் உடல்வாகும் கொண்ட பெண் ஒருவர், லேசாக ஆண்மை தொனிக்க ‘தோழா சௌக்கியமா’ என்று கேட்கும் வகையில் ஒலிக்கவல்லது பாம்பே ஜெயஸ்ரீயின் குரல்.

அதேநேரத்தில், தனிமையில் இருக்கும் ஆண், பெண் மனங்களோடு உரையாடுவது போன்று அமைந்திருப்பது.

அது எப்படிப்பட்டது என்பதை அறிய, ‘மின்னலே’ படத்தில் வரும் ‘வசீகரா’ பாடலொன்றே போதும்.

கற்றலில் ஆர்வம்!

ஜெயஸ்ரீயின் பெற்றோர் பெயர் சுப்பிரமணியம் – சீதாலட்சுமி. கொல்கத்தாவில் அவர்கள் வசித்தபோது, அங்கு பிறந்தவர் ஜெயஸ்ரீ. லால்குடி ஜெயராமன், டி.ஆர்.பாலாமணி போன்ற சங்கீத உலகைச் சேர்ந்த மேதைகளிடம் பாட்டு கற்றவர்.

வெறுமனே வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல் வீணை இசைப்பது, இந்துஸ்தானி இசை கற்பது, பரதநாட்டியம் ஆடுவது என்று வெவ்வேறு விஷயங்களை முயன்று பார்த்தவர்.

வணிகவியலில் பட்டம் பெற்ற இவர், டெல்லியிலுள்ள கந்தர்வ மகாவித்யாலயாவில் இசைப்பிரிவில் பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

இந்த கற்றல் ஆர்வமே பின்னாட்களில் அவரது சாதனைப் பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

எட்டு திசையிலும் பாட்டு!

1982ஆம் ஆண்டு இருபதுகளில் இருந்தபோது ஜெயஸ்ரீயின் மேடை அரங்கேற்றம் நிகழ்ந்தது. அந்த காலகட்டத்தில் சென்னையிலுள்ள கர்நாடக இசைக் கச்சேரிகளில் மட்டுமல்லாமல் திரையிசையிலும் தனது குரலை ஒலிக்கச் செய்ய விரும்பினார்.

அதற்கு முன்னோட்டமாக, ‘அருள் தரும் அபிராமி’ பக்திப்பாடல் தொகுப்பைப் பாடினார். அதனைத் தொடர்ந்து ‘தம்பதிகள்’ திரைப்படத்தில் 4 பாடல்களைத் தந்தார். இவ்விரண்டுக்கும் இசையமைத்தது எம்.எஸ்.விஸ்வநாதன்.

பிறகு, ஏனோ திரையிசைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு கர்நாடக இசைக்கச்சேரிகளில் கவனம் செலுத்தினார்.

1994ஆம் ஆண்டு ‘வியட்நாம் காலனி’யில் இடம்பெற்ற ‘கையில் வீணை ஏந்தும்’ பாடலின் வழியே மீண்டும் திரைத்துறையில் நுழைந்தார்.

ஆனால், அப்பாடல் கதையோட்டத்தில் கலந்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

அதனால், பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.

‘அமைதி நிலவட்டுமே’ என்பது போன்று உன்னிகிருஷ்ணன் குரல் ஒலிக்க, ‘இனிமேல் எப்போதும் ஆர்ப்பரிப்புதான்’ என்பதாக ஒலிக்கும் ஜெயஸ்ரீயின் குரல்.

கிட்டத்தட்ட ‘ஏய்.. என்ன..’ என்று தனது மனதுக்குப் பிடித்தவனை அதட்டுகிற பெண்ணின் மனதை, உடல்மொழியை கண் முன்னே நிறுத்தக்கூடியது.

அந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு லவ் டுடே, கண்மணி ஒரு கவிதை, ஜேம்ஸ்பாண்டு, பாரதி படங்களில் பாடுகிற வாய்ப்புகளைத் தந்தது.

அந்த பாடல்களை எல்லாம் மறக்கடிக்கிற வகையில், மீண்டும் மீண்டும் கேட்கிற வகையில் அமைந்தது ‘வசீகரா’.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அந்தப் பாடலைப் பாடியபிறகு, ‘பாம்பே ஜெயஸ்ரீ வேறென்ன பாடல்களைப் பாடியிருக்கிறார்’ என்று தேடத் தொடங்கியது ரசிகர் கூட்டம்.

அதனைத் தொடர்ந்து ‘முதல் கனவே’, ‘தீண்டத் தீண்ட’, ‘ஒன்றா இரண்டா’, ‘மலர்களே’, ‘சுட்டும் விழிச்சுடரே’, ‘உயிரே என் உயிரே’, ‘பார்த்த முதல் நாளே’, ‘உப்பு கல்லு’, ‘மின்னல்கள் கூத்தாடும்’, ‘யாரோ மனதிலே’ என்று தனியாக ‘பிளேலிஸ்ட்’ இடும் அளவுக்கு நீண்டது அவரது பாடல் வரிசை.

தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களில் பாடியிருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ. அந்த எண்ணிக்கை மொத்தமாக 125-ஐத் தொடும் என்கிறது விக்கிபீடியா சொல்லும் கணக்கு.

உருவத்திலும் சரி, இசையார்வத்திலும் சரி, பாம்பே ஜெயஸ்ரீயின் வாரிசு என்று உணர வைக்கிறார் அவரது மகன் அம்ரித் ராம்நாத். கடந்த ஆண்டு இவர் ‘வருஷங்களுக்கு சேஷம்’ எனும் படத்திற்கு இசையமைத்தார்.

அதில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகுதே’ பாடலை எழுதியவர் பாம்பே ஜெயஸ்ரீ. அதனை அம்ரித் உடன் இணைந்து சிந்தூரா ஜிஷ்ணு பாடியிருக்கிறார்.

அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஜெயஸ்ரீயே பாடுகிற எண்ணம் மனதுக்குள் தோன்றும். காரணம், இதுநாள்வரை தனது குரல் வழியே அவர் நம் மனங்களில் உருவாக்கியுள்ள ‘கற்பனைக் கோட்டை’.

பாம்பே ஜெயஸ்ரீயின் பாடலைக் கேட்டு இன்புற்றபிறகு, அந்தக் கோட்டையின் ஒரு பலகணியில் நின்றுகொண்டு ‘எப்படி ரசிக்கிறீர்கள்’ என்று அவர் கேட்பது போன்ற தொனி அந்தக் குரல் ஒலித்து முடிந்தபிறகு மிஞ்சியிருக்கும்.

சங்ககாலத்தில் பாலின சமத்துவத்தை கடைப்பிடித்த ஒரு பெண்ணின் குரல் என்று எண்ண வைத்த ‘நறுமுகையே’ முதல் ஜெயஸ்ரீயின் பல பாடல்களில் அதனை அனுபவித்துணர முடியும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக அந்த மாயாஜாலத்தை அனுபவித்து உணர்கிற வாய்ப்புகளைக் குறைவாகவே தந்திருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ.

அறுபதுகளைக் கடந்து வாழ்வின் அடுத்த சிகரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் கையோடு மீண்டும் அந்த மாயாஜாலத்தை தொடர்ந்து தர வேண்டும் என்பதே நம் விருப்பம்!

மாபா

You might also like