பள்ளிக் கல்வியில் மாற்று முயற்சி!

டாக்டர் க. பழனித்துரை

பள்ளிக் கல்வியில் உலகில் பல நாடுகளில், குறிப்பாக இந்தியா, ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் எண்ணிலடங்கா ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

தற்போது இந்தியாவில் பெரும் தொடர் ஆய்வுகளை மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள் புது முறைகளுடன் செய்து வருகின்றனர்.

பள்ளிக் கல்வியில் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆய்வுக் கூடங்களாக உருவாக்கி ஆய்வு செய்து வருகின்றன இந்தப் பல்கலைக்கழகங்கள்.

இந்த ஆய்வுகளை முன்னெடுத்துச் செய்பவர்கள் நோபல் பரிசு பெற்ற பெரிய அறிஞர்களும் கல்வியாளர்களும்தான். அந்த ஆய்வுகளில் வரும் முடிவுகளை வைத்து மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மாநில அரசாங்கங்களுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகின்றன.

பல ஆலோசனைகளை மாநில அரசுகளும் ஏற்று நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டு வருகின்றன. காரணம் கல்வியின் தரம் குறைந்து வருவது ஒரு நாட்டின் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் சிதைவை ஏற்படுத்தும் என்பதால் அதைச் சரி செய்ய அரசு தொடர்ந்து கவனித்து செயல்பட்டு வருகிறது.

இதற்கான நிதி உதவிகளை வெளிநாட்டு அமைப்புக்களும், மத்திய மாநில அரசுகளும் செய்து வருகின்றன. நம் நாட்டில் ஆரம்பக்கல்வியின் தர ஆய்வு என்பதை பிரிதம் நிறுவனம் செய்து ஏசர் அறிக்கை தொடர்ந்து வெளியிட்டு வருவதை அனைவரும் அறிந்ததே.

நம் கல்வியின் தரத்தை அறிய இன்று நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அந்த அறிக்கை மட்டும்தான், இன்றுவரை அந்த அறிக்கைதான் நமக்கு வழிகாட்டுகிறது. இன்று அந்த ஆய்வு முறைமையையே பலர் கேள்விக்குறியாக்கி வைத்திருக்கின்றனர்.

அறிவுத் தளத்தில் இவையெல்லாம் சாதாரண நிகழ்வுகளாக இருந்தபோதும், இதற்கு மாற்று என்பது அனைத்துத் தரப்பும் ஏற்கும் அளவுக்கு ஒன்று உருவாக்கப்படவில்லை என்பதும் நிதர்சனமான உண்மையே.

கடைசியாக வந்த ஏசர் அறிக்கை என்ன கூறியது. 10-ம் வகுப்பு மாணவருக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை படிக்கத் தெரியவில்லை, கணிதம் போடத் தெரியவில்லை என்பதைத்தான்.

மாணவர் சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது என்று பெருமை பேசுவோம்.

இந்த சேர்க்கை புள்ளி விபரம் எந்தச் சாதனையையும் எதிர்காலத்தில் செய்யப்போவது கிடையாது. இது அரசியலுக்கு உதவலாம். ஆனால் எந்த விதத்திலும் சமூக மேம்பாட்டுக்கு இந்த எண்ணிக்கை தரத்தில் இல்லை என்றால் உதவாது.

இதுவும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்தச் சூழலை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு புதிய யுத்திகளை பல நிறுவனங்கள் இன்று தொடங்கியுள்ளன.

சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்கும் திறனைக் கூட்டிடவும், கற்கும் ஆர்வத்தை தூண்டிடவும், பல்வேறு ஊக்கத்தொகை தரும் திட்டங்கள் அரசாலும் தனியார் நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் இவை பற்றிய பெரும் விவாதம் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த ஊக்கத் தொகையை மாணவர்களின் கற்கும் திறன் உயர உயர அதிகரித்துக் கொண்டிருப்பது என்பது மாணவர்களை தற்போது ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த ஊக்கத் தொகையைக் கொடுக்கும் நிறுவனங்கள் அனைவருக்கும் கொடுப்பதில்லை.

ஏழை மாணவர்களுக்கு, கொடுக்கின்றார்கள். ஏழை மாணவர்கள் பொதுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிககும் மாணவர்களுக்கும் தருகின்றார்கள்.

இந்த வகை ஊக்கத்தொகை முற்றிலும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், கற்றல் திறன் கூட்டப்படுவதற்கும் கொடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு ஆய்வும் நடத்தப்பட்டு வருகின்றது. அது ஒரு வித்தியாசமான பரிசோதனை.

இந்த ஆய்வுக் கற்றலை ஊக்கப்படுத்துவது என்பது இரண்டாவதாக வைத்து சமூக நலம் பேணும் சமூகச் சிந்தனையும் ஒழுக்கத்தை பேணும் சிந்தனையையும் முன்னிலைப்படுத்தி குடிமக்கள் பண்பினை வளர்த்திட முனைகின்றது.

இது சற்று வித்தியாசமாக இருந்தாலும், இன்று அது தேவைப்படுகிறது. கல்வி என்பது காசு பார்க்க, அல்லது சம்பாதிக்க வித்தைக் கற்றுக் கொடுக்கும் கருவி என்று செயல்பட்டு சுயநலம் மிக்கவர்களாக படித்தவர்களை மாற்றுகிறது என்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இன்று பொது நலம் புறம் தள்ளப்பட்டு சுயநலம் முன்னின்று அறம் இழந்த வாழ்க்கைச் சூழலில் தோய்ந்திருப்பதால், மாணவர்களுக்கு சமூகப்பார்வையை கொண்டுவருவது காலத்தின் கட்டாயம். இதைச் செய்வது பெரும் தொண்டு நிறுவனமோ அல்லது பெரும் கார்ப்பரேட் நிறுவனமோ அல்லது நிதி நிறுவனமோ அல்ல.

தன்னார்வலர்கள் சிலர் இணைந்து நடத்தும் ஒரு மக்கள் இயக்கம். இவர்கள் நடத்தும் ஆய்வு அரசுப்பள்ளிகளில் மட்டுமே. பொதுவாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பகுதி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்றைய அரசுப்பள்ளிகள் பெரும்பாலானவை வசதிகளற்றதாக இருக்கின்றன. அங்கு தகுதிமிக்க ஆசிரியர்கள் இருந்தும் நல்ல கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நம் பெற்றோர்கள் தங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை தனியார் பள்ளிக்கு செலவிட்டு குழந்தைகளை படிக்க வைப்பதில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.

ஆசிரியர்களும் பொதுப்பள்ளியை தரம் உயர்த்துவது என் பொறுப்பு என எண்ணுவதில்லை. அதன் விளைவுதான் அவர்கள் குழந்தைகளையே தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்ற அவல நிலை தொடர்கிறது.

பொதுப்பள்ளியைச் சீரமைக்க பள்ளி மேலாண்மைக் குழுவை உருவாக்கி அதன் மூலம் தரம் உயர்த்த முடியுமா என்று அரசு தொடர்ந்து முயன்று வருகின்றது.

இருந்தும் பெரு வெற்றி பெற இயலவில்லை.

இருந்தும் இந்த அமைப்பு பொதுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரம் உயர்த்த செயல்படுவது தான் முக்கியம் என முடிவு செய்து தங்கள் ஆய்வினை பொதுப்பள்ளிகளில் நடத்துகின்றனர். இதற்கு அவர்கள் ஒரு கருதுகோள் வைத்துள்ளனர்.

பொதுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்த விதத்திலும் தரம் குறைந்தவர்கள் அல்ல. அங்கும் மாணிக்கம் போல் மாணவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களைக் கண்டு அவர்களுக்கு கடப்பாடுடன் ஒரு பார்வையை பயிற்சியின் மூலம் கொடுத்தால் அவர்களும் மிக உயர்ந்த பண்பு நலன்களுடன் லட்சிய மனிதராக உயர்ந்துவிடுவர் என்ற முடிவில் இந்த பரிசோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்தப் பரிசோதனைக்கு முதலில் உங்கள் பள்ளியில் உள்ள நல்ல மாணவர்களை எங்களுக்கு தாருங்கள் என்று ஆசிரியர்களிடம் கேட்டால் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களையும் நன்நடத்தை கொண்ட மாணவர்களையும் ஆசிரியர்கள் தருவார்கள். அவர்களிடம் ஒரு விடுமுறை நாளில் ஒரு குழு சென்று விவாதிப்பார்கள்.

அதில் ஐந்து அடிப்படை திறன்களை மையப்படுத்திக்கொண்டு விவாதிப்பார்கள். ஒன்று, கல்வியில் மாணவர்களின் திறன்; இரண்டு, மாணவர்களிடம் இருக்கும் தனித்திறன்; மூன்று, தலைமைத்துவப் பண்புகள்;

நான்கு தனிமனிதர்களுக்கு வேண்டிய நற்பண்புகள்; ஐந்து, மாணவர்களிடம் இருக்கும் சமுதாயக் கண்ணோட்டம் என்ற ஐந்து கூறுகளில் அவர்களுடன் கலந்துரையாடி இந்த ஐந்து கூறுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு விழா நடத்தி விருது வழங்குகின்றனர்.

அந்த விழாவை சிறப்பாக மாணவர்களுக்கு மட்டும் நடத்தாமல், மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து அந்த விழாவை ஒரு கருத்தரங்கம்போல் நடத்தி சிறப்பு விருந்தினர்களை அழைத்து மாணவர்களுக்கு உரையாற்றிடச் செய்து விருது வழங்குகின்றனர்.

அந்த நிகழ்வில் இந்த விருது எதற்காக என்பதனை அனைவருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தி விடுவர்.

இந்தக் குழந்தைகளை பெற்றோர்கள்முன் ஆசிரியர்கள் முன் பேச வைத்து அவர்களின் நற்பண்புகளையும், தனித்திறமைகளையும், தலைமைப் பண்புகளையும், சமூகப்பார்வை கொண்ட சிந்தனையையும் வெளிக்கொணரும்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரு மிகப்பெரிய உளவியல் மாற்றத்திற்கு ஆட்படுகின்றனர்.

அந்த மாணவர்களில் ஒரு சிலரை பொறுப்பேற்க வைத்து தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சியளிக்கும்போது அந்த மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதையும், நற்பண்புகள் வளர்வதையும், தலைமைத்துவம் மிளிர்வதையும், தனித்திறன் வளர்வதையும், நாட்டுச் சிந்தனை சமூகச் சிந்தனை மேம்படுவதையும் பார்க்க முடிகிறது.

ஒரு ஐந்து வருட காலத்தில் குறைந்தது 1000 மாணவர்கள் தயாரிக்கப்பட்டு அவர்கள் மதிப்பெண் வாங்குவதுதான் பிரதானம் என்பது பின் தள்ளப்பட்டு பொறுப்புமிக்க மாணவன், பொறுப்புமிக்க மகனாக, மகளாக பொறுப்புமிக்க குடிமகனாக குடிமகளாக சிந்திக்க பழக்கப்பட்டு விடுகிறார்கள்.

இந்த சிந்தனை மாற்றம் மாணவர்களிடம் வருவதால் மருத்துவம், பொறியியல் படிப்பதுதான் கல்வி, நீட் தேர்வு எழுதுவதுதான் குறிக்கோள் என்ற நிலை போய் எந்தப் படிப்பும் நாம் படிப்பதில் நிபுணத்துவத்துடன் இருந்தால் அந்தப் படிப்பு நமக்கு உயர்வினைத் தரும் என்ற புரிதலுக்கு வந்துவிடுகின்றனர்.

சமீபத்தில் மாணவர்களுக்கு ஒரு விருது வழங்கும் விழாவுக்குச் சென்று அந்த மாணவர்கள் கல்வி பற்றியும், சமூகம் பற்றியும், நாட்டைப் பற்றியும் விவாதித்ததைப் பார்த்தபோது நம் மாணவர்களுக்கு இருக்கும் திறனை, சமூகப்பார்வையை என்னால் பார்க்க முடிந்தது.

கியூபாவைப் பற்றியும் சிங்கப்பூரைப் பற்றியும், அங்கு உள்ள மேம்பாட்டு நிர்வாக அமைப்பு முறைகள் பற்றியெல்லாம் அவர்கள் விவாதித்தனர்.

நாட்டில் நடக்கின்ற அவலங்கள், அரசியல், கல்வி, மருத்துவம் என அனைத்தையும் பற்றி விவாதிக்கின்றனர்.

அப்படி அவர்கள் விவாதித்தபோது ஒருவர் கேட்டார். இவ்வளவு பிரச்சினைகளை பட்டியலிடுகின்றீர்களே, இதைச் சரி செய்வது யார்? என்று.

நான் நினைத்தேன் அரசாங்கம் என்று கூறுவார்கள் என. அவர்கள் கேள்வியைக் கேட்டவுடன் இந்த அவலங்களை சரி செய்ய நாம் தயாராக வேண்டும், நாங்கள் தயாராவோம் என்று பதில் தந்தனர். அது எப்படி என்ற கேள்விக்கு என் முன்னேற்றம் என் கையில்.

எனவே எனக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வேன், என் குடும்பத்தில் ஒரு பொறுப்புள்ள மகனாக மகளாக செயல்படுவேன். அடுத்து என் பகுதியின் மேம்பாட்டுக்கு நான் பொறுப்பேற்று செயல்படுவேன் என்றனர்.

ஒரு நாள் பயிற்சியிலேயே ஒரு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது தொடர் நிகழ்வானால் எவ்வளவு பெரிய மாற்றம் பிறக்கும் என எண்ணி அவர்களை தொடர்ந்து இணைப்பில் இருக்க வழிவகை செய்துள்ளனர் இந்த நிகழ்வினை நடத்துபவர்கள்.

இந்த மாணவர்களுக்கு பயிற்சியின் மூலம் எப்படியோ இந்த சிந்தனை மாற்றம் வந்திருக்கிறது.

இந்த நிகழ்வுகள் மூலம் சமூகக் கண்ணோட்டத்துடன் உருவாகும் மாணவர்களின் சிந்தனைத்திறன் சில சமயம் நம்மை வியக்க வைக்கிறது.

அவர்களில் பலர் மிகவும் எளிய குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றனர்.

ஆனால் அவர்களின் பார்வையும், தெளிவும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும், நமக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது.

இந்த மாணவர்களை தொடர்ந்து ஒரு ஐம்பது மாணவர்கள் ஒருங்கிணைப்புச் செய்து திறன் கூட்டிக்கொண்டே வருகின்றனர்.

இந்த மாணவர்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களும் உண்டு, பொறியியல் சேர்ந்தவர்களும் உண்டு. அப்படி கல்லூரிக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து லட்சிய சமுதாயம் படைக்கும் முயற்சியில் இயங்குவது பெரு நம்பிக்கையை நமக்குத் தருகிறது.

தினந்தோறும் நடக்கும் தாழ்ந்த அரசியலைப் பார்த்து சோர்ந்த நமக்கு இந்த மாணிக்க மாணவர்கள்தான் தங்கள் பார்வையாலும், சிந்தனையாலும் மிகப்பெரும் நம்பிக்கையை தருகிறார்கள்.

பொதுப்பள்ளியைப் பாதுகாப்பதும், மாணவர்களுக்கு திறன் கூட்டுவதும், பள்ளி மேலாண்மைக் குழுவை இயங்க வைத்து பொதுப்பள்ளிக் கூடங்களை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதுதான் இன்று நம் முன் நிற்கும் முதல் களப்பணி.

– டாக்டர் க. பழனித்துரை

You might also like