சுற்றிலும் ‘பொடிசுகள்’ கற்பனையுடன் அண்ணாந்து உட்கார்ந்திருக்க, வெவ்வேறு குரல் பாவங்கள் மாற, கண்கள் விரிந்து, முகம் அந்தந்த உணர்வுக்குப் போய் கதை சொல்வதும், அதை நேரில் கேட்பதும் அற்புதமான அனுபவம்.
கொஞ்சம் – அந்த அனுபவத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இது நடந்த கதை.
இருநூறு வருஷங்களுக்கு முன்பு
குதிரைப் படையும், காலாட் படையும் சேர்ந்து ஆயுதங்களுடன் தாக்க ஆரம்பித்துவிட்டன; ஒரே ஆரவாரம்; கூச்சல்; ஆங்கிலேயப் படையின் தாக்குதலுக்கு முன் திணறிப்போனது பாஞ்சாலங்குறிச்சி.
நெருங்கிவிட்டது படை. கோட்டையும் தகர்க்கப்பட்டுவிட்டது.
கட்டபொம்மனுக்கும், அவரது தம்பி ஊமைத்துரைக்கும் மற்ற சிலருக்கும் வேறுவழி தெரியவில்லை.
படைகளிடம் சரணடைவதை விட ‘தப்பிப்பதே மேல்’ என்று நினைத்து இன்னொரு புறத்தில் ஓடித் தப்பிக்கிறார்கள்.
பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியிலிருந்து தப்பித்துப் போன கட்டபொம்மன், ஊமைத்துரை உட்பட ஏழு பேர் கடைசியாக வந்து சேர்ந்தது அடர்ந்த ‘காளியாப்பூர்’ காட்டுப் பகுதிக்கு.
விதவிதமான மரங்கள் இருந்த அந்தப் பகுதி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்தது. கூப்பிடு தூரத்தில் திருக்களம்பூர் என்கிற சின்னக் கிராமம். அதற்குப் பக்கத்தில் குமார பட்டி கிராமம்.
ஆங்கிலேயப் படையை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சி மன்னரும், அவரது தம்பி ஊமைத்துரையும் வந்திருந்த செய்தி பரவியதும் அவர்களுக்குப் பல உதவிகள் காடு தேடி வந்தன; அவர்களது வீரம் பலருக்குப் பிடித்திருந்தது.
அதற்குள் தகவல் கசிந்து, ஆங்கிலேயக் கலெக்டரான லூசிங்டன், 1799, செப்டம்பர் 8-ஆம் தேதி புதுக்கோட்டை மன்னரான விஜயரகுநாதத் தொண்டைமானுக்குக் கடிதம் எழுதினார்.
“தப்பித்தவர்களை எப்படியாவது பிடித்துக் கொடுக்க வேண்டும்.”
புதுக்கோட்டையிலும் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிவிட்டது. பல வீரர்கள் பல பகுதிகளிலும் தேடுகிறார்கள். மும்முரமாக நடக்கிறது வேட்டை. (ஆதாரம்: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு; ஜெ.ராஜாமுகமது)
இனி கதையைத் தொடர்வது குமாரபட்டிக்காரர்கள்.
“மும்முரமாகத் தேடின செய்தி அறிந்ததும் திருக்களம்பூரில் பொறுப்பில் இருந்த முத்து வைரவருக்கு அவர்களை எப்படியாவது பிடித்துக் கொடுத்து மன்னரிடம் ‘நல்ல பெயர்’ வாங்க ஆசை.
அதனால் காட்டுக்குள் வேண்டப்பட்டவர் போலப் போய் தனது வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறார் முத்து வைரவர்.
சரியென்று சாப்பிடப் போயிருக்கிறார்கள் கட்டபொம்மனும், ஊமைத்துரையும்.
விருந்து நடந்து முடிந்ததும் அங்கிருந்தவர்கள் சூழ்ந்து, வந்தவர்களைத் தூண்களில் கட்டியிருக்கிறார்கள்.
பிறகு புதுக்கோட்டை மன்னருக்குத் தகவல் போய் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் தெருக்களில் அழைத்துப் போகப் ட்டபோது ஊரே கண் கலங்கியிருக்கிறது. காட்டிக் கொடுத்தவர்களைச் சபித்திருக்கிறது.
ஊர்க்காரர்கள் சொல்கிறதை நிரூபிக்கிற விதத்தில், கட்டபொம்மன் பிடிபட்டதும் தற்கொலைக்கு முயன்றதாகவும், இருந்தாலும், அவர்களைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதாகவும் கலெக்டர் லூசிங்டனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான்.
இது நடந்தது 24.09.1799.
பிடிபட்ட ஒரு மாதத்திற்குள் கயத்தாறுக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார் கட்டபொம்மன். ஊமைத்துரை பாளையங்கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.
இருநூறு வருஷங்கள் கடந்துவிட்டன இதெல்லாம் நடந்து. ஆனால், இன்னும் இந்தச் சம்பவத்தை ‘வடு’ மாதிரி கட்டபொம்மன், ஊமைத்துரை பிடிபட்ட காட்டிற்கு அருகிலிருக்கும் குமாரபட்டிக்காரர்கள் மறக்கவில்லை என்பதுதான் வரலாற்றை மீறின ஆச்சரியம்.
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதிக்குப் போகும் வழியில் இருக்கிற சிறு கிராமம் குமாரபட்டி. ஊரில் இருப்பது சுமார் இருநூறு குடும்பங்கள் தான்.
“எங்க கிராமத்தை ஒட்டி இருக்கிற காட்டிலேதான் அவங்க மறைஞ்சிருந்திருக்காங்க. காட்டிக் கொடுத்து அவங்களைப் பிடிச்சுக்கிட்டுப் போனபோது கிராமமே நொந்து போயிருக்கு காட்டிக் கொடுத்தவரைப் பற்றிப் பலரும் சாபம் கொடுத்ததால் அந்தக் குடும்பமே வாரிசில்லாமல் போயிடுச்சு.
அந்தக் காட்டை இன்னும் நாங்க புனிதமா நினைச்சு வழிபடுற இடமா வைச்சிருக்கோம்” என்று அழைத்துக் கொண்டு போனார்கள் ஊர்க்காரர்களான ஜெயராமனும், மாணிக்கமும்.
கிராமத்தில் பெரிய கண்மாய்க்கு அருகில் சட்டென்று நெருக்கமான அடர்த்தியுடன் பச்சைமயமான காடு.
“பல்லுகுத்தக் கூட சின்னக் குச்சி இங்கிருந்து எடுக்கமாட்டோம். இருநூறு வருஷமா இப்படியே தான் இருக்கு காடு” உற்சாகத்துடன் சொல்கிறார் வயதானவரான சிங்காரம்.
நூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வித்தியாசமான மரங்கள் உயரே எழுந்து நிற்கின்றன.
காட்டிற்கு நடுவே சின்னக்கோவில்: திரி சூலங்கள்; பக்கத்தில் துருப்பிடித்த நீண்ட அரிவாள்; வெண்கலமணி. ‘ஊமைத்துரை கோவில்’ என்று வழிபடுகிறார்கள் கிராம ஜனங்கள். மேற்கூரையில்லாமல் ‘காற்றாட’ இருக்கிறது கோவில்.
சித்திரை மாதத்தில் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலுக்காக ஒரு நாள் திருவிழா நடக்கிறது. அதில் வருடம் தவறாமல் போடப்படுகிற நாடகம் ‘கட்டபொம்மன்’.
“எந்தவிதமான ஆபாசமும் இல்லாமல் நாடகத்தை நடத்துவாங்க. ஒரு தடவை மாத்தி ‘மதுரை வீரன்’ நாடகத்தை நடத்த இருந்தப்போ ஊர்ல தீப்பிடிச்சிருச்சு. அதிலிருந்த கட்டபொம்மன் நாடகம் தான்.
எங்க ஊருக் காட்டிலே வந்து ஒதுங்கின மகராசன்களைச் சாமியாக் கும்பிடுறோம்” என்கிறார் ஊர்ப் பெரியவரான மச்சக்காளை.
சாதி உணர்வுகள் காலத்தில் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த மன்னரான கட்டபொம்மனும், அவரது தம்பிகளும் வந்து காட்டுக்குள் ஒளிந்திருந்ததையும், அவர்களுக்கு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அடைக்கலம் கொடுத்ததையும் பெருமையாகக் கருதி இன்று வரை அவர்கள் ஒளிந்திருந்த காட்டையே பாதுகாப்பது எவ்வளவு அருமையான விஷயம்?!
இதை உறுதிப்படுத்துகிற விதத்தில் சொல்கிறார் இந்தக் கிராமத்துக்கு அருகிலுள்ள மேலச் சிவபுரிக் கல்லூரி நூலகரான டாக்டர் ந. முருகேச பாண்டியன்.
“கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இந்தக் காட்டில் ஒளிந்திருந்ததை பல நூல்கள் ஆதாரத்துடன் சொல்கின்றன. இந்தக் கிராம மக்கள் இன்று வரை இந்தக் காட்டுடன் வைத்திருக்கிற உணர்வுபூர்வமான தொடர்பு வியப்புக்குரிய ஒன்று.
தேடி வந்தவர்களைப் பிடித்துக் கொடுத்த அரசுக்கு அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் காட்டைப் பாதுகாத்து, அவர்களையும் தெய்வங்களாக வணங்குவது தமிழர்களின் சாதிகளை மீறின ஒற்றுமையுணர்வை, வீரத்தின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது” என்றார் காட்டைச் சுற்றிப் பார்த்தபடி.
வந்தாரை வரவேற்கும் ‘தமிழகம்’ என்பதற்கு எவ்வளவு பசுமையான, அடர்த்தியான உதாரணம்?
கீச் கீச் என்று பறவைகளின் இரைச்சல் நிரம்பின காட்டிலிருந்து வெளிவந்து கப்பென்று வெளிச்சம் நம் முகத்தைத் தொடுகிறபோது நம் மனதை உறுத்துகிற விஷயம்:
இருநூறு வருஷங்களுக்கு முன்னால் மக்களிடம் இருந்த சாதி பேதமற்ற கரிசனம் – இப்போது ஏன் வரவர அபூர்வமாகிப் போய்விட்டது.
– மணா
2001-ல் பிரபல வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை.