பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!

கே.எஸ்.ரவிக்குமார். தொண்ணூறுகளில் உருவெடுத்த தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர். ‘தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்று அறியப்பட்டவர்.

எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், பி.வாசு வரிசையில் இடம்பெறுவாரா என்ற கேள்வியை எழுப்பியதோடு, பின்னாட்களில் அதற்கான பதிலையும் செவ்வனே தந்தவர்.

கமர்ஷியல் சினிமா படங்களை தந்தாலும், ‘டெக்னிகலி ஸ்ட்ராங்’ என்று திரையுலகம் பாராட்டும்படியாக இருக்கும் இவரது திரைப்படங்கள்.

அதனாலோ என்னவோ, சத்யராஜ் தவிர்த்து தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித் என்று பல நட்சத்திரங்களைக் கொண்டு படம் இயக்கியிருக்கிறார்.

‘நாட்டாமை’ உட்பட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாக நடிக்க வந்த இரண்டு, மூன்று வாய்ப்புகளைத் தான் தவறவிட்டதாகச் சில ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் குறிப்பிட்டிருந்தார்.

அதுவே, நட்சத்திர நாயகர்களைக் கையாள்வதில் ‘இயக்குநர்’ எவ்வளவு கெட்டி என்பதைச் சொல்லிவிடும்.

அந்த வரிசையில், அர்ஜுனை நாயகனாகக் கொண்டு கே.எஸ்.ரவிக்குமார் தந்த படம் ‘கொண்டாட்டம்’. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று இப்படம் வெளியானது.

வித்தியாசமான ‘நாயக’ வார்ப்பு!

கொண்டாட்டம் படத்தின் கதை வழக்கமான ஒன்று தான்.

நாயகன். அவருக்கு மூன்று நண்பர்கள். அவர்களது நலனுக்காக, வாழ்வின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் நாயகன்.

இரண்டு நண்பர்களுக்குத் தனக்குச் சொந்தமான அலுவலகத்தில் வேலை தந்திருக்கிறார். காதல் திருமணம் செய்த இன்னொரு நண்பனுக்காக, புதிதாக ஒரு வீட்டை வாங்கித் தருகிறார்.

‘உறவினர்கள் சூழ வாழ்வதே உயிரோடு இருப்பதற்கான அர்த்தம்’ என்ற கொள்கையில் உறுதியாக நிற்பவர் நாயகன். தாய், தந்தையை இழந்து வாடிய அனுபவங்களே அவரை அம்முடிவில் நிறுத்துகிறது.

அதனால், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று உணவுண்ணுவதும் உறங்குவதும் அவரது வழக்கமாக இருக்கிறது. போலவே, தன்னிடம் வேலை பார்ப்பவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவது அவரது இயல்பாக உள்ளது.

இப்படி ‘ப்ளஸ்’கள் பலவற்றைக் கொண்டிருக்கும் நாயகனின் ஒரே ‘மைனஸ்’. விளையாட்டு என்ற பெயரில் விபரீதமான விஷயங்களைப் பரீட்சிப்பது. அதனால், அவ்வாறு சோதனைக்கு உள்ளானவர்களில் பலர் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றிருக்கின்றனர்.

அந்த வரிசையில், ஒருநாள் நாயகன் விளையாட்டாக ஒரு காரியத்தைச் செய்கிறார். அது, அவரது நண்பர்களின் உயிர் பறிபோகக் காரணமாகிறது.

அதனால் மனமுடைந்தவர், தன்னுடைய சொத்துகளை மூவரது குடும்பத்தினருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

நாயகனிடம் வேலை செய்பவர்கள், இரண்டு நண்பர்களின் குடும்பத்தினரிடம் அந்த சொத்துக்களை ஒப்படைக்கின்றனர்.

மூன்றாவது நண்பனின் காதல் மனைவியோ, அந்த சொத்துகளை வாங்கும் நிலையில் இல்லை. பிரசவத்திற்காக மருத்துவமனையொன்றில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ‘உயிருக்கே ஆபத்தான நிலையில்’ அவர் இருக்கிறார்.

அதனைக் கேட்டதும், தற்கொலை முடிவை ஓரம் கட்டிவைத்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் நாயகன். அங்கு, அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு மரணிக்கிறார்.

பிறகு, நண்பனின் குடும்பத்தினரிடம் அந்த குழந்தையை ஒப்படைக்கச் செல்கிறார் நாயகன். அவர்களோ, ‘இக்குழந்தையை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்கின்றனர்.

அதன்பின் என்னவானது? அந்த குழந்தையை அக்குடும்பத்தினரிடம் நாயகன் ஒப்படைத்தாரா என்று நீள்கிறது மீதமுள்ள கதை.

இந்தப் படத்தில் நாயகனுக்கு ஒரு காதலி உண்டு. அவர்தான் நாயகி என்று சொல்லாமலேயே புரிந்திருக்கும்.

நாயகனின் நண்பர்கள் இறந்ததை நேரில் கண்டதால், நாயகன் மீது அவருக்கு மலையளவு வெறுப்பு.

இப்படத்தின் இரண்டாம் பாதியில் மீண்டும் அவர் நாயகனைக் காண்பார். ‘எத்தகைய சூழலில் அச்சம்பவம் நிகழ்கிறது’ என்பது திரைக்கதையில் இன்னொரு திருப்பத்தை உருவாக்கும்.

‘ரீலுக்கு ரீல் ட்விஸ்ட் வேண்டும்’ என்பவர்களின் ரசனைக்குத் தீனி போடும் வகையில் இருந்தது இப்படம்.

‘கொண்டாட்டம்’ கதையில் அர்ஜுன் ஏற்ற நாயக பாத்திரம், உண்மையில் மிகச்சுவாரஸ்யமானது.

‘உயர்ந்த உள்ளம்’ உட்படப் பல தமிழ் படங்களில் பார்த்த கதாபாத்திர வார்ப்பு என்றாலும், அது எளிதாக ரசிகர்களைக் கவரக்கூடியது. அது மட்டுமே இப்படத்தைத் ‘தனியாக’ ஒளிவிடச் செய்கிறது.

கீரவாணியின் இசை!

பதின்ம வயதில் என்னை அலைக்கழித்த பாடல்களில் ஒன்று, ‘கொண்டாட்டம்’ படத்தில் வரும் ‘மின்னலடிக்கும் வெண்மை போகுது.. போகுது.. பாரு’.

அப்போது, இதே வாசகங்களோடு ஒரு சோப் விளம்பரம் ரொம்பவே பிரபலம் என்பதால், அப்பாடல் கேட்டவுடனேயே மனதோடு ஒட்டிக் கொண்டது.

அதே தொனியில் துள்ளலை விதைக்கிற இன்னொரு பாடல், ‘மை விழி உன் இமைகளிலே’. ‘உன்னோடுதான் கனாவிலே’ பாடல் ‘டெக்னோ’ சத்தங்களுடன் ‘டூயட்’ ஆக வரும். பின்பாதியில், ‘டெம்போ’ குறைக்கப்பட்டு சோகப் பாடலாக ஒலிக்கும்.

இதுபோக ‘இனி சுதந்திர தினமே’, ‘பேரு நல்ல பேரு’ ஆகிய பாடல்களைக் கூட்டமாகச் சேர்ந்து ‘கொண்டாட்டத்தில்’ திளைப்பதை உணர்த்தும் வகையில் தந்திருப்பார் கீரவாணி.

தனது ‘பேவரைட்’ படத்தொகுப்பாளர் தணிகாசலத்தின் துணையோடு, ஒளிப்பதிவாளர் கே.பிரசாத் உடன் இதில் கூட்டணி அமைத்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அனைத்திலும் அவரது பெயரே இடம்பெற்றிருந்தது. திரைக்கதையில் உதவி என்ற வகையில் குமரேசன், ரமேஷ்கண்ணாவின் பெயர்கள் இருந்தன.

இப்படத்திற்குப்பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘நட்புக்காக’, ‘படையப்பா’ படங்கள் வசூலில் சிகரம் தொட்டன. ஆனால், அது போன்ற வரவேற்பை ‘கொண்டாட்டம்’ பெறவில்லை.

ரசிகர்களை ஈர்க்கிற கதை, சிறப்பான நட்சத்திரப் பட்டாளம், அருமையான தொழில்நுட்பக் குழு என்றிருந்தும், திரைக்கதையில் திருப்பங்கள் என்ற பெயரில் ‘க்ளிஷேக்களை’ கே.எஸ்.ரவிக்குமார் அள்ளித் தெளித்திருந்ததே அதற்குக் காரணம்.

இன்று சீரியல் உலகத்தில் எப்படி ‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ தந்து நம்மைக் கதறடிக்கிறார்களோ, அதற்கு முன்னோட்டம் என்று சொல்லத்தக்க வகையில் ‘கொண்டாட்டம்’ திரைக்கதை இருந்தது.

இந்தப் படத்தில் வில்லன் பாத்திரத்தில் ரமேஷ் கன்னா நடித்தார். அவர் சிறப்பாக நடித்தும், அக்காட்சிகள் நம்மை ஈர்க்கும் வகையில் அமையவில்லை.

அர்ஜுன் – சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள், சின்னி ஜெயந்த் மற்றும் ஆனந்த்பாபுவின் நகைச்சுவை, பின்பாதியில் இடம்பெற்ற விஜயகுமார் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட ‘செண்டிமெண்ட்’ காட்சிகள்,

இவை அனைத்தையும் மீறி கீரவாணி தந்த ‘கலக்கல்’ பாடல்கள் என்று ரசிக்கத்தக்க அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருந்தும் பெரிதாகக் கவனிக்கப்படாமல் போனது ‘கொண்டாட்டம்’.

ஒருவேளை இந்தப் படத்தில் இருக்கும் ‘க்ரிஞ்ச்’ அம்சங்களை நீக்கிவிட்டு, ‘ப்ரெஷ்’ஷாக திரைக்கதை அமைத்தால் நமக்கு ஒரு செம்மையான ‘ரீமேக்’ கிடைக்கக்கூடும்.

தனது தயாரிப்பிலேயே, கே.எஸ்.ரவிக்குமார் அப்படியொரு முயற்சியில் இறங்கினால் சிறப்பாக இருக்கும்.

சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தையே கொஞ்சமாய் ‘பட்டி டிங்கரிங்’ பார்த்து ‘ஒரு ஜாதி ஜாதகம்’ என்று மலையாளத்தில் எடுத்து வைத்திருக்கின்றனர்.

அதைப் பார்த்தபிறகாவது, இது போன்று கவனிக்கப்படாமல், கொண்டாடப்படாமல் போன நல்ல படங்களின் கதைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிற வேலைகளில் நம்மவர்கள் இறங்கலாம்!

– மாபா

You might also like