எம்.ஜி.ஆர்., சிவாஜித் தொடங்கி, ரஜினி, கமல், விஜய், அஜித் வரை இரட்டை வேடப் படங்கள் நல்ல விமர்சனங்களையும், பிரமாத வசூலையும் குவித்துள்ளன.
கே. பாலச்சந்தர் (புன்னகை மன்னன்), பாரதிராஜா (ஒரு கைதியின் டைரி), மகேந்திரன் (ஜானி), கே. பாக்யராஜ் (அவசரபோலீஸ்) கே.எஸ். ரவிகுமார் (நாட்டாமை) எஸ்.ஜே. சூர்யா (வாலி) ஆகிய இயக்குநர்கள், ஹீரோக்களுக்கு இரட்டை வேடம் அளித்து ரசிக்க வைத்தவர்கள்.
அந்தப் படங்கள் தனிச்சுவை கொண்டவை என்பதோடு, அந்த இரட்டைக் கேரக்டர்களின் முரண்பட்ட தன்மை, இன்றும், என்றும் மறக்க முடியாதவை.
டைரக்டர் ஷங்கருக்கு இரட்டை வேடப் படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்தவை. அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை வேட நாயகன்களை மையப்படுத்தியவை. ஒவ்வொன்றும் ஒரு ரகம் அவற்றை பார்க்கலாம்:
இந்தியன்:
ஷங்கர் இயக்கிய மூன்றாவது படம் – இந்தியன். முதலிரண்டு படங்களான ‘ஜெண்டில்மேன்’, ‘காதலன்’ ஆகியவை குஞ்சுமோன் தயாரிப்பில், அவர் உருவாக்கியவை.
அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் ஷங்கர், அங்குலம் அங்குலமாக ரசித்து, ருசித்து உருவாக்கிய படைப்பு ‘இந்தியன்’.
அவருக்குப் பெரும் துணையாக, தூணாக இருந்தவர், எழுத்தாளர் சுஜாதா. ஷங்கரின் முதல் இரண்டு படங்களுக்கு உரையாடல் தீட்டியவர் – பாலகுமாரன். முதன் முறையாக சுஜாதா – ஷங்கர் கைக் கோர்த்த படம், இந்தியன். இந்தக் கூட்டணி சுஜாதா மரணிக்கும் வரை தொடர்ந்தது, தனிக்கதை.
காமெடி, கலகலப்பு, கமர்சியல் வகையறாக்களுக்கு மகன் சந்துருவை பயன்படுத்திக்கொண்ட ஷங்கர், கதையின் கருவை தாத்தா கமல் தோளில் ஏற்றி, படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றார். ‘இந்தியன்’ வெற்றியில். ஏ.ஆர். ரஹ்மானுக்கும், இதில் பெரும் பங்குண்டு.
ஜீன்ஸ்:
‘காதலன்’ படத்திலேயே ஷங்கருடன், இணைந்திருக்க வேண்டியவர், பிரஷாந்த். இசை அமைப்பாளர்கள் விசுவநாதன் – ராமமூர்த்தி பெயர்களை, இரட்டை நாயகர்களுக்கு சூட்டி இருந்தார், இயக்குநர்.
மெல்லிய காதலை, மனதை தாலாட்டும் பாடல்களோடு சொல்லிய படம். எனினும், நாசர்-ராதிகா இடையேயான பிணக்கும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களும்தான், மையக்கரு.
ஒரு பாடலில் உலக அதிசயங்கள் அனைத்தையும், பிரமிக்கத்தக்க அளவில் படமாக்கி, ரசிகர்களை சொக்க வைத்திருந்தார், ஷங்கர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்து, தமிழ் சினிமாவில் தனது இருப்பை, பிரஷாந்த், பதிவு செய்த படம்.
இந்தப் படத்தில் நடிக்க முதலில் விஜயை கேட்டதாகவும் ‘இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாது’ என இளையதளபதி கை விரித்ததால், படம் பிரசாந்துக்கு கை மாறியதாகவும் ஒரு தகவல் உண்டு.
எந்திரன்:
லைகா நிறுவனத்துக்காக, கமலுக்கு, ஷங்கர் தயார் செய்த ‘ரோபோ’, அங்கே சுற்றி, இங்கே சுற்றி, கடைசியாக, ரஜினி – சன் பிக்சர்ஸ் காம்போவில், ‘எந்திரன்’ ஆக சந்தைக்கு வந்தது.
நாயகன், வில்லன் என ரஜினி ஏற்ற இரட்டை வேடங்கள், எந்திரனை, பான் இந்தியா சினிமாவாக உயர்த்தி இருந்தது. உயிருள்ள வசீகரனைவிட, உயிரற்ற சிட்டியின் ஆட்டமே, படத்தைக் கொண்டாட்டமாகக் கொண்டு சென்றது.
மூச்சற்ற மெஷினை வைத்து உயிர்ப்புள்ள படத்தைக் கொடுத்த ஷங்கருக்கு எந்திரன் தான், ‘மாஸ்டர் பீஸ்’ என உறுதியாகச் சொல்லலாம்.
2-0:
ரஜினி – அக்ஷய் குமார் – ஷங்கர் – கூட்டணியில் உருவான ‘2.0’ எந்திரனின் தொடர்ச்சியாகும். ‘3D’ எனும் முப்பரிமாணம், கிராபிக்ஸ் வித்தைகள், போன்றவை இந்தப் படத்துக்கு புதிய வண்ணத்தை அளித்திருந்தது.
கிளைமாக்ஸ் காட்சியில் சிட்டியின் குட்டிகள் அடிக்கும், லூட்டிகள் சிறுசுகளுக்கு மட்டுமல்லாமல் படம் பார்த்த பெருசுகளுக்கும் கிளுகிளுப்பை ஊட்டியது.
கேம்சேஞ்சர்:
ராம்சரணை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஷங்கர், சறுக்கிய படம், கேம்சேஞ்சர். தெலுங்கில் நெய்தாலும், தமிழ் உள்ளிட்ட வண்ணங்கள் பூசப்பட்டு, விற்பனைக்கு வந்தது.
கலவை சரி இல்லை. ஒட்டு மொத்த கட்டிடமும் தகர்ந்து போனது.
– பாப்பாங்குளம் பாரதி.