ஆங்கில எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்!

இண்டர்நேஷனல் பேமஸ் நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவரும், உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon).

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1917-ல் பிறந்தார். தந்தை நகைக்கடை மேலாளர். இளம் வயதில் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். மன அழுத்தம் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

மேலும், இவர் காலத்தில் அமெரிக்காவே தொழில் மந்தத்தில் திணறியதால், இளம் வயதிலேயே தொழிலக ஊழியர்.. ஷூ சேல்ஸ்மென்… ரயில் நிலைய கிளாக் ரூம் உதவியாளர் மற்றும் ரேடியோ அறிவிப்பாளர் எனப் பல சின்ன வேலைகளைச் செய்ய வேண்டிய வந்தது!

முன்னதாக அபார எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், கல்லூரி நாடகக் குழுவினருக்காக நாடகங்கள் எழுதிக் கொடுத்தார்.

அந்த அனுபவத்தில் 17 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். யுனிவர்சல் ஸ்டூடியோவில் கதை வசனத்தை சினிமா நட்சத்திரங்களுக்குப் படித்துக் காட்டும் வேலையைச் செய்தார். இதற்கு வாரச் சம்பளம் 17 டாலர்!

அடுத்து, பிராட்வே தியேட்டருக்கான பாடல்களை எழுதித் தர ஆரம்பித்தார். மேலும் எம்.ஜி.எம். ஸ்டூடியோவிலும், மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காகக் கதை வசனமும் எழுத ஆரம்பித்தார்!

அதிலும் ‘தி பேச்சுலர் அண்ட் தி பாபி சாக்ஸர்’ என்ற திரைப்படத்துக்குதான் முதல்முறையாக திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

கூடவே தொலைக்காட்சித் தொடர்களை எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 20 ஆண்டுகள் இதில் பணிபுரிந்தார். மூன்றே ஆண்டுகளில் 78 தொடர்களுக்கான கதைகளை எழுதி சாதனை படைத்தவர். பிரபல எம்மி, டோனி விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் 1969-ல் எழுதிய ‘நேக்கட் ஃபேஸ்’ என்ற முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது. அடுத்த நாவலான ‘தி அதர் சைட் ஆஃப் தி மிட்நைட்’ மிக அதிக அளவில் விற்பனையாகி பல விருதுகளைக் குவித்தது.

நியூயார்க் டைம்ஸ் விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் பட்டியலில் தொடர்ந்து 52 வாரங்கள் முதலிடம் பெற்று, அதுவரையிலான அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

கிட்டத்தட்ட இவரது அனைத்து நாவல்களுமே நியூயார்க் டைம்ஸின் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றன.

தொடர்ந்து ‘எ ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர்’, ‘பிளட்லைன்’, ‘ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்’, ‘மாஸ்டர் ஆஃப் தி கேம்’, ‘இஃப் டுமாரோ கம்ஸ்’ உள்ளிட்ட நாவல்களும் விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தன.

இதில் ஒரு முக்கிய சமாச்சாரம்; இவருடைய முதல் கதையை ஐந்து பதிப்பகங்கள் ஏற்காமல் திருப்பி விட்டன. The Naked Face என்ற நாவலை வில்லயம் மாரோ என்பவருக்கு 1970-ல் 1000 டாலருக்கு விற்றார்!

இவரது நாவல்களின் கதை சாதுர்யமான ஒரு பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்டிருக்கும். எனவே, இவருக்கு ஆண் வாசகர்களைவிட பெண் வாசகர்கள் எண்ணிக்கையே எக்கச்சக்கம்.

‘திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், நாடகம் எழுதினாலும், நாவல் எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும். அதில்தான் முழு சுதந்திரமாக செயல்பட முடியும்.

என் நாவல்களில் எனக்கு நன்றாகத் தெரிந்த, நான் போய் வந்த ஒரு இடத்தைப் பற்றிதான் எழுதுவேன். நான் சுவைத்துள்ள உணவு குறித்துதான் விவரிப்பேன். அனுபவத்தின் அடிப்படையில் எழுதுவதையே விரும்புகிறேன்’ என்று கூறுவார்.

இவருடைய சுயசரிதம், The Other side of Me. இதில் இவர் சொல்கிறார்: இளமைக் காலங்கள் மிகுந்த கஷ்டமானவை! ஒரு கட்டத்தில் அப்ரிமோவ் என்ற மருந்துக் கடையில் வேலை பார்த்தேன்.

அங்கு தூக்க மாத்திரைகளைப் போதுமான அளவு. எடுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணியது உண்டு என்கிறார்.

ஆரம்ப வரிகளில் சொன்னது போல் 1997-ல் உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். மொத்தம் 18 நாவல்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய 30 கோடி நூல்கள் விற்பனையாகின.

கடந்த 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று போற்றப்பட்ட சாதனை நாயகர் சிட்னி ஷெல்டன் 90-வது வயதில் (2007) இதே நாளில் மறைந்தார்

– நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்

You might also like