அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்!

தமிழக அரசுக்கு முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் (PRATHAM) அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகின்றன எனவும்

தமிழ்நாட்டில் நேரடியாக ஆய்வு செய்ததில் 14.4 % அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லையென்றும்,

குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தும் 7.9 % பள்ளிகளில் அருந்துவதற்குக் குடிநீர் இல்லையென்றும், மொத்தத்தில் 77.7 % பள்ளிகளில் குடிநீர் இல்லையென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2.6% அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லையென்றும், கழிப்பறை இருந்தும் அதைப் பயன்படுத்தப்பட முடியாத நிலை 16% அரசுப்பள்ளிகளில் உள்ளதென்றும்,

ஒட்டுமொத்தத்தில் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள் 81.4% பள்ளிகளில் மட்டுமே உள்ளனவென்றும் அந்த அறிக்கையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

8% அரசுப் பள்ளிகளில் பெண்களுக்குத் தனியே கழிப்பறை இல்லையென்றும், தனி கழிப்பறைகள் இருந்த போதிலும் 3% பள்ளிகளில் அவை பூட்டப்பட்டு இருந்ததாகவும்,

பயன்படுத்த முடியாத நிலையில் 11.6% கழிப்பறைகள் இருந்ததாகவும் ஒட்டு மொத்தத்தில் 77.5% கழிப்பறைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கைக் கூறுகிறது எனவும் துரை.ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

நூலக வசதி 13.3% அரசுப் பள்ளிகளில் இல்லையென்றும் நூலகம் இருந்தும் 22.4% பள்ளிகளில் நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லையென்றும்,

ஒட்டுமொத்தத்தில் 64.3% பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நிலையில் நூலகங்கள் இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 2024-ல் வெளியான UDISE அறிக்கையில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 100% பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, நூலக வசதிகள் உள்ளனவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும்

ஆனால், அதற்கு மாறாக ஏசர் அறிக்கையின் விவரங்கள் உள்ளன என்றும் UDISE அறிக்கை பள்ளி நிர்வாகத்தினர் தாமே போர்ட்டலில் பதிவு செய்யும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது என்றும்

ஆனால், ஏசர் அறிக்கையோ 534 பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் எனவே, ஏசர் அறிக்கையின் விவரங்களே ஒப்பீட்டளவில் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்பதால்,

இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை ரவிக்குமார் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏசர் அறிக்கையில் கவலைதரும் இன்னொரு தகவலும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள துரை.ரவிக்குமார், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான மாணவர் சேர்க்கை 2022-ம் ஆண்டு 75.7% இருந்ததென்றும் அது 2024-ம் ஆண்டில் 68.7 % ஆகக் குறைந்திருக்கிறதென்றும்

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை உயர்ந்தது என்றும் ஆனால் அது இப்போது சரியத் தொடங்கியுள்ளது என்றும்

கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லாவிட்டால் ஏழைப் பெற்றோர்கூட தனியார் பள்ளிகளிலேயே தமது பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை துரை.ரவிக்குமார் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like