வல்லான் – முழுமையான ‘த்ரில்’ அனுபவம் தருகிறதா?

இயக்குனராக சுந்தர்.சி. பெறுகிற வெற்றிகள் நம்மைப் பெரிதாக ஆச்சர்யமூட்டாது. காரணம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சமகாலத் திரைக்கலைஞர்களோடு போட்டியிடும் வகையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் பாங்கு. அதேநேரத்தில், அவர் நாயகனாக நடிக்கிற படங்கள் ஒவ்வொரு முறையும் விழிகளை விரிய வைக்கும்.

‘இந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று அவர் விரும்பினாரா ’அல்லது‘ அவருக்காகவே இந்த பாத்திரத்தை படைக்க வேண்டுமென்று கதாசிரியரோ, இயக்குனரோ நினைத்தார்களா’ என்ற கேள்வியை எழுப்பாத படங்கள் மிகக்குறைவு. காரணம், ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக சுரேஷ் கோபி போன்ற தோற்றம் கொண்ட நபர் அங்குமிங்கும் நடந்து சென்று, இதர பாத்திரங்களை மேலிருந்து கீழாக உற்றுநோக்கி, பெரிதாக முக பாவனைகளில் வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல் வசனம் பேசினாலே போதும் என்ற அளவிலேயே அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.

அந்த வரிசையில் இன்னொன்றாகச் சேர்கிறதோ என்ற எண்ணத்தை உண்டுபண்ணியது ‘வல்லான்’. இதில் குற்ற விசாரணை மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் ட்ரெய்லர் வழியே தெரிய வந்ததே அதற்குக் காரணம்.

மணி சேயோன் இயக்கியிருக்கிற இந்தப் படத்தில் தான்யா ஹோப், ஹீபா படேல், ஜெயகுமார், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜு, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தர்.சி மற்றும் அதில் நடித்த கலைஞர்களின் இருப்பைத் தாண்டி, இப்படம் தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது? இறுதிவரை நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கும் அளவுக்கு மிகச்சிறப்பான ‘த்ரில்லர்’ படமாக இதன் உள்ளடக்கம் அமைந்திருக்கிறதா?

அடுத்தடுத்த கேள்விகள்!

தலைமறைவாக இருக்கும் ஒரு ரவுடியைத் தேடிச் செல்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி திவாகர் (சுந்தர்.சி). ஆனால், அவர் சஸ்பெண்ட் ஆகி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

ஒருவழியாக அந்நபரைக் கண்டுபிடித்து, உடனிருக்கும் அவரது சகாக்களை அடித்து துவைக்கிறார் திவாகர். அவரிடம் கையும் களவுமாக மாட்டியபிறகு, ‘நான் எதுவுமே செய்யலை’ என்கிறார் அந்த ரவுடி.

அதே நேரத்தில், கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பண்ணைவீட்டில் மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பிணம் கிடைக்கிறது. கொலையானவர் ஆர்.ஆர். குரூப் உரிமையாளர் ஜோயல் (கமல் காமராஜு) என்று சொல்லப்படுகிறது. அதனால், ஊடகங்களில் இது குறித்த தவறான தகவல்கள் வெளியாகாத வண்ணம் அமைதியாக இவ்வழக்கை கையாள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குக் காவல் துறை ஆளாகிறது.

ஜோயலின் மனைவியும் (அபிராமி வெங்கடாசலம்) மாமனார் ஆரோக்கியராஜும் (ஜெயகுமார்) ‘தங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை’ என்கின்றனர்.

கொலையான இடத்தில் மட்டுமல்லாமல், அருகிலுள்ள வீடுகளிலும் சிசிடிவி பதிவுகள் கிடைக்கவில்லை என்கிறார் தனிப்படை அதிகாரி.

இந்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்கும் குழுவின் தலைமை அதிகாரி, அதனை திவாகரிடம் ஒப்படைக்கிறார்.

அவர் விசாரிக்கத் தொடங்கியபிறகு, பண்ணைவீட்டுக்கு மாடலிங்கில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன் ஜோயல் சென்றது தெரிய வருகிறது.

இதனிடையே, ஜோயலின் மரணத்தால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரும் நொந்து போகிறார். ஜோயலின் குடும்பத்தைக் கண்டு தனது இழப்பை சரி செய்யலாம் என்று எண்ணுகிறாது.

ஜோயலின் பின்னணி என்ன? அவரைக் கொலை செய்தது யார்? இந்த கொலை சம்பவத்துக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி திவாகரின் தேடலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? இந்த வழக்கில் திவாகர் ஆர்வம் காட்டுவது ஏன்?

இப்படி அடுத்தடுத்து நம்மில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறது ‘வல்லான்’ படத்தின் இரண்டாம் பாதி.

திரைக்கதை ஈர்க்கிறதா?

வழக்கம்போல, இந்த படத்திலும் நாயக பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சுந்தர்.சி. சோகத்தில் தவிப்பது போன்ற சூழலை அப்பாத்திரம் எதிர்கொண்டிருப்பதாகச் சித்தரித்திருப்பதால், ஒரே முகபாவனையைப் பெரும்பாலான காட்சிகளில் தாங்கியிருக்கிறார்.

நாயகி தான்யா ஹோப் தனது உடலழகை வெளிக்காட்டிய அளவுக்கு நடிப்புத்திறமையைத் திரையில் காட்டியதில்லை. இதற்கு முன் அவர் நடித்த தமிழ் படங்களில் ‘தாராளபிரபு’ தவிர்த்து மற்றனைத்திலும் அப்படித்தான் வந்து போயிருக்கிறார். நல்ல வேளையாக, அந்த குற்றச்சாட்டில் சேரவிடாமல் அவரைக் கரை சேர்த்திருக்கிறது இப்படம்.

ஜெயகுமார், அபிராமி, சாந்தினி தமிழரசன், கமல் காமராஜு, டிஎஸ்கே, தலைவாசல் விஜய், அருள் சங்கர் என்று பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். ஆனால், அவர்களில் எவருக்கும் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

சுந்தர்.சி படங்களில் ஏ ப்ளஸ் சைஸில் ஹீரோயின்கள் இடம்பெறுவது வழக்கம். இந்த படத்தில் தான்யா போலவே ஹீபா படேலும் வந்து போயிருக்கிறார். அவருக்கும் திரைக்கதையில் பெரிதாக இடம் தரப்படவில்லை.

மணி பெருமாளின் ஒளிப்பதிவு, ஒரு ‘த்ரில்லர்’ படத்திற்குத் தேவையான தன்மையைத் திரையில் தோற்றுவித்திருக்கிறது. சக்தி வெங்கட்ராஜின் கலை வடிவமைப்பு, ’தேவையற்ற டீட்டெய்லிங் வேண்டாமே’ எனும் வகையில் மினிமலிசத்துடன் பிரேம்களை வடிவமைத்திருக்கிறது.

காட்சிகளை ‘கட்’ செய்வதிலும், அடுத்த காட்சியைத் தொடங்குவதிலும் கூர்மை நிறைந்திருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்.

காட்சிகளில் வேகம் சேர்க்க உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. பின்னணி இசையில் அவர் காட்டிய ஆர்வம், இதன் பாடல்களில் தெரிவதில்லை.

‘வல்லான்’ படத்தின் பெரிய ப்ளஸ், இதன் முதல் பாதி. தெளிவாகச் சொல்லப்படாத சில தகவல்கள், திரைக்கதையில் வெவ்வேறு திசைகளில் இருக்கும் புள்ளிகளாகத் தெரிகின்றன. அவற்றை இணைப்பதற்கான பயணமாகவே சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த உத்தியைப் பின்பாதியில் சரிவரப் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் மணி சேயோன். அதனால், இடைவேளைக்குப் பிறகு கதை எங்கெங்கோ பயணிக்கிறது.

தமிழில் வந்த பல நல்ல ‘த்ரில்லர்’ படங்களில் இந்த குறையைக் கண்டிருக்கிறோம். அதிலொன்றாக, ‘வல்லான்’ சேர்ந்திருப்பதில் நமக்கு வருத்தம் அதிகம்.

இரண்டாம் பாதியில், இந்த படத்தில் நாயக பாத்திரத்திற்கென்று ஒரு ‘பிளாஷ்பேக்’ உள்ளது. அதில்தான் நாயகி தோன்றுகிறார். கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எங்கெங்கோ நிகழ்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒரு கோட்டில் இணைக்க முயல்கிறது திரைக்கதை.

இப்படி நிறைய லாஜிக் மீறல்களைக் கொண்டிருக்கிறது ‘வல்லான்’. அதனை மீறி, ‘கொஞ்ச நேரம் பொழுது போக ஒரு த்ரில்லர் படம் பார்க்கலாமா’ என்றெண்ணுபவர்களை ஈர்க்கவல்லது இப்படம். இது தரும் த்ரில் அனுபவத்தில் முழுமை நிச்சயம் கிடைக்காது. அது தெரிந்தும், ‘ஓகே’ என்பவர்கள் இந்த த்ரில்லர் படத்தைக் கண்டு ரசிக்கலாம்!

 

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like