பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!

எம்.எஸ்.செல்வராஜ்

ஒரு தனி மனிதன் அல்லது சமூகம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பென்பது யார் கையில் அதிகாரமும், உற்பத்தி கருவிகளும் இருக்கிறதோ அந்த வரக்கமே தீர்மானிக்கிறது. ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குபவர்களின் கலாச்சாரத்தின் படியேவாழ்க்கை முறையை நடத்துகின்றனர்.

ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை அணி திரட்ட முயற்சி செய்யும்போது, அது சுலபமாக முடியாமல் போகும்போது, தனிநபர் ஒடுக்குபவர்களை வீழ்த்த அல்லது அவர்களின் செயல்பாடுகளை முறியடிக்க, வன்முறையைக் கையில் எடுக்கத் தீர்மானிக்கப்படுகிறார்கள்.

இச்செயல்பாடுகளை “அரச பயங்கரவாதம்” உரம் போட்டு வளர்த்து எடுக்கின்றனர். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மேலும் மக்களை ஒடுக்கி அச்சுறுத்தி ஆதிக்க வர்க்கம் தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்கின்றது.

ஆகவே போராட வேண்டும் என்று அக்கறையோடு செயல்படும் தோழர்கள், பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்க அறிவியல் ரீதியான தத்துவங்களை முழுமையாக படித்துணர்ந்து சரியான உத்திகளை வகுத்து செயல்படுவது முக்கியமானதாகும்.

இயங்கியல், இயக்கவியல் போன்றவற்றை முழுமையாகத் தெரிந்திருப்பதோடு இந்த அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்பட்டு ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் அரசியல் கருத்துகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இதன்மூலம் அதிகாரத்தை மக்கள்மயமாக்கி ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதனை விடுத்து, தனிநபர் சாகசங்கள் தீவிரவாதமாக மாறி, சமூகத்தை மேலும் சீர்குலைக்கும். ஆகவே, தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களை கோர்வையாக்கி சரியான நேரத்தில் இயக்குநர் திரு. வெற்றிமாறன் கலைநயத்தோடு ‘விடுதலை’ திரைப்படம் எடுத்தது பெரும் சவாலாகும்.

அந்த வகையில் இயக்குநர் திரு. வெற்றிமாறன் மிகச் சரியாக ‘விடுதலை’ திரைப்படத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் வரும் காட்சிகள் மறைக்கப்பட்ட அல்லது ஆளும் அதிகாரவர்கத்தால் திரிக்கப்பட்ட வரலாற்றைப் பொதுசனங்கள் மத்தியில் இசைஞானி இளையராஜாவின் இனிமையான இசையில், அழகியல் உணர்வுடன் திரையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பார்வையாளர்கள் எது சரி, எது தப்பு என்பதை முடிவு செய்யும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். தனிநபர்கள் வன்முறையை கையில் எடுப்பது தோல்வியையும் சமூகம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை ‘விடுதலை’ திரைப்படம் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

“திரைப்படம் என்பது நவீன யுகத்தின் மிகப்பெரிய சாதனம்” ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மககளை சென்றடைகின்றது.

அதனைப் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் சுரண்டும் வர்க்கமே பயன்படுத்துகின்றது. இதன் மூலம் ஒடுக்கும் கலாச்சாத்தை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.

இளைஞர்களை சிந்திக்க விடாமல் செய்வது, போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க, ஆபாச வக்கிரங்களை திரைப்படத்தின் மூலம் திணிக்கின்றனர்.

கவர்ச்சி, நாலு குத்துப்பாட்டு, சண்டைக் காட்சிகள், இவை இல்லை என்றால் திரைப்படத்தை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையைப் பரப்புகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ‘விடுதலை’ போன்ற படங்கள் வெற்றி பெறுகின்றது என்றால் தோழர் வெற்றிமாறன் போன்றவர்களை நாம் பாராட்டி மேலும் இதுபோன்ற படைப்புகள் வர ஊக்கமளிப்பது கடமையாகும்.

இந்த நோக்கத்தோடு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கடந்த 17 ம் தேதி ஈரோடு பெரியார் மன்றத்தில் இயக்குநர் திரு.வெறறிமாறனுக்கு பாராட்டுவிழா நடத்தினர்.

இதற்கு தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் V P குணசேகரன் தலைமை ஏற்று மிகச் சிறப்பான பாராட்டுரையை வழங்கினார்.

மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகன், திருமுருகன் காந்தி மற்றும் பலர் ‘விடுதலை’ படம் பற்றிய விமர்சனமும் பாராட்டையும் தெரிவித்தனர்.

இதில் ஏற்புரை வழங்கிய வெற்றிமாறனின் உரை மிகுந்த அக்கறையோடு கவனிக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்:

“பொதுவாக ஒரு சினிமா உருவாகிறது என்பது ஒரு நபர் மட்டுமே நிகழ்த்திவிட முடியாது. பல பேர் சேர்ந்து நிகழ்த்தக் கூடியது.

நம்ம முன்னாடி இருக்கிறோம் என்பதைவிட ஒட்டுமொத்தக் குழுவும் சேர்ந்து ரொம்ப கவனத்தோடும், அர்ப்பணிப்போடும், ஒரே சிந்தனையோடும் செய்து முடிக்கவேண்டிய வேலை இந்த சினிமா.

நாம் செய்கிற ஒரு செயலோ, நாம் சொல்கின்ற ஒரு சொல்லோ அல்லது ஒரு கருத்தோ இவை தான் நம்முடன் யார் நிற்கிறார் என்பதைத் தீர்மானிக்கின்றது.

நம்முடன் யார் நிற்கிறார் என்பதை வைத்து, நாம் செய்த செயல் சரியா? சொன்ன சொல் சரியா? என்பதையும், அது தவறா என்பதையும் நாம் தீர்மானிக்கலாம்.

அந்த வகையில், ‘விடுதலை’ நாங்கள் செய்த சரியான செயல் தான். எல்லோரும் அவங்க சொல்லுக்கு அல்லது அவங்க செயலுக்குக் கூட யார் நிக்கிறாங்க என்பதை வைத்து தான் நாம் செய்தது சரியா அல்லது தவறா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

பொதுவாகவே ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் அதில் அதிக தேடல், கடின உழைப்பு இருக்கும்.

கடந்த நான்கு வருடமாக நிறைய படிச்சி, நிறைய விவாதித்து, பல தோழர்களை சந்தித்து இதில் இருக்கும் சிதருண்டு கிடக்கும் காட்சிகள் அதாவது ஒவ்வொரு பாகங்களாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் உண்மையில் எங்கோ ஒரு இடத்தில் யாருக்கோ நடந்த, எவரோ ஒருவர் அனுபவித்த கஷ்டங்கள், யாரோ ஒருவருடைய போராட்டத்தினால் கிடைத்த விடுதலை சேர்ந்து ஒரு தோரனமாக தான் கட்ட முயற்சி செய்தது.

இதில் வாத்தியார் என்பவர் ஒரு தனி மனிதன் கிடையாது. இந்த மண்ணில் “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காகப் போராடின. முகம் தெரியாத, வெளியே தெரிவதைப்பற்றி அக்கறை இல்லாத பல தோழர்களுடை உருவம் தான் அந்த வாத்தியார்.”

அப்படிப்பட்ட தோழர்களுக்காக எங்களுடைய முன்னோட்டம் தான் இந்த விடுதலை.

இதன் மூலமாக நிகழ்கின்ற விவாதமும் அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகக்கூடிய அரசியல் நிகழ்வுகளும் தான் எங்களுடைய விருப்பம், ஆசை. அது நடந்தால் நன்றாக இருக்கும்.

மூன்றாம் பாகம் இருக்கலாம். அதை செய்வதற்கான உழைப்பும், அர்ப்பணிப்பும் அதை வெளியிடுவதில் நிறைய சவால்களும் இருக்கும். ஒவ்வொருமுறையும் மிகுதியான பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு கொண்டுவர வேண்டும் என்பதால் அதில் நிறைய சவால்கள் உள்ளது.

ஆனால், அதை நாங்கள் சமரசங்கள் என்று கூறுவதில்லை. ஏன் என்றால், தற்போது நாம் ஒரு விளையாட்டு விளையாடச் செல்ல வேண்டும் என்றால் மறைமுகமாக அதில் ஒரு உண்மை இருக்கிறது. நடுவர் தீர்ப்பே இறுதியானது என்பதை ஏற்றுக் கொண்டுதான் செல்லவேண்டும் என்பது.

நம் ஊரில் முக்கிய சினிமா (mainstream cinema) எடுத்து திரையரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கென்றே ஒரு அமைப்பு உள்ளது. அவர்களுக்கென்று சில விதிமுறைகள் உள்ளது. அரசின் ஒரு அங்கமாக உள்ளார்கள்.

அதனால், அந்த அமைப்பை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமோ அவ்வாறே செயல்படுவார்கள். அதற்கு எதிராகப் பேசாத மாதிரியான விஷயங்களை மட்டுமே அனுமதிப்பார்கள் என்பதை அறிந்து தான் நாம் அங்கு செல்கிறோம்.

இது போன்ற படங்களை எடுப்பதற்கு இனி வரும் காலங்களில் இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

மூன்றாம் பாகம் எடுக்கவேண்டும் என்றால் இன்னும் நாங்கள் தயாராக வேண்டும்” என எல்லோரையும் சிந்திக்க வைத்தார் வெற்றிமாறன்.

எதிர்பார்த்ததற்கு அதிகமாக இளைஞர்களும், மக்களும் மண்டபத்தில் குவிந்து விட்டனர். வெற்றிமாறனின் உரைக்குப் பிறகு அவருடன் போட்டோ எடுக்க போட்டிபோட்டுக் குவிந்தனர். இளைஞர்களையும், நண்பர்களையும் முகம் சுழிக்காமல் போட்டோ எடுக்க அனுமதித்தார்.

இதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிப்பாளையத்தில் இதே போல் சிறப்பான பாராட்டு விழாக் கூட்டம் மாலையில் நடைபெற்றது.

You might also like