தாய் தலையங்கம்:
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் கூடவே தமிழ் மொழியின் தொன்மையையும் ஒருசேர உணர்த்தி இருக்கின்றன.
ஆனால், அதை உணர்த்துவதற்கு பொதுவெளியில் அதை கொண்டு செல்வதற்கே பல தடை நிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றது.
ஆதிச்ச நல்லூர், துவங்கி கீழடி வரை பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் வரலாற்று ரீதியான தொன்மையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய விழாவில் கலந்து கொண்டு வெளிப்படுத்தியிருக்கும் தகவல் மிக முக்கியமானது.
தமிழகத் தொல்லியல் துறை சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இரும்பின் தொன்மை என்கிற ஆய்வு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் தொன்மை உலகிற்கு எடுத்துரைக்கும் விதத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடந்திருப்பதாகச் சொன்னார்.
தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகள் புனே, அகமதாபாத் மற்றும் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வகம் உட்பட பல ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு, கி.மு.3345-ம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில், இரும்பின் பயன்பாடு இருப்பதாகவும் தெரியவந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு, கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே நகர நாகரீகத்தோடு தமிழர்கள் வாழ்ந்திருப்பதைக் கீழடி அகழாய்வு நிரூபித்திருக்கிறது.
3200 ஆண்டுகளுக்கு முன்பே பாசனம் மற்றும் பயிரிடுவது குறித்த நுண்ணுர்வுடன் நெல்லை பயிரிட்டது பற்றியும் தெரியவந்திருக்கிறது என்று உரைத்திருக்கிறார்.
தமிழகத்தில் மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், குறிப்பாக சிவகளையில் கிடைக்கப்பெற்ற இரும்பு மாதிரிகளில,
சுமார் 5345-ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்ததாகவும், இரும்பை உருக்கும் தொழில் அப்போதே தமிழர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னளா் தலைமை இயக்குநரான ராகேஷ் திவாரி.
வட மாநிலத்திலிருந்து வந்திருந்த தொல்லியல் துறைச் சார்ந்த தலைமை அதிகாரிகளும் உணரும்படியாக இந்த ஆய்வு முடிவுகள் அமைந்திருப்பது தமிழருக்கும் அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வு அறிஞர்களுக்கும் நிச்சயமாக பெருமை சேர்க்கும். தமிழக அரசுக்கும் பெருமை சேர்க்கும். இந்தியாவில் கடல்கடந்து வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும்.
அதேசமயம், தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் துவங்கி கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் என்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த தொல்லியல் ஆய்வுகள் முழுமை பெறாத நிலையிலும் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
ஆய்வு நோக்கில் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி எந்தவிதமான மாநில பாகுபாடும் இன்றி கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய முறையில் ஆய்வுகள் நடந்தேறினால், இன்னும் எவ்வளவோ சான்றுகள் கிடைத்து, தமிழரின் தொன்மை மேலும் உறுதிப்படும்.
அதற்கான நிதி ஒதுக்கீடு உரிய முறையில், தரப்பட்டதால்தான் அத்தகைய ஆய்வுகளும் உயிர்பெற முடியும்.
தற்போது, தொல்லியல் ஆய்வு நடக்கிற எந்த நிலப்பரப்பும் இந்திய நிலப்பரப்புக்குள்தான் உள்ளடங்கி இருக்கிறது என்பதை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
தொல்லியல் ஆய்வுகளிலும் அதன் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் எந்த விதமான உள் அரசியலும் நுழைய வேண்டாம்.