அமெரிக்க மேகங்களைக் கண்டுவந்த கவிஞர்!

: வைகை கண்ட நயாகரா

கூடுவாஞ்சேரி சென்றால்கூட அதையும் ஒரு பயணம் போல எழுதுபவர் கவிஞர் புனிதஜோதி. விசா பெறுவதற்காக கொல்கத்தா சென்றதில் தொடங்கி நியூயார்க்கில் இந்தியாவுக்கு விமானம் ஏறுவது வரையிலான பயண அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

தன் செல்ல மகனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற சிறு பயணம்தான். ஆனால் அவரது எழுத்தார்வம் 119 பக்க நூலாகத் தந்திருக்கிறது. நூலின் அறிமுகப் பக்கங்களில் தமிழில் யார் யாரெல்லாம் பயண நூல்களை எழுதினார்கள் என்பதை புனிதஜோதி குறிப்பிட்டுள்ளது சிறப்பான தொடக்கம்.

கொல்கத்தாவின் ஹூக்ளி பாலம், தோஹா விமான நிலையம், அட்லாண்டா டவுன் டவுன், சுவாமி நாராயணன் கோயில், ஜார்ஜியா டெக் பல்கலை வளாகம், புகை மலை, அக்வேரியம், கொக்கோகோலா தொழிற்சாலை, சுதந்திரதேவி சிலை…

மார்டின் லூதர் கிங் ஜூனியர் வரலாற்றுப் பூங்கா, நியூயார்க் எட்ஜ், நியூஜெர்சி, நயாகரா… என சென்ற இடங்களைப் பற்றிய அனுபவத்துடன் அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் எழுதத் தவறவில்லை.

பயண அனுபவத்தின் இடையே அந்த தருணத்தில் தோன்றும் கவிதைகளையும் எழுதி, தான் ஒரு கவிஞர் என்பதை வெளிப்படுத்துகிறார். அதேபோல அமெரிக்கச் சூழல்கள் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கிறார். நியூயார்க் வரும் வரை விரிவாக எழுதும் புனிதஜோதி, கடைசி பக்கத்தில் பயணத்தை சட்டென முடித்தது தெரிகிறது.

முன்னரே நேரம், காலம், போகுமிடம் என எல்லாவற்றையும் முடிவு செய்துகொண்டு செல்வது சீனப் பண்பாட்டின்படி பயணமல்ல என்கிறார்கள். ஆனாலும் வாழ்வு தரும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க எளிய மனிதர்கள் போகும் திசையெல்லாம் பயணங்கள்தான்.

– நன்றி: முகநூல் பதிவு

*****

: வைகை கண்ட நயாகரா
ஆசிரியர்: புனிதஜோதி

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
9, ரோகிணி பிளாட்ஸ்,
முனுசாமி சாலை,
கே. கே. நகர் மேற்கு,
சென்னை – 78
விலை: ரூ. 160/-

#கவிஞர்_புனிதஜோதி #வைகை_கண்ட_நயாகரா_

You might also like