எல்லோருக்குமான இசைச் சமூகம் உருவாகும்!

பாடகர் டி.எம் கிருஷ்ணா நம்பிக்கை

கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது கருதப்படுகிறது. 1929 முதல் வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவது தங்களது தகுதியை நிலைநிறுத்துவதாக, புகழுக்குப் புகழ் சேர்ப்பதாகச் கலைஞர்களும் எண்ணுகிறார்கள்.

எல்லா உயர்மதிப்பு விருதுகளையும் போலச் சங்கீத கலாநிதி விருதும் அவ்வப்போது விமர்சனங்களுக்கு உள்ளானதுண்டு.

எம்.டி.ராமநாதன், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்ற இசை மேதைகளுக்கு விருது வழங்கப்படாதது தொடர்பாக விவாதம் உருவாகியிருந்தது.

2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

உடனே ஒரு சாரார் சர்ச்சையை எழுப்பினார்கள். இசைத்துறைச் சாதனைக்காக ஒருவருக்கு வழங்கப்படும் விருது இசை அல்லாத காரணங்களுக்காக விவாதப் பொருளானது.

கடந்த மார்ச் 18, மியூசிக் அகாடமி செயற்குழு 2024 ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அறிவித்தது. 2025 ஜனவரியில் நடைபெறும் இசைவிழாவில் விருது வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இசைக் கலைஞர்களில் ஒரு சாராரிடமிருந்து கண்டனமும் எதிர்ப்பும் எழுந்தன. அவை கிருஷ்ணாவின் இசைத் திறனையோ, இசைத்துறைப் பங்களிப்பையோ பற்றியவை அல்ல,  மாறாக, அவரது செயல்பாடுகளைப் பற்றியவை.

“டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைக் கலையின் விழுமியங்களுக்கு எதிரானவர். புனிதமான சங்கீதக் கலைக்கு களங்கம் கற்பித்தவர். அவருக்குச் சங்கீத கலாநிதி விருது வழங்குவது கண்டனத்துக்குரியது” என்று இந்தத் தரப்பினர் குற்றம்சாட்டினார்கள்.

பிரபல பாடகிகளான நந்தினி, காயத்ரி சகோதரிகள் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுமானால் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு இசை விழாவில் தாங்கள் பாடப்போவதில்லை என்று தங்களுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்தார்கள்.

சித்திர வீணைக் கலைஞரான ரவிகிரண் தனக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திருப்பி அளிக்கப்போவதாகக் கடிதம் எழுதினார்.

திருச்சூர் சகோதரர்கள் மியூசிக் அகாடமியில் பாடும் வாய்ப்பைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்கள்.

கதாகாலட்சேபர்களான துஷ்யந்த் ஸ்ரீதர், “டி.எம் கிருஷ்ணா ஸ்டண்ட் அடிக்கிறார்” என்று பகடி செய்தார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த மியூசிக் அகாடமி, தனது தரப்பு நியாயத்தை நாளிதழ் அறிவிப்பு வாயிலாக முன்வைத்தது. விருது வழங்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதைத் தெளிவுபடுத்தியது. சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவது டி.எம்.கிருஷ்ணாவின் இசைப் பங்களிப்புக்குத்தானே தவிர அவரது பிற செயல்பாடுகளுக்காக அல்ல என்று குறிப்பிட்டது.

கிருஷ்ணாவுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் மறந்துபோனதும் அல்லது கவனிக்க மறுத்ததும் இந்த விஷயத்தைத்தான்.

அவர்கள் கிருஷ்ணாவின் செயல்பாடுகளை முன்னிறுத்தியே விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரது இசையில் குற்றம் கண்டு அல்ல.

டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைக்கலை மரபுக்கு இழைத்த அபவாதங்களாகக் குறிப்பிடப்படுபவை, நவீன தமிழகத்தின் சமூக வாழ்வில் கட்டாயமாகியிருப்பவை, தவிர்க்க முடியாதவை.

“பிராமணர்களை இழிவுபடுத்திய பெரியாரைப் புகழும் பாடலை கிருஷ்ணா பாடுகிறார். அம்பேத்கரைப் போற்றும் பாடலைப் பாடுகிறார். இப்படிச் செய்வதன் மூலம் கர்நாடக இசையின் மாண்பை, புனிதத்துவத்தைக் களங்கப்படுத்திவிட்டார்” என்பதே முதன்மையான குற்றச்சாட்டு.

உண்மையில் காலத்துக்கு ஒவ்வாத இற்றுப்போன மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்தியதுதான் டி.எம்.கிருஷ்ணா செய்திருக்கும் மாபெரும் பிழை.

கர்நாடக சங்கீதம் நீண்ட காலமாகவே குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குச் சொந்தமானதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில்தான் அதன் நடைமுறைகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

இசை எல்லோருக்குமானது என்று பெயரளவில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அப்படி அல்ல. பிராமணர் அல்லாத ஒருவர் கர்நாடக இசைத்துறையில் உச்சத்தை எட்டுவது மிக அரிது. கர்நாடக இசை உலகம் மூடுண்டதாகவே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அதைத் திறந்தவெளியாக மாற்ற டி.எம்.கிருஷ்ணா முயல்கிறார்.

கர்நாடக இசை ஒரு தரப்பினரின் தனிச்சொத்து அல்ல. எல்லாருக்கும் பொதுவானது என்று அவர் முன்வைக்கும் அறைகூவல் மரபாளர்களைத் தொந்தரவு செய்கிறது.

இவர்கள்  வலுவாகக் கடைப்பிடிக்கும் ‘சங்கீதத் தீண்டாமை’யை கிருஷ்ணாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் உலுக்குகின்றன. புனிதமும் பாதுகாப்பானதுமாகத் தாங்கள் காபந்து பண்ணி வைத்திருக்கும் தனி உலகம் பறிபோய்விடும் என்ற பதற்றமே இவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது.

சங்கீதம் புனிதமானது, தெய்வீகமானது என்று பெரும்பாலானவர்களை விலக்கி நிறுத்துவதன் மூலம் தமது தனிப்பெருமை காப்பாற்றப்படுவதாகக் கருதுகிறார்கள்.

அவற்றைக் கடைப்பிடிப்பவர்களைப் புனிதர்கள் என்று நம்பவைக்கிறார்கள். இவை வெறும் கற்பிதங்களே என்று கருத்து நிலையில் வாதாடுவதையும் செயல்வடிவில் நிலைநாட்டுவதையும் டி.எம்.கிருஷ்ணா மேற்கொள்கிறார்.

கர்நாடக இசை அவற்றின் புனித அரங்கேற்ற மேடைகளில் மட்டுமே பாடப்படவேண்டியதை மாற்றி, அது சேரியிலும் ஒலிக்கலாம் என்றும் பவித்திரமான சங்கீத வித்வான்கள் சேற்றிலும் காலூன்றலாம் என்றும் அவர் மெய்ப்பித்தார்.

ரஞ்சினி, காயத்ரி சகோதரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று, “இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியை டி.எம்.கிருஷ்ணா அவதூறு செய்துவிட்டார்” என்பது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரையை முகாந்திரமாக்கியே, இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அது இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது.

1. எம்.எஸ் பற்றி இதுவரை செய்யப்பட்டு வந்திருக்கும் பரப்புரை மீறி, முன்னோடிக் கலைஞராக அவரைக் கண்டு அவருடைய கலை உள்ளத்தை அறிய இவர்கள் முற்படவில்லை. அவரை ஒரு வழிபாட்டுப் பிம்பமாகவே கருதுகிறார்கள்.

2. கிருஷ்ணாவின் கட்டுரையை இவர்கள் சிரத்தையுடன் வாசித்திருக்கவில்லை.  

மார்ச் மாதத்தில் கர்நாடக இசை வட்டத்துக்குள் அனலடித்த இந்த விவாதம் சற்று ஓய்ந்து, கடந்த அக்டோபரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறை அது நீதிமன்ற முறையீடாகவும் உருமாற்றும் பெற்றது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுடன் 2005-ம் ஆண்டு முதல், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் அமைந்த விருதையும் மியூசிக் அகாடமி அளித்து வருகிறது.

இந்த விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு அளிப்பதற்குத் தடைகோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் என்ற உரிமை பாராட்டிக்கொள்ளும் பெங்களூரைச் சேர்ந்த வி.ஸ்ரீனிவாசன் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.

ரஞ்சினி, காயத்ரி முன்வைத்த அதே குற்றச்சாட்டைத்தான் ஸ்ரீனிவாசனும் முன்வைத்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றிக் கண்டனத்துக்குரிய இழிவான கருத்துகளைத் தெரிவித்துள்ள நபர் தான் டி.எம் கிருஷ்ணா. அவருக்கு எம்.எஸ் பெயரால் அமைந்த விருதை அளிப்பது ஏற்புடையது அல்ல என்பது அவரது வாதம். அதையொட்டியே விசாரணை நடந்து தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

“கிருஷ்ணாவுக்குச் சங்கீத கலாநிதி விருது அளிப்பது மியூசிக் அகாடமி செயற்குழுவின் முடிவு. அது டி.எம். கிருஷ்ணாவின் இசைப் பங்களிப்பிற்காக வழங்கப்படுவது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நல்லதோ, தீயதோ அவை விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதில்லை. விருது வழங்குவது பொருத்தமானதா, இல்லையா? என்பதை அகாடமி தரப்புதான் முடிவுசெய்ய  முடியுமே தவிர வாதியல்ல  என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தி இந்து நாளிதழ் நிறுவி வழங்கி வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுதான் விவாதத்திற்கு காரணம்  எனில்,  அந்த விருதை, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைக் குறிப்பிடமால்  வழங்கலாம் என்றும் நீதிமன்றம் ஆலோசனை கூறியிருக்கிறது. கூடவே ஒரு சுட்டிக்காட்டலையும் செய்திருக்கிறது.

1997-ல் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஓர் உயிலை எழுதியிருந்தார். அதில் ஓரிடத்தில், தனது மறைவுக்குப் பிறகு தன் பெயரால் அறக்கட்டளையோ, விருதோ ஏற்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நிபந்தனையை மீறியே தி இந்து 2005-இல் மேற்சொன்ன விருதை ஏற்படுத்தியது.

மறைந்துபோன ஒருவரின் இறுதி ஆசையை தி இந்துவும், பெங்களூரு பேரனும் பொருட்படுத்தவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதில் ஒரு சுவாரசியமும் அடங்கியிருக்கிறது. ஏறத்தாழ 2015 முதல் அண்மைக்காலம்  வரையும் மியூசிக் அகாடமி மேடையில் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிகள் நடைபெறவே இல்லை. இப்போது அவர் மீது சாட்டப்படும் அதே குற்றச்சாட்டுகளின் பேரில்தான் அந்தப் புறக்கணிப்பும் நேர்ந்தது.

ஒருவேனை, காலம் மாறியிருக்கிறதோ என்னவோ, மியூசிக் அகாடமியே அவருக்கு சங்கீத கலாநிதி விருதை அளிக்க முன்வந்திருக்கிறது.

டி.எம்.கிருஷ்ணாவின் கண்டனத்துக்குரிய செயற்பாடுகளாக, மரபுப் பற்றாளர்கள் குறிப்பிடுபவை இன்றைய கண்ணோட்டத்தில் பழமைக்கு எதிரானவை. முன்னேற்றத்துக்குத் தடையானவை. கர்நாடக இசையை ஜனநாயகப்படுத்தும் முன்னெடுப்பாகவே டி.எம்.கிருஷ்ணாவின் செயல்பாட்டைக் கருத முடியும்.

ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கியிருக்கும் இசைக்கலையைப் பரந்த எல்லைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறார்.

அதன் பழைய மதிப்பீடுகளுக்கு மாற்றாகப் புதிய விழுமியங்களை முன்வைக்கிறார். இந்த செயல்பாட்டில் இன்னொரு பக்கமாகவே தனது கருத்துகளை முன்வைக்கிறார். சங்கீத கலாநிதி, எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றிய அவரது பார்வையும் அப்படிப்பட்டதே.

எல்லாரும் கருதுவதுபோல அல்லது போற்றுவதுபோல எம்.எஸ்.சுப்புலட்சுமியை கோமாதாவாக கிருஷ்ணா கருதவில்லை. பிராமணியப் புனித அடையாளமாக ஏற்கவில்லை. மேதைமையுள்ள கலைஞராகவே அவரைக் காண்கிறார்.

மாபெரும் ஆற்றல் உள்ள பெருங்கலைஞராகக் கொண்டாடப்பட வேண்டியவர், பக்த மீராவாக ஒடுங்கிப்போனதையே கிருஷ்ணா எடுத்துக்காட்டுகிறார். இன்னும் காலம் வழுவிய மதிப்பீடுகளிலேயே உழன்றுவரும் பிராமண நடுத்தர வர்க்கத்துக்கு அவரது பார்வை ஒவ்வாத உணர்வைத் தருகிறது. அந்த ஒவ்வாமை உண்மையை மறைக்கிறது. மூடப்பழமையிலேயே மூழ்கி முக்தியடையத் தூண்டுகிறது.

எம்.எஸ் ‘காற்றில் கரைந்த துயர்’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் டி.எம்.கிருஷ்ணா தனது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்கிறார். அது ஒருவகையில் காலத்தின் குரலும், காலத்தை மிஞ்சிய குரலும்கூட.  

“தனிநபர் என்ற முறையிலும் சமூகக் குழுவாகவும் நம்மைப் பற்றி நேர்மையாக நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லையென்றால், நஷ்டம் நமக்குத்தான். எம்.எஸ்.-ன் வாழ்க்கை, அதைவிட முக்கியமாக அதை நாம் பார்க்கும் விதம், கறாராகத் துருவி ஆராயப்பட வேண்டியது. இப்போதைக்கு கர்நாடக இசை உலகம் உண்மையைப் பார்க்க மறுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன். நாம் மேலும் திறந்த மனத்துடன் அனைவரையும் உள்ளடக்கும் இசைச் சமூகமாக உருவாகும் காலம் ஒன்று வரும் என்றும் நம்புகிறேன். அன்று எல்லா விடியங்களைப் பற்றியுமான நேர்மையான விவாதம், கருத்துப் பரிமாற்றம், கற்றல் ஆகியவை  சாத்தியப்படும். அன்று இசை புத்துயிர் பெறும்”

டி.எம்.கிருஷ்ணாவின் இந்த நம்பிக்கைக்கு அளிக்கப்படும் விருதுதான மியூசிக் அகாடமியின் இவ்வாண்டுக்குரிய சங்கீத கலாநிதி விருது. அவர் நம்புவதுபோல மனிதர் உணர்வை மனிதர் மதிக்கும். அப்படி ஒரு காலத்துக்கான அச்சாரமும் கூட.

நன்றி: காலச்சுவடு.

You might also like