மத கஜ ராஜா – பழையது ‘புதிதாக’த் தெரிகிறதா?!

ஒரு படத்திற்கான பூஜை விழா நடத்தப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடிந்து, குறுகிய கால இடைவெளியில் இதர பணிகளை நிறைவு செய்து அப்படம் தியேட்டரை வந்தடைவது ஒரு வகை. அதற்கு நேரெதிராக, ஒரு படமானது உருவாக்கத்தில் பல முறை தாமதங்களைச் சந்தித்து தியேட்டரை வந்தடைவதென்பது இன்னொரு வகை. இவ்விரண்டுக்கும் நடுவே பல வகையில் திரைப்படங்கள் உருவானதை நாம் கண்டு வருகிறோம். மிகச்சில நேரங்களில், சில ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு படங்கள் வெளியாவதும் நிகழ்ந்திருக்கிறது.
புதிதாகத் தயாரிக்கப்பட்டவையே பழைய படங்கள் போன்று காட்சி தரும் திரையுலகில், இந்தப் பழையவை புதியவையாக தோற்றம் தருமா என்பதே மிகப்பெரிய சவால். அப்படியொரு சவாலைத் தாங்கி வந்திருக்கிறது சுந்தர்.சியின் ‘மத கஜ ராஜா’.
2013 பொங்கல் வெளியீடாக வந்திருக்க வேண்டிய இப்படம், இன்று (ஜனவரி 12) வெளியாகியிருக்கிறது.
விஜய் ஆண்டனி தந்த ’டியர் லவ்வரு’, ‘சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி’ பாடல்கள் ஏற்கனவே ‘ஹிட்’ என்பதால், அப்பாடல்களோடு சேர்ந்து படத்தின் திரைக்கதையும் ‘புதியது’ போன்று அனுபவத்தைத் தருகிறதா என்ற கேள்விக்கான பதிலே ‘மத கஜ ராஜா’வின் யுஎஸ்பியாக இருக்கிறது.
சரி, படம் அதற்கென்ன பதில் சொல்கிறது?

கதைன்னு ஒண்ணு தேவையா?
நண்பர்கள் வாழ்வில் நிகழ்ந்த கஷ்டங்களுக்குத் தீர்வு காணும் வகையில், அரசியல் செல்வாக்குமிக்க ஒரு பெரும்புள்ளியோடு நாயகன் நேருக்கு நேர் மோதுவதுதான் ‘மத கஜ ராஜா’வின் மையக்கதை.
சரி, அந்த நாயகன் தனது நண்பர்களின் கஷ்டங்களை அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வேண்டுமே? அதிலிருந்துதான் இப்படத்தின் திரைக்கதை தொடங்குகிறது.
சிறு வயதில் அந்த நண்பர்களுக்கு விளையாட்டு ஆசிரியராக (சரத் சக்சேனா) இருந்தவரின் மகளுக்குத் திருமணம். அதில் நால்வரும் கலந்துகொள்கின்றனர். மத கஜ ராஜாவைத் (விஷால்) தவிர மற்றனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மனைவி, குழந்தைகள் என்று வாழ்ந்து வருகின்றனர்.
அதிலொரு நண்பர் (சந்தானம்) தனது மனைவி, குழந்தையைப் பிரியும் சூழலில் இருக்கிறார்.
இன்னொருவர் (சடகோபன் ரமேஷ்) தற்காலிக வேலை நீக்கத்துக்கு ஆளாகிச் சிறை சென்று ‘பெயிலில்‘ வந்திருக்கிறார்.
மற்றொருவர் (நிதின் சத்யா), தன்னை நம்பிக் கடன் வாங்கி கைத்தறி நெசவு செய்து ஆடைகளைத் தந்தவர்களுக்குப் பணம் தர முடியாமல், அந்த துணிகளை தீ விபத்தில் பறி கொடுத்துவிட்டு ‘நிர்க்கதியாக’ நிற்கிறார்.


முதலாமவரின் பிரச்சனையைச் சரி செய்யும் ராஜா, மற்ற இருவரின் பிரச்சனைகளுக்கு ஒரு நபர் மட்டுமே காரணம் என்றறிகிறார். அவரது பெயர் கற்குவேல் விஸ்வநாத் (சோனு சூட்). அவரை எதிர்க்கும் திறன் ராஜாவுக்குக் கிடையாது. ஆனாலும் நண்பர்களுக்காக அதனைச் செய்கிறார். பிறகு என்னவானது என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ்.
உண்மையைச் சொன்னால், ‘கதைன்னு ஒண்ணு தேவையா’ என்று கேட்காத குறையாக இப்படத்தில் காட்சிகள் நகர்கின்றன. பல இடங்களில் ‘லாஜிக் மீறல்கள்’ தலை தூக்குகின்றன. ஆனால், மனதோ ‘சுந்தர்.சி படத்துல அதெல்லாம் பார்க்கலாமா, தப்பு தப்பு’ என்று ‘கில்லி’ முத்துப்பாண்டி கணக்காக நம்மை அடக்கிவிடுகிறது. அதனால், மொத்தப்படமும் பழைய சோற்றைப் புதிதாக வாங்கிய தட்டில் வைத்து உண்ணும் அனுபவத்தைத் தருகிறது.
இறுதியாக, ‘சாப்பாடு ருசியா இருந்ததா, கெட்டுப் போகலையே’ என்ற கேள்வியைத் தவிர வேறெதுவும் நமக்குள் தோன்றுவதில்லை. அந்த வகையில் ரசனையோடு ருசியான உணவைப் பரிமாறியிருக்கிறார் சுந்தர்.சி.

சிரிப்புக்கு ‘கியாரண்டி’!
விஷால், அஞ்சலி, வரலட்சுமி தொடங்கி வில்லன் சோனு சூட், சந்தானம் என்று இப்படம் சம்பந்தப்பட்ட பலரும் திரை வாழ்வில் இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்துவிட்டனர். அதனால், அவர்களைப் பழைய மாதிரி பார்ப்பது அவரவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தை தரலாம். ஆனால், அதுவும் கூட ‘நாஸ்டால்ஜியா’வாக அமையும் வகையில் உள்ளன இப்படக் காட்சிகள்.

அஞ்சலி, வரலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆபாச எல்லையைத் தொடவில்லை. அந்த விஷயத்தில் தான் ஒரு ஜித்தன் என்று மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் சுந்தர்.சி.
இப்படத்தில் அஜய் ரத்னம், ஜான் கொக்கன், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், சரத் சக்சேனா, சுதா, விச்சு விஸ்வநாத், லொள்ளு சபா சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர், முத்துகாளை, சத்யா, கே.எஸ்.ஜெயலட்சுமி ஆகியோரோடு நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், விஷால், சந்தானம் கூட்டனி அடிக்கும் லூட்டிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன.
இவர்களோடு மறைந்த கலைஞர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு ஆகியோருக்கும் இதில் முக்கியத்துவம் பெரிதாகத் தரப்பட்டுள்ளது.
ஆர்யா ஒரு காட்சிக்கும், சதா ஒரு பாடலுக்கும் ‘கௌரவமாக’த் தலைகாட்டியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்நாதன், படத்தொகுப்பாளர்கள் பிரவீன் கே.எல்.-ஸ்ரீகாந்த் என்.பி., கலை இயக்குனர் குரு ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனர் சுந்தர்.சியின் மனப்பிம்பங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இப்படத்தில் ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’, ‘டியர் லவ்வரு’, ‘சற்று முன்வரை’, ‘தும்பக்கி தும்பை’ என்று அனைத்து பாடல்களையும் ‘ஹிட்களாக’த் தந்திருக்கிறார்.


பின்னணி இசையும் படத்தின் வேகத்தோடு இணைந்து நிற்கிறது.
’மத கஜ ராஜா’வைப் பார்க்கும் எவருக்கும், ’இது சமகாலத் திரைப்படம் போலில்லையே’ என்று தோன்றுவது இயல்பு. ’இதெல்லாம் திரைப்படமாகவே தெரியவில்லையே’ என்று குறை சொல்கிற வகையில் படங்கள் வருகிற காலகட்டத்தில், இப்படியொரு குற்றச்சாட்டின் சத்தம் மெதுவாகத்தான் கேட்கும். அதுவே இப்படத்தின் பெரும்பலம்.
சுந்தர்.சியின் படங்களில் பெரும்பாலானவை காமெடி, ரொமான்ஸ், டிராமா, சென்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் பொழுதுபோக்கு சித்திரங்கள் தான். ‘மத கஜ ராஜா’வும் அந்த வரிசையில் சேரும்.
’சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்று ‘எவர்க்ரீன்’ கமர்ஷியல் படமாக மத கஜ ராஜா நிச்சயம் இருக்கும்’ என்று இயக்குனர் சுந்தர்.சி சில பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் இப்பட ரிலீஸுக்கு முன்பாகவும் இதனைச் சொல்லியிருக்கிறார். அவரது கருத்தை ‘ட்ரோல்’ செய்ய முடியாதவாறு ‘செமயான’ திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்.
அந்த வகையில், ‘பழையது’ புதிதாகத் தெரியாவிட்டாலும் ‘சிறப்பானதாக’த் தெரிகிறது. அது போதும் என்பவர்களுக்கு இந்த ‘மத கஜ ராஜா’ ஒரு பொங்கல் விருந்து..!

-உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like