காட்டுப்பன்றிகளைக் கொல்வது தான் தீர்வா?

காட்டுப்பன்றிகளைக் கொல்வதற்கு தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது. விளை நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதாக கூறி, விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு இந்த முடிவை எடுக்கிறது.

வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்தால் கொன்றுவிடலாம் என்றால், காடுகளுக்குள் புகுந்து வேட்டையாடுபவர்களுக்கு என்ன தண்டனை?

வேளாண் நிலங்கள் என்று சொல்வது காடுகளுக்கு வெளியே இருக்கும் நிலங்கள் மட்டுமல்ல. காடுகளுக்கு நடுவே இருக்கும் நிலங்களையும் சேர்த்து தான்.

காடுகளுக்கு நடுவில் இருக்கும் வேளாண் நிலங்களில் வன விலங்குகள் வருவதை எப்படித் தடுக்க முடியும்? வந்தால் கொன்றுவிடுவது ஒன்றுதான் தீர்வா?

ஒவ்வொரு காட்டுயிரும் இந்த உலகத்தில் சூழலை சம நிலையில் வைக்க, ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைகின்றன. காட்டுப்பன்றிகளும் அப்படித்தான்.

காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.

நீலகிரியில் ஊருக்குள் வந்ததாக புலிகள் சுட்டுக்கொல்லபட்டன. அவை ஊருக்குள் வருவதற்கான முக்கிய காரணமே இரை விலங்குகள் இல்லாததுதான்.

வால்பாறையிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் சிறுத்தைகள் ஊருக்குள் வருவது எதனால்? காட்டுப்பன்றிகளை கொன்றால் இரை விலங்குகளின் உணவில் தட்டுப்பாடு ஏற்பட்டு சிறுத்தைகள் ஊருக்குள் வருவது அதிகரிக்காதா?

கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருபவர்கள் சாலை ஓரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே கண்ணாடி பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

கவனக்குறைவோடு தூக்கி எறியப்படும் சிகரட் துண்டுகளால், காடுகள் தீப்பற்றி எரிகிறதே, அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

காடுகளுக்குள் வேகமாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களால், குரங்குகளும் மான்களும் வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கிறதே. அவர்களுக்கு என்ன தண்டனை?

சாலை ஓரங்களில் உண்டு விட்டு, தூக்கி எறியப்படும் மிச்ச உணவுகளால் சூழல் சீரழிவதும், ஞெகிழி பைகளை தூக்கி எறிவதால் அவற்றை உண்டு காட்டுயிர்கள் உயிரிழப்பதும் தொடர்கிறதே. அவர்களுக்கு என்ன தண்டனை?

காடுகளுக்குள் விதிமுறை மீறி கட்டிடம் கட்டுபவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

காடுகளை எவ்வளவு நாசம் செய்தாலும் மனிதர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. காட்டுயிர்கள் விளை நிலங்களுக்குள் வந்தால் மரண தண்டனையா?

ஒருவேளை காட்டுப்பன்றிகளுக்கும் ஓட்டுரிமை இருந்து, அவற்றுக்கும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கும் புத்தி இருந்தால், அவையும் கொல்லப்படாது இல்லையா?

நன்றி: பா.சதீஸ் முத்து கோபால்

You might also like