90 மணி நேர உழைப்பு என்ன தரும்?

ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலத்துடன் திகழ எப்படிப்பட்ட வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும்? குடும்பம், நட்பு, உறவு சூழ் வாழ்க்கைமுறை என்னென்ன பலன்களை வாழ்வில் தரும்?

இவை அனைத்துமே வெவ்வேறுவிதமான கேள்விகள். ஆனால், ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மனிதர், அவரைச் சார்ந்தவர்களின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தும் வகையிலானவை. தேவையான அளவுக்கு உழைப்பும் ஓய்வும் இருந்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கைமுறை நீடிக்கும் என்பதே இக்கேள்விகளுக்கான பதில்களில் இருந்து நாம் பெறுவதாக உள்ளது. அதுவே நம்மில் பெரும்பாலானோரின் கனவாகவும் உள்ளது.

இதனைக் குலைக்கும்விதமாக ஏதேனும் ஒரு கருத்தாக்கம் உருவாகும்போது அல்லது பரப்பப்படும்போது, அது நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் வெகுகாலம் தொடரும். அந்த வகையில், கடந்த சில நாட்களாக எல் & டி நிறுவனத் தலைவர் சீனிவாசன் பேசிய காணொலி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது பணியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “வாரத்திற்கு 90 மணி நேரம் உழைத்தால் சீனாவைவிடப் பெரிய சக்தியாக இந்தியா மாறும்” என்று கூறியிருக்கிறார்.

அதே காணொலியில், “ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை வேலை செய்ய வைத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். வீட்டில் எத்தனை மணி நேரம் தான் உங்கள் மனைவியை நீங்களும், அவர்கள் உங்களையும் பார்த்துக் கொண்டே இருக்க முடியும். நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்து வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ஒரு நிறுவனத் தலைவர் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதும், அதன் கீழ்நிலையிலுள்ள பணியாளர்கள் அன்றைய தினம் பணியாற்றுவதும் நிச்சயம் ஒரேமாதிரியான பலன்களைத் தரப் போவதில்லை என்பது நாம் அறிந்ததே.

ஆனால், ”எனது நிறுவனத்திற்குப் பணி செய்து கிடப்பதைத் தவிர வேறொரு வாழ்க்கை உங்களுக்குத் தேவையில்லை” என்று பணியாளர்களை நோக்கி அவர் அறைகூவல் விடுப்பதுதான் சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்வதுதான் வளர்ச்சிக்கு வித்திடும் என்று இன்போசிஸ் முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி பேசியதை ஒத்தது இந்த உரை.

அது மட்டுமல்லாமல், சீனாவில் 90 மணி நேரம் ஊழியர்கள் வேலை பார்ப்பதால் தான் அந்நாடு வளர்ச்சி கண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. முதலாளித்துவப் பார்வையில் அது சரியானதும் கூட. ஆனால், நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அந்த பணியாளர்கள் சரியான உடல் மற்றும் மனநலத்தோடு இருக்கிறார்களா என்பதை அறிவது இன்னும் அவசியமானது. அதனைச் சோதிக்க, அளந்து பார்க்க ஏதேனும் வாய்ப்புகளைப் பற்றி இந்த நபர்கள் சிந்தித்திருப்பார்களா?

நிச்சயமாக, இது பொதுவுடைமை சார்ந்த கருத்துகள் இல்லை. மிகச்சாதாரணமான பாமரன் மனதில் எழுகிற கேள்விகள் இவை.

அதிக உழைப்பு அதிகப் பலன் தரும் தான். ஆனால், அது தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டுமானால், சிறிது இடைவெளி நிச்சயம் தேவை. நிலத்தைப் பண்படுத்தப் பயிர் சுழற்சி முறையைக் கண்டறிந்த நம் முன்னோர்களுக்கு, இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டறிவதா பெரிய விஷயம்?!

ஓய்வு தேவையா?

உழைப்புக்கும் ஓய்வுக்குமான வித்தியாசம் குறைவாக இருப்பது மிக நல்லது. இதனை யார் சொன்னது என்று யோசிக்கத் தேவையில்லை. நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை அவ்வாறாகத்தான் இருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமாகக் குளித்து, சாப்பிட்டு, பொழுதைக் கழிக்கலாம் என்கிற மனோபாவம் அவர்களிடத்தில் இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ‘எந்நாளும் நன்னாளே’ கதை தான்.

ஆனால், நாம் அப்படியா இருக்கிறோம்?

துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, வார நாட்களுக்குத் தேவையானவற்றைத் திட்டமிட்டுச் செய்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு அளவளாவுவது, விரும்புகிற கேளிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்வது என்று பல விஷயங்களைச் செய்வதற்கான நாட்களாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இருக்கின்றன. பல பேருக்கு ஞாயிறு மட்டும்தான் ஓய்வளிப்பதாக இருக்கிறது.

அவ்வார வார விடுமுறைகளைப் பெறாத சிலர், வாரத்தில் ஏதாவது ஒருநாள் ஓய்வை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆறு நாட்கள் வேலை என்றால் ஒருநாள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற சிந்தனை இதன் பின்னிருக்கிறது. ஆனால், இயற்கை சார்ந்த வாழ்வில் அதற்கு இடமே கிடையாது.

எல்லா நாட்களும் வேலை நாட்களாகவும், ஓய்வு நாட்களாகவும் அவர்களுக்குத் தென்படுவதே அதற்கான காரணம். அப்படிப்பட்ட மக்களில் பலர் சுயசார்பு வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ‘நானே ராஜா நானே மந்திரி’ என்கிற மனப்பாங்கும் அதன் பின்னிருக்கிறது.

யாரோ ஒரு முதலாளியிடத்தில், ஏதோ ஒரு நிறுவனச் சூழலில் வேலை பார்ப்பவர்களிடம் அந்த மனநிலையைக் காண முடியாது.

ஆக, வாரம் முழுவதும் வேலை செய்யத் தயாராக இருக்கும் மனநிலைக்குப் பின்னால் பொருளாதாரம் சார்ந்த சுதந்திரம் இருக்கிறது. யாரோ ஒருவரின், ஏதோ ஒன்றில் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய தேவை இல்லாமல் இருப்பது அவசியம் ஆகிறது.

இப்போது, எல் & டி சீனிவாசன் சொன்னதை நினைத்துப் பார்க்கலாம். அவரது மனநிலை இப்படிப்பட்ட சுயசார்பு உள்ள மக்களையே பிரதிபலிக்கிறது. ஆனால், அதே மனநிலையை அவரது நிறுவனப் பணியாளர்களிடத்தில் எதிர்பார்ப்பது அதீதம். நிச்சயமாக, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. மாறாக, அதனைச் செயல்படுத்தினால் என்னவாகும்?

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்தில் ‘அண்டா காகசம் அபுக்கா ஹு ஹுகும்’ என்று ஒலி எழுப்பியவுடன் குகை வாசலைத் திறக்கச் சக்கரங்களைச் சுழற்றும் அடிமைகளைப் போலத்தான் நம் நிலை அமையும்.

இந்த இடத்தில், சீனிவாசனையோ, அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையோ குறை சொல்வது நம் நோக்கமில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பணியாளர்கள் வேலை பார்ப்பதைக் காண விரும்புகிற அந்த மனப்பாங்கைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

இதேபோல, இன்னும் பல நிறுவனத்தலைவர்கள் யோசிக்கத் தொடங்கினால் ‘தலையைக் குனியும் தாமரைகளாக’ எந்நேரமும் வேலை குறித்த சிந்தனையிலேயே வாழும் மனிதர்களாகப் பலர் மாறிவிடுவார்கள்.

எந்திரத்தனமான மனிதர்களிடம் ஏற்படும் பிசகுகள், எந்திரங்களில் உண்டாகும் கோளாறுகளை விட மோசமானவையாக இருக்கும். ஆதலால், அது போன்ற தவறுகள் நிகழாமல் தடுப்பதே சாலச் சிறந்தது.

சரி, இப்போது இந்த விவாதத்திற்கு என்னதான் தீர்வு என்ற கேள்வி எழலாம்.

வேலைக்கும் ஓய்வுக்குமான வித்தியாசம் நிச்சயம் தேவை. அப்படித் தேவையில்லை என்ற நிலை ஏற்பட வேண்டுமானால், இரண்டுமே ஒன்றுதான் என்றெண்ணும் வகையில் உழைப்பின்போதும் ஓய்வின்போதும் ஒரேமாதிரியான உற்சாகம் பொங்கி வழிய வேண்டும். அயர்ச்சியைப் போக்க வேண்டிய அவசியம் எப்போதும் ஏற்படக் கூடாது.

அப்படியொரு வாழ்க்கைமுறை எல்லா பணியாளர்களுக்கும் கிடைக்கும் பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட எந்த விடுமுறை தினங்களையும் நினைத்துப் பார்க்காத மனப்பாங்கு பரவலாகிடும்.

ஆனால், அது நடைமுறைக்குக் கொண்டுவர ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் தியாகங்கள் நிகழ்ந்தால் பத்தாது. ஒரு அமைப்பின் இண்டு இடுக்குகள் முதல் ஒட்டுமொத்தமான மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். ஏனென்றால், ஒரு கோளத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் நிகழும் மாற்றங்கள் எப்போதும் தேய்வுக்குத்தான் வழி வகுக்கும்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like