பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை!
சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபைத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து இந்த மசோதா தொடர்பாக பேசிய முதலமைச்சர், “பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது.
மின்னணு உள்ளிட்ட பல்வேறு வழிமுறை மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குகிறது தமிழக அரசு. பெண்களுக்கு துன்புறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் விடுவிக்காதபடி சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்டத் திருத்தம் வகை செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த சட்டத் திருத்தம் மீதான விவாதம் நாளை நடக்க உள்ளது.