லாரன்ஸ் மாஸ்டருக்கு வயசு ‘50’!

தமிழ் திரையுலகில் முகம் காட்டிய எவரானாலும், அவர்களுக்கென்று தனியான ரசிகர் கூட்டம் இருக்குமென்று உறுதிபட நம்ப முடியும். ஏனென்றால், மிகச்சிறிய வேடங்களில் நடித்தவர்களையும் ரசித்து, விசிலடித்து உற்சாகப்படுத்துவது நம்மவர்களின் வழக்கம்.

அதனாலேயே, அப்படிப்பட்ட பாத்திரங்களில் நடித்தவர்கள் பின்னாட்களில் பிரதான வேடங்களை ஏற்று நடித்து பெரிய நாயகர்களாகவும் மிளிர்ந்திருக்கின்றனர். அந்த வரிசையில் இடம்பெறும் நட்சத்திரங்களில் ஒருவர், ராகவேந்திரா லாரன்ஸ்.

பன்முக ஆளுமை!

முருகையன் – கண்மணி தம்பதியரின் மகன் லாரன்ஸ். இவரது சகோதரர் எல்வின். வட சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் இவருடையது. ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக இருந்தவர். பிறகு, ரஜினிகாந்தின் பார்வையில் பட்டு நடனக்கலைஞர்கள் சங்கத்தில் சேர்ந்தார்.

பிரபுதேவாவின் குழுவில் இடம்பிடித்த லாரன்ஸ், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வந்த ஜெண்டில்மேன், முட்டா மேஸ்திரி, அல்லாரி பிரியடு உட்படப் பல படங்களில் நடனமாடியிருக்கிறார். இடைவிடாமல் பல படங்களின் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், குறுகிய காலத்தில் நடன இயக்குனராகவும் ஆனார். அந்த வேகம் தான் லாரன்ஸின் சிறப்பம்சம்.

ஸ்டண்ட் நடிகராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி நடனக்கலைஞராக மாறி, பின்னர் நடன இயக்குனராக உயர்ந்து, அதன் தொடர்ச்சியாக நடிகராகவும் பரிமளித்தவர். இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பல அடையாளங்கள் பெற்ற இவர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்துபவராகவும் நம் மனதில் இடம்பிடித்திருக்கிறார். அவரது பன்முக ஆளுமை வியப்பைத் தருவது.

ரஜினி ‘பார்முலா’!

சிறு வயதில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக இருந்தவர் லாரன்ஸ். முதலில் படங்கள் வழியே பரிமளித்த அந்த அன்பு, பின்னாட்களில் அவரை நேரில் பார்த்தபிறகு இன்னும் அதிகமானது. ‘உழைப்பாளி’ திரைப்படத்தின்போது அவர்களிடையே அறிமுகம் ஏற்பட்டது. இன்று வரை அந்த இறுக்கம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. உண்மையைச் சொன்னால், லாரன்ஸ் நடனக் காட்சிகளில் வெளிப்படுத்தும் பாவனைகளில் தொடங்கி நாயகனாக நடித்தது வரை பல இடங்களில் அதன் பிரதிபலிப்பைக் காண முடியும்.

’அமர்க்களம்’ படத்தில் ’காலம் கலிகாலம் ஆயிப் போச்சுடா’ என்ற பாடல் வழியே தமிழில் எண்ட்ரி ஆனார் லாரன்ஸ். அதன் இயக்குனர் சரணின் அடுத்த படைப்பான ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் வில்லனாக நடித்தார். பாலச்சந்தரின் ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் மாதவனோடு இன்னொரு நாயகனாகத் தோன்றினார். அந்த வரிசையில் குணால் உடன் அவர் நடித்த சூப்பர்குட் பிலிம்ஸின் ‘அற்புதம்’ திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு அறிமுகத்தைத் தந்தது. படிப்படியாக அமைந்த இந்த வளர்ச்சியும் அதில் இருந்த வேகமும் பலருக்குக் கிட்டாதது.

தனது நடிப்பு, நடனத்தால் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் அறிமுகமான லாரன்ஸ், தெலுங்கில் மாஸ், ஸ்டைல், டான், ரெபல் என்று வரிசையாகச் சில ‘பக்கா’ கமர்ஷியல் படங்களை இயக்கினார்.

அதேநேரத்தில், தமிழில் தான் நாயகனாக நடிக்கும் படம் வித்தியாசமானதொரு அனுபவத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அதற்கேற்ப, ‘முனி’ படத்தை இயக்கி, நாயகனாக நடித்தார். காமெடி, ஹாரர் பிணைந்திருந்த அந்தப் படம் பெரிய கவனிப்பைப் பெறவில்லை.

ஆனால், அந்த கலவையை மிகச்சரியாகக் கொண்டிருந்தது அதன் அடுத்த பாகமாக அமைந்த ‘காஞ்சனா’. அப்படம், அவரை அனைவருக்கும் பிடித்த நாயகனாக மாற்றியது.

இடைப்பட்ட காலத்தில் தனது இமேஜ் உடன் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் அமைந்த பாண்டி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களின் வழியே ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

ஆனாலும், தொடர்ந்து ‘ஹீரோயிசம்’ தூக்கலாகத் தெரிகிற வகையிலான திரைக்கதைகளையே தேர்ந்தெடுத்தது அவரது திரை வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தியது.

காஞ்சனா சீரிஸ் படங்கள் தவிர்த்து மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, ருத்ரன், சந்திரமுகி 2 போன்றவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம், லாரன்ஸ் பின்பற்றிய ‘ரஜினி பார்முலா’ தான்.

என்னதான் பாவனை, உடல்மொழியில் ரஜினியைப் பிரதிபலித்தாலும், திரையில் அவரது ஸ்டைல், கதைத் தேர்வு மற்றும் கதாபாத்திர வார்ப்பில் அவரது பாணியைப் பின்பற்றுவது ரசிகர்களின் வெறுப்பையே அதிகம் பெற்றுத் தரும். ஆனால், தொடக்கத்தில் கிடைத்த வரவேற்பைக் கணக்கில் கொண்டு அதையே தனது பாதையாக்கினார் லாரன்ஸ். அதற்கான பலன் முழுமையாகத் தெரிந்தபிறகே, தன்னைப் புதிய இயக்குனர்களிடத்தில் தரத் தயாரானார்.

கார்த்திக் சுப்புராஜ் தந்த மாற்றம்!

கார்த்திக் சுப்புராஜின் படத்தில் ராகவா லாரன்ஸின் திரை பார்வையில் ஏற்பட்ட மாற்றம் நன்கு தெரிந்தது.

அந்தப் படத்திலும், அவரது பாத்திரம் ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. ஆனால், அது அவரது முந்தைய படங்களைப் போன்று இருக்கவில்லை. ‘அதீதம்’ என்று சொல்லும்படியாகச் சில விஷயங்கள் இருந்தாலே போதுமானது என்பது அப்படத்தில் நன்கு தெரிந்தது. ’எதிலும் அதீதம்’ என்று அதுவரை லாரன்ஸ் படங்களில் தென்பட்ட ஒரு விஷயம் அதில் அறவே இல்லை.

‘ரஜினி பார்முலா’ என்பது ரஜினிக்கே சவால் விடுக்கக் கூடியது. ‘பாபா’, ‘லிங்கா’ உள்ளிட்ட சில சுமார் வெற்றிப் படங்களில் நம்மால் அதனை உணர முடியும். பொருட்காட்சியில் மரணக்கிணறு சாகசத்தைச் செய்யும் மோட்டார் வாகன ஓட்டிகள், அடுத்த கணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஓடுவதற்கு ஒப்பானது அந்த பார்முலாவை பின்பற்றுவது. அதிலிருந்து ரஜினியே வெளிவர வேண்டும் என்று அவரது தீவிர ரசிகர்கள் துடிக்கத் தொடங்கி நெடுநாட்களாகிவிட்டது.

அந்த விஷயத்தில், இப்போதுதான் ராகவா லாரன்ஸ் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.

அடுத்து அதிகாரம், பென்ஸ், கால பைரவா, புல்லட் உட்படச் சுமார் அரை டஜன் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். நிச்சயமாக, அவை அவரது முந்தைய படங்கள் போன்று இருக்காது என்று உறுதிபட நம்பலாம். ஏனென்றால், பழைய கதைகளையே புதிய பாணியில் தருவதைத்தான் இன்றைய ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அந்த உண்மையைப் புரிந்துகொண்டு, தனது பாணி பாத்திரங்களை, கதைகளை, கதைத் தேர்வினை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ராகவா லாரன்ஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம்.

ஐம்பதில் அடியெடுத்து வைத்துள்ள ராகவா லாரன்ஸ் மாஸ்டர், அடுத்து வரும் நாட்களில் வித்தியாசமான திரையனுபவத்தைத் தனது நடிப்பு மற்றும் இயக்கத்தின் வழியே வழங்க வேண்டும். ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ போன்று அவை இரட்டிப்பு உற்சாகத்தை நிறைக்க வேண்டும்..!

  • மாபா
You might also like