நீண்ட காலமாக பத்திரிகை உலகிலும் காட்சி ஊடகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுந்தரபுத்தனின் தந்தையான ஒளிச்செங்கோ 90-வது வயதில் இன்று (09.01.2025) காலை மறைந்திருக்கிறார்.
திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக இறுதிவரை வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து, ‘பெரியவன்’ என்கிற நாவலை நேற்று மாலை தான் சென்னை புத்தகக் காட்சி சாலையில் பல நண்பர்களின் பங்கேற்புடன் அவர் வெளியிட்டிருந்தார்.
‘பெரியவன்’ நாவல் குறித்து, அந்த வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், நாவலின் மையக் கதாபாத்திரமாகத் திகழ்ந்த அவரது தந்தை ஒளிச்செங்கோ பற்றியும் பேசினார்கள்.
இறுதிக் காலம் வரைக்குமான அவருடைய திராவிட மயமான உணர்வை நினைவுகூர்ந்தார்கள்.
இந்த வெளியீட்டு விழாவெல்லாம் முடிந்த நேற்று இரவே அந்த நாவல் வெளியீடு பற்றிய பெருமித உணர்வுடன் தன்னுடை நினைவுகளை முகநூலில் பகிர்ந்திருந்தார் சுத்தரபுத்தன்.
காலத்தின் விநோதம் இன்று அதிகாலை அவர் மறைந்து, இன்று மாலை அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
பெரியாரியவாதியாகவே வாழ்ந்து மறைந்த ஒளிச்செங்கோ அவர்களுக்கு எளிய அஞ்சலி.
நேற்றைய தினம் சுந்தரபுத்தன் தனது முகநூலில் பகிர்ந்த பதிவு:
*****
சென்னை புத்தகக் காட்சியின் தமிழ்வெளி அரங்கு. மனம் மகிழ்ந்திருக்கிறது. எளிய நிகழ்வுதான். ஆனால், அதைப் பற்றியே இரண்டொரு நாட்களாக யோசித்திருந்தேன்.
இப்படி நிறைவாக நடக்குமென்று நினைக்கவில்லை. அளப்பரிய பேரன்பைக் காட்டி நெகிழவைத்து விட்டார்கள் நண்பர்கள். நன்றி என்ற ஒற்றைச் சொல் மட்டும் போதாது.
பள்ளித் தோழர் கல்யாணராமன் (மாநிலக் கல்லூரி முதல்வர்) ‘பெரியவன்’ நாவலை வெளியிட கலை விமர்சகர் இந்திரன், எக்ஸ்நோரா தலைவர் செந்தூர் பாரி இருவரும் பெற்றுக்கொண்டு சில நிமிடங்கள் பேசினார்கள்.
பட்டாம்பூச்சி பிடிப்பது முதல் ஊரில் உலவும் பறவைகள் வரை நுட்பமாக கிராமத்தை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார் இந்திரன்.
கலைஞர்களை பொருளாதாரத்தை வைத்து மதிப்பிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார் செந்தூர் பாரி.
பள்ளிக் காலங்களின் நினைவுகளைப் பசுமையுடன் பகிர்ந்துகொண்ட ராமன், நான் தொடர்ந்து எழுதவேண்டும் என்றார்.
என்.ஸ்ரீராம், எஸ். ராஜகுமாரன், பிருந்தா சாரதி, ராசி அழகப்பன், பாபு கவிதா விலாசம், மேனா உலகநாதன் உள்ளிட்ட நண்பர்கள் என்னைப் பற்றியும் நாவல் பற்றியும் பாராட்டிப் பேசினார்கள்.
நாவலில் டைம் அண்ட் ஸ்பேஸ் சரியாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார் சந்தியா நடராசன்.
புத்தகக் காட்சி அரங்கில் சிறப்புரை ஆற்ற வந்திருந்த மதிப்பிற்குரிய பாரதி கிருஷ்ணகுமார், தமிழ்வெளி அரங்கிற்கு வந்து என்னை வாழ்த்தியது நெகிழ்வான தருணம்.
ஒரு கோடை நாளில் திடீரென பெய்த பெருமழைபோல மகிழ்ச்சி. அதேபோல வந்து பெருமை சேர்த்தார் வழக்கறிஞர் சுமதி.
என் அழைப்பை ஏற்று வந்திருந்த நண்பர்கள் மானா பாஸ்கரன், புனிதஜோதி, தேனி கண்ணன், அருள்செல்வன், இயக்குநர் எம்ஆர் பாரதி, சிதம்பரம், நந்தகுமார், சக்திவேல், திரவியம், பேராசிரியர் சங்கர்தாஸ், பலராமன்…
பால்நிலவன், நியூஸ்7 ஜோ. மகேஷ்வரன், ஏக்நாத், ஹெல்த் குணா, நா.வே. அருள், வேணுகோபால், இளம்பரிதி, வே. ராமசாமி, பேராசிரியர் சீதாபதி ரகு உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.
‘தமிழ்வெளி’ கலாபனின் அக்கறையும் நண்பர்களின் பேரன்பும் ‘பெரியவன்’ நூல் வெளியீட்டை வெற்றியாக மாற்றிவிட்டன. பெரும் இருளடர்ந்த காட்டின் நெடுந்தூரப் பயணத்தில் கிடைத்த மின்மினிப் பூச்சியின் சிறு ஒளியாக இந்த நிகழ்வை உணர்கிறேன்.
அதுதான் தொடரும் பயணத்திற்கான கலங்கரை விளக்காக அமையும் என நம்புகிறேன். ‘பெரியவன்’ என்னை நெகிழவைத்திருக்கிறார்.
தமிழ்வெளி அரங்கில் (106 – 107) விற்பனைக்குக் கிடைக்கும்.
பக்கங்கள்: 208
விலை ரூ. 300/-
தொடர்புக்கு: 9094005600