திரையை நோக்கிக் காத்திருக்கும் ‘மத கஜ ராஜா’க்கள்!

ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும்போது, அப்படக்குழுவினர் தவிர்த்து வேறு பலரும் மகிழ்ச்சியடைவார்கள்.

காரணம், அந்த படத்தின் நாயகன், இயக்குனர் அல்லது அதில் இடம்பெற்ற முக்கியமான கலைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட முந்தைய தயாரிப்புகள் அதுவரை இருட்டைச் சந்தித்திருக்கும்.

வெளிவராமல் முடங்கிய அப்படங்கள், இந்த ஒரு வெற்றியால் வெளிச்சத்தைக் காணும். மூச்சை இழுத்துப் பிடித்து ஆசுவாசப்பட்டுக்கொள்ளும்.

எண்பதுகள், தொண்ணூறுகளில் நாயகர்கள் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததும், சில படங்களின் தோல்வியால் பின்னர் நிறைவுற்றவற்றின் கதி அதலபாதாளத்திற்குச் சரிவதும், அந்த காலகட்டத்தில் சகஜமான விஷயம்.

‘ஜென்டில்மேன்’ வெற்றிக்குப் பிறகு, அந்த கவனிப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக அர்ஜுன் நடித்த சில படங்கள் வெளிவந்தன.

தமிழில் முன்னணி நாயகர்களாக இருந்தவர்களில் தொடங்கி அவ்வப்போது வெற்றிகளைக் கொடுத்த அடுத்த நிலை நாயகர்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும்.

ஆனால் அஜித், விஜய் முன்னணிக்கு வந்தபிறகு அந்த வழக்கம் முற்றிலுமாக மாறிப் போனது. அவர்கள் இருவருமே மிக நிதானமாகத் தேர்வு செய்து ஆண்டுக்கு ஓரிரு படங்களில் நடிப்பதென்று மேற்கொண்ட முடிவு தான் அதற்குக் காரணம். அதனால், முழுமையாக நிறைவுற்று திரையரங்கை அடையாமல் போன படங்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

அதையும் மீறிச் சில தனிப்பட்ட பிரச்சனைகள், பொருளாதாரக் காரணங்களால் திரையை எட்ட முடியாமல் முடங்கிப் போன படங்களும் கணிசம். அந்த வரிசையில் இடம்பெற்ற ஒரு திரைப்படமே ‘மத கஜ ராஜா’. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த இப்படம் 2013 ஜனவரி 14அன்று வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

 கிட்டத்தட்டப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, பல முறை திரையரங்கில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, அம்முடிவு திரும்பப்பெறப்பட்ட அப்படம், தற்போது ஒருவழியாக ரசிகர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வரலட்சுமி, அஞ்சலி இருவரும் நாயகிகளாக நடித்துள்ள இதில் சோனு சூட், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, சுப்பராஜு, ஜான் கொக்கன், ராஜேந்திரன், அஜய் ரத்னம், சுதா, சுவாமிநாதன், விச்சு விஸ்வநாத், ஜெயலட்சுமி மற்றும் மறைந்த கலைஞர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி ஆகியோரின் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

சரி, இதே போன்று திரையைத் தொட முடியாமல் தவிக்கிற படங்களில் சிலவற்றை அறிவோமா?

இடம் பொருள் ஏவல்

சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் லிங்குசாமி இதனைத் தயாரித்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட். அந்த ஒரு காரணத்தைத் தாண்டி, ஒரு மலைப்பிரதேசத்தைக் கதைக்களமாகக் கொண்டிருப்பதால் இப்போது வெளியானாலும் கவனிப்பைப் பெறும்’ என்கிற எதிர்பார்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இப்படம்.

காதல் 2 கல்யாணம்

ஆர்யாவின் சகோதரர் சத்யா நாயகனாகவும், ‘பொல்லாதவன்’ திவ்யா ஸ்பந்தனா நாயகியாகவும் நடித்த படம் இது.

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த மிலிந்த் ராவ் இதனை இயக்கினார். யுவன் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்களும் ஹிட் ரகம் தான்.

மோகன்தாஸ்

எஃப் ஐ ஆர், கட்டா குஸ்தி வெற்றிகளுக்குப் பிறகு வந்திருக்க வேண்டிய விஷ்ணு விஷால் படம் இது. இரண்டு, மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டும், இன்று வரை தியேட்டர்களை வந்தடையாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் படக்குழுவினருக்கே வெளிச்சம்.

சுமோ

வணக்கம் சென்னை படத்தைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் ஜோடியைக் கொண்டு இயக்குனர் எஸ்.பி.ஹோசிமின் உருவாக்கிய படம் ‘சுமோ’. கிட்டத்தட்ட ‘மான் கராத்தே’ வகையறா கதை என்பதை ரசிகர்களே உணர முடியும் என்றாலும், ‘நிச்சயமாகச் சிரிக்க வைக்கும்’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது இதன் ட்ரெய்லர்.

சதுரங்க வேட்டை 2

அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவான படம் இது. ஹெச்.வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ வெற்றிக்குப்பிறகு, அவரது எழுத்தாக்கத்தில் உருவான இப்படத்தை மனோபாலா தயாரித்திருந்தார். இப்போது வரை இப்படம் வெளியாவதற்கு எந்த அறிகுறிகளும் தென்படுவதாக இல்லை.

டைட்டானிக் காதலும் கவுந்து போகும்

சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படத்தில் கலையரசன், ஆனந்தி ஆஷ்னா ஜவேரி, காளி வெங்கட், சேத்தன் உட்படப் பலர் நடித்திருந்தனர். நிவாஸ் பிரசன்னா இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் சிலருக்குப் பிடித்தமானவை.

பார்ட்டி

மாநாடு படத்திற்கு முன்னதாகவே ‘டைம் லூஃப்’ சங்கதியில் வெங்கட்பிரபு திரைக்கதை அமைத்த படம் இது. இத்தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்தவர் ‘பார்ட்டி’ படத் தயாரிப்பாளர் டி.சிவா.

மொரிஷியஸில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, அதனால் பெற வேண்டிய சில சலுகைகளைப் பெற முடியாமல் தவிப்பதால் இப்படம் தாமதமாவதாகச் சொல்லப்படுகிறது. ‘தி கோட்’ வெளியீட்டின்போது, ’2024 டிசம்பருக்குள் பார்ட்டி வெளியாகும்’ என்று அறிவித்திருந்தார் சிவா.

இதே போன்று, இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி சிறகுகள்’ படமும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள இப்படத்தை ‘மூடர்கூடம்’ இயக்குனர் நவீன் இயக்கியிருக்கிறார்.

ரெண்டாவது படம்

‘தமிழ்ப்படம்’ தந்த இயக்குனர் சி.எஸ்.அமுதனின் ‘இரண்டாவது படம்’ இது. விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் ரிஷி, விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், சஞ்சனா சிங், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதுவும் தமிழ் திரையுலகம் சார்ந்த நடைமுறைகளைச் சகட்டுமேனிக்குக் கிண்டலடிக்கிற ‘ஸ்பூஃப்’ படம் என்றே சொல்லப்படுகிறது.

இறவாக்காலம்

மாயா, கேம் ஓவர் படங்கள் தந்த அஸ்வின் சரவணன் இயக்கிய படம் இது. எஸ்.ஜே.சூர்யா, வாமிகா கபி, ஷிவதா, ஹரீஷ் பேரடி, அம்ஜத் கான் என்று வித்தியாசமான ‘காஸ்ட்டிங்’கை கொண்ட படம். சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியொன்றில், ‘இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச்’ சொல்லியிருந்தார்.

வா டீல்

‘றெக்க’, ‘சீறு’ படங்களை இயக்கிய ரத்தினசிவா அறிமுகமாகவிருந்த படம் ‘வா டீல்’. அருண் விஜய், கார்த்திகா நாயர் இதில் நடித்திருந்தனர்.

தடையறத் தாக்க, மலை மலை போன்று வித்தியாசமான கமர்ஷியல் படமாக இது இருக்குமென்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் இது.

இப்போது வரை இப்படம் வெளிவராமல் முடங்கிப் போயிருப்பதற்கான காரணம் என்னவென்றே தெரிய வரவில்லை.

மிஷ்கினின் ‘பிசாசு 2’, விஜய் சேதுபதி நடித்த இந்தி, தமிழ், தெலுங்கு ட்ரைலிங்குவலான ‘காந்தி டாக்ஸ்’, அரவிந்த் சாமி நாயகனாக நடித்த ‘கள்ளபார்ட்’, ‘வணங்காமுடி’, கார்த்திக் நரேனின் ‘நரகாசுரன்’, ஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று இந்த வரிசையில் இடம்பெறுகிற படங்கள் எண்ணிக்கை நீள்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி முடங்கிய படங்கள் என்று ஒரு பட்டியலை நம்மால் வரிசைப்படுத்த முடியும்.

முழுமையாகத் தயாரானபின்னும் அவை வெளியாகாமல் போனதற்கு உள்ளடக்கத்தின் தரம், அதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் முந்தைய வெற்றிகள், தயாரிப்பாளரின் முடிவுகள் என்று பல காரணங்கள் இருக்கின்றன.

இவற்றில் சில, ‘மத கஜ ராஜா’ போல ஒரு திரைப்படமாக ரசிகர்களை மகிழ்விக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டவை. அந்த ஒரு காரணமே, இப்படங்களை நாம் நினைவுகூரவும் காரணமாக இருக்கிறது.

– மாபா

You might also like