இன்றும் என்னை வாழ வைக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்!

நடிகை சரோஜாதேவி நெகிழ்ச்சி

“நடிகர், இயக்குநர், முதல்வர் என பன்முகங்களைக் காட்டிய என் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சின்னவர் அவர்களுக்கு இந்த ஆண்டு (2017) நூற்றாண்டு விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உண்மைதான். என்னை பொறுத்தவரை அவர் மறையவில்லை. என் நினைவில், நெஞ்சத்தில் மட்டுமல்ல லட்சோப லட்சம் மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்று பலரும் அவரைப் பற்றி பேசினாலும், அவருடன் அதிகமான படங்களில் நடித்த என்னைவிட அவரைப் பற்றி யார் அதிகமாக பேசிவிட முடியும் என்று பலரும் கேட்பார்கள்.

ஒவ்வொரு முறையும் அவரது பண்பையும், அன்பையும் ஒருசேர நான் நேரில் பார்த்துள்ளேன். ‘நாடோடி மன்னன்’ படத்தில்தான் நான் அறிமுகமானேன். இன்னும் சொல்லப்போனால் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து தான் வண்ணம் ஆரம்பமாகும்.

தான் அறிமுகப்படுத்தும் நாயகிக்கு நல்ல முறையில் அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதில், அவர் மிகுந்த கவனமாக இருந்தார். பல சமயங்களில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட அவர் சொல்வார்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு அபாயகரமான காட்சியில் யார் நடித்தாலும் முதலில் எம்.ஜி.ஆர்., அவர்களே நடித்து பிரச்சனை இல்லை என்று தெரிந்த பிறகுதான் அவர்களை நடிக்கச் சொல்வார். அவர் செட்டிற்கு வந்தாலே ஆயிரம் சூரியன் வந்ததுபோல் இருக்கும். அந்தத் தளமே பிரகாசமாக ஆகிவிடும்.

அவரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யார் நேரில் வந்தாலும், முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தானே பேச ஆரம்பிப்பார்.

இந்த பண்பு இன்றும் பலரிடம் இல்லை. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும், முதலில் நாம் அறிமுகம் செய்துகொண்டால் எதிரில் இருப்பவர் மகிழ்ந்து சகஜமாக பேசுவதற்குத் தயாராகி விடுவார்.

இதைச் சின்னவர் (இன்றுவரை அவரை நான் இப்படித்தான் அழைப்பேன். பெரியவர் எங்கள் எல்லோருக்கும் சக்கரபாணி அண்ணன்தான்) பலமுறை செய்து நான் பார்த்துள்ளேன்.

என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7. அவருடைய பிறந்த நாள் 17. அவர் என்றுமே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அவரது ரசிகர்கள்தான் கொண்டாடுவார்கள். பலமுறை அவரது பிறந்தநாளில் அவர் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.

என்னுடைய பிறந்தநாள் அன்று காலையில் எனக்கு வரும் முதல் தொலைபேசி வாழ்த்து எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வரும்.

என் வீட்டில் எனது தாயார் சத்யநாராயணா பூஜை செய்வார். ஒருமுறை என் பிறந்தநாளில் நேராக மனைவி ஜானகி அம்மாவுடன் காலையிலேயே வந்து விட்டார்.

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்னம்மா சத்யநாராயணா பூஜை செய்து கொண்டிருந்தார். ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன்றுதான் என்று என் அம்மா சொன்னவுடன் ஒன்றும் சொல்லாமல் என்னை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

என்னம்மா சொன்னால் நான் என்றுமே தட்ட மாட்டேன். ஒருமுறை நான் ஆணையிட்டால் படம் என்று நினைக்கிறேன்.. நான் ஷூட்டிங்கில் பிரேக் விட்டதும் அசதியாக வந்து உட்கார்ந்தேன்.. எனக்கு அசைவ பிரியாணியை அளித்தார் எம்.ஜி.ஆர்.

இன்று சனிக்கிழமை அதனால் நான் அசைவம் சாப்பிட மாட்டேன் இது அம்மா சொன்னது என்று கூறினேன். சூட்டிங் 12 மணியைத் தாண்டிவிட்டது.. இப்பொழுது சாப்பிடலாமே! என்றார். எங்களைப் பொறுத்தவரை சூரிய உதயமானால்தான் அடுத்தநாள்.. காலையில் 6 மணிக்குதான் அடுத்த நாளே பிறக்கும்.. இதுவும் என் அம்மாதான் சொல்லியுள்ளார்கள் என்றேன்.

தன்னுடன் அமர்ந்திருந்த பலரிடம் இந்தச் சின்ன வயசிலே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேட்கிறா பாரு! என்று சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவர் எப்பொழுதுமே நமது கலாச்சாரம், பண்பாடு இவைகளை பின்பற்றினால் பெருமைப்படுவார். அவரிடம் எந்த ஒரு தீய குணத்தையும் நான் பார்த்ததில்லை. அதேபோல் மற்றவர்களைத் தவறாக பேசியதும் இல்லை. இதை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று.

நடிகர்கள் எங்கே போனாலும் மக்கள் கூடி விடுகிறார்கள். அதனால் கடைக்கோ அல்லது தெருவிலோ நடந்து போக முடியவில்லை என்று நாங்கள் அவரிடம் குறைபட்டோம். இதை மனதில் கொண்டு, ஒரு நாள் முழுவதும் பல்வேறு கடைகளை கோல்டன் ஸ்டூடியோவில் அமைத்தார்.

அவர்களும் சந்தோஷமாக வர நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்றோம். ஒரு நகைக்கடையும் அதில் உள்ள ஒரு நெக்லஸையும் பார்த்து ஆசைப்பட்டு நான் வாங்க விரும்பினேன்.

கடைக்காரர், “இந்த நெக்லஸை சாவித்திரி அம்மாள் முதலிலேயே வாங்கிவிட்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து விட்டார்” என்றார். இதைக் கேட்ட என் முகம் சுருங்கிவிட்டது. எனக்கு அந்த நெக்லஸை வாங்க முடியாததில் ரொம்ப வருத்தம்.

அதற்கு பிறகு நாங்கள் நடித்த படம் ‘தாயை காத்த தனயன்’. இந்தப் படத்தை தயாரித்தது தேவர் பிலிம்ஸ். ஆனால் அதை வாங்கி வெளியிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்.

அதன் வெற்றி விழாவில் எனக்கு முன் மேடைக்குச் சென்று அசோகன், ஒரு சின்ன பெட்டியுடன் இறங்கி வந்தார். என் பெயர் அழைத்தபோது நான் சென்று மேடையில் நின்றேன். ஒரு பெரிய பெட்டி என் கையில் கொடுக்க நான் வாங்கி வந்தேன். கீழே வந்து உட்கார்ந்தவுடன் மெல்ல திறந்து பார்த்தேன். என் கண்கள் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

எந்த நெக்லஸை வாங்க முடியவில்லை என்று வருத்தப்பட்டேனோ, அந்த நெக்லஸ் எனக்குப் பரிசாக மேடையில் பெறப்பட்டவுடன் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் சொந்தத் தாயை விட ஒருபடி மேலே சென்று அன்பைப் பொழிபவர் எம்.ஜி.ஆர். அவர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட நான் அழைத்தால், உடனே என்னை தொடர்பு கொண்டு பேசும் அன்பாளர்.

கடைசிவரை என்னை தனது கட்சியில் சேரவேண்டும் என்று அவர் சொன்னது இல்லை. எம்.ஜி.ஆர் இன்று அல்ல என்றுமே என்னை வாழ வைக்கும் தெய்வம்.

– 2017-ல் வெளிவந்த ‘தினமணி’ தீபாவளி சிறப்பு மலருக்காக நடிகை சரோஜாதேவி எம்.ஜி.ஆரைப் பற்றி பகிர்ந்து கொண்ட நினைவுகள்.

நன்றி: தினமணி.

You might also like