வாசகன் என்பவன் முகம் தெரியாதவன். அந்த வாசகனுக்கு வயது, பாலினம் போன்றவை கிடையாது. எந்த நிலையில் படிக்கிறான் என்பதும் தெரியாது. ஆனால் அந்த வாசகனுக்கும் எனக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது.
புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே, அவன் என்னை நம்பத் தொடங்குகிறான். என்னோடு இணைந்து பயணம் செய்கிறான். பல நேரங்களில் என்னைப் போலவே, அவனும் இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறான்.
அதனால் வாசகனை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், ஒரு வாசகன் என்பவன் புத்தகத்தினுடைய இணை எழுத்தாளன்.
அவன் வாசித்தலின் வழியாக எழுத்தாளனாகிறான். நான் எழுதுதலின் வழியாக எழுத்தாளனாகிறேன். இந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. அதனால் வாசகனைத் தனிப்பட்ட ஆளாகப் பார்க்க முடியாது.
மேலும் என் மனதில் எப்போதும் ஒரு வாசகனைக் கூடவே வைத்துள்ளேன்.
நான் வளரும்போது என்னோடு சேர்ந்து அவனும் வளர்ந்து வருகிறான். இருவரும் இடைவெளியற்று விவாதம் செய்கிறோம். பரஸ்பரம் தெளிவு பெறுகிறோம். எஜமானன், பணியாள் உறவுபோல எழுத்தாளன் வாசகன் இடையே உறவு இருக்க முடியாது.
- எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன்