ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயத்தின் சில மணித்துளிகள் முன் ஆர்.நல்லகண்ணுவை சந்தித்து, கடந்த காலங்களைப் பேசி அசைபோட முடிந்தது.
அரசியல் களத்தில் வயது முதிர்ந்த தலைவர்கள் பலரும் இன்று இந்திய அளவில் இல்லை. எங்கள் நெல்லைச் சீமையின் புதல்வர் அருமைக்குரிய தலைவர் நல்லகண்ணு ஒரு நூற்றாண்டை எட்டி ஒரு தத்துவத்தைப் போல நலமாக இருக்கிறார்.
நல்லகண்ணுவுக்கும் எனக்குமான அறிமுகம் 1970-ல் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். எங்கள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமி அவர்கள் மூலம் அவர் திருநெல்வேலியில் வைத்து எனக்கு அறிமுகம்!
செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் (பாளையங்கோட்டை) படித்த மாணவர் லூர்து நாதன் காவலர்களால் தாக்கப்பட்டு தாமிரபரணி படுகொலையில் 1972 இல் இறந்தபோது நான் ஸ்தாபன காங்கிரசில் இருந்தேன்.
இந்தப் படுகொலைப் பற்றி விசாரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் எம். கல்யாணசுந்தரம் அவர்களை சோ. அழகிரி சாமி அழைத்து வந்தபோது நான் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து உரையாடினேன்.
பிறகு அழகிரிசாமி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி சார்பில் நின்று பணியாற்றியபோது தோழர் நல்லகண்ணு அவர்கள் எங்களது குருவிகுளம் வட்டாரத்தில் தேர்தல் பணியாற்ற வந்தார்.
அந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து மதியம் உணவு உண்டபின் சற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு மீண்டும் கிராமங்களுக்குப் பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அப்போது மஞ்சளும் கருப்புமாக பெயிண்ட் அடிக்கப்பட்ட வாடகை கார் தான் கிடைக்கும்! 1970 1980களில் இப்போது உள்ளது போல பல வகையான ஏசி கார்கள் எல்லாம் கிடையாது.
அந்த ஒரே காரில் நானும் நல்லகண்ணுவும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் கைகளில் மைக் வைத்துக்கொண்டு மேலே ஒலிபெருக்கிகளைக் கட்டி கிராமத்தின் புழுதி சாலைகளில் பிரச்சாரத்திற்கு போவோம். உடன் கோடங்காள் கிருஷ்ணசாமி, பிதப்புரம் ராமசுப்பு, குளத்துள்ளபட்டி கிருஷ்ணசாமி இருப்பார்கள்.
பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், (மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம்) ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.
இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை.
அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை 1958-ல் திருமணம் செய்து கொடுத்தார்.
தென்காசி தோழர் எஸ். பலவேசம் செட்டியார் அவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது தன்னிடம் பயின்ற மாணவன் நல்லகண்ணுவிற்கு உலக அரசியல் சமூக கல்வி இவற்றை பயிற்றுவித்து மாணவனுக்கு பொதுவுடமை சிந்தனையை உருவாக்கினார். தோழர் நல்லகண்ணுவை கம்யூனிஸ்ட்காரராக உருவாக்கியதில் இவருக்கு பெரும் பங்குண்டு.
இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவன்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ, நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.
நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை ‘ஓடும் குடிகள்’ என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்.
நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது.
அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். நான்குநேரி ஜீயர் மடத்தை எதிர்த்து வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, என். வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடனாநதி (Gadana nathi), தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது.
கடனாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. தாமிரபரணி வரை கடந்திருந்த தொலைவு 43 கிலோமீட்டர்.
சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சொக்கம்பட்டி அருகே கருப்பாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைதான் கருப்பாநதி அணை (Karuppanadhi Dam).
இந்த அணையின் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. இந்த நீரவள ஆதாரங்களுக்கும் நல்லகண்ணு போராடினார்
1986இல் அழகிரி சாமியோடு எனது திருமணத்திற்கு வந்த நல்லகண்ணு, கலைஞரையும் சந்தித்தார்! அதே நாளில் தான் கலைஞர் பிரபாகரனை சந்தித்தார்!
நதிநீர் குறித்தும் நல்லகண்ணு நூல் எழுதி வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 1983இல் தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி நான் தொடுத்த உச்சநீதிமன்றத்தின் வழக்கு குறித்தும் என்னிடம் விசாரிப்பார்.
கங்கைகொண்டனில், கொக்கக்கோலா கம்பெனிக்கு தாமிரபரணி தண்ணீரைத் தருவதை எதிர்த்துப் போராட்டமும் நடத்தியுள்ளார் நல்லகண்ணு.
தன்னுடைய 86 வயதிலும் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நல்லகண்ணு போராடினார். கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில், அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அமர்வு விசாரணையின்போது நேரடியாக ஆஜராகி நல்லகண்ணு வாதாடினார்.
தாமிரபரணி ஆறு செல்லும் இடத்தின் மணல் திட்டில் கொங்கராயன் குறிச்சி, ஆறாம் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளதைக் கூறி அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நல்லகண்ணு வாதிட்டார்.
அதன்பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலவியல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் முனைவர் சந்திரசேகர், அதே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் சேஷஷாயி ஆகியோர் கொண்ட ஆணையத்தை நீதிமன்றம் நியமித்தது.
அந்தக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது.
நல்லக்கண்ணுவின் கட்சிப் பணிகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக்கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.
மூத்த தலைவர் அம்பை கோமதி சங்கர தீட்சிதர் உடன் மோதுவார். ஆனால் அவர்மீது அன்பும் காட்டுவார். 1980ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார்.
அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர். நேரடியாகப் பிரசாரம் செய்தார். 1999-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார்.
தொ.மு.சி ரகுநாதன், கு.அழகிரிசாமி, .நா.வானமாமலை, கிரா, தி.க.சி, ஜேக்கப் வாத்தியார் என பல இலக்கிய ஆளுமைகள் இவருக்கு தோழர்கள். கரிசல் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
எனது ‘நிமிர வைக்கும் நெல்லை’, ‘கனவாகிப் போன கச்சத்தீவு’, ‘தமிழகம்-50’ போன்ற நூல்களின் வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்த புத்தகங்களுக்கு அணிந்துரையும் வழங்கினார்.
சென்னையில், என்னுடைய ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கிரா -75, 85 விழாவிலும், புதுவையில் நடைபெற்ற கிரா-95 விழாவிலும் நல்லகண்ணு கலந்துகொண்டார்.
1970 – 1980-களில் நெல்லையிலிருந்து சென்னை வந்தால் அழகர்சாமி எம்.எல்.ஏ. அறையில் தங்குவார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தமிழர் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர், அமெரிக்கா செல்ல விசா கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அப்போது, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் சென்று விசா பெற்றுத் தந்தேன்.
இப்படி ஆர்.என்.கே குறித்த பல பசுமையான நினைவுகள், எண்ணங்கள்! அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்லாண்டு வாழ்க!!