சென்னை புத்தகக் காட்சி: சில அற்புத கணங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்ற போது பலதரப்பட்ட அரங்குகள், பலதரப்பட்ட சந்திப்புகள். உற்சாகம் மிகுந்தப் பேச்சுக்கள்.

பலதரப்பட்ட எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை ஒருசேர இம்மாதிரியான நிகழ்வில் சந்திக்க முடிவது, புத்தகக் காட்சிக்கான பலம்.

நேற்று புத்தகக் காட்சிக்குப் போனபோதும் உயிர்மெய் அரங்கில், நண்பர் மனுஷ்ய புத்திரனை பார்த்தபோது என்னுடைய ‘சொல்வது நிஜம்’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதை தன்னுடைய முகநூலிலும் பகிர்ந்திருக்கிறார்.

நண்பர் இளம்பரிதியை அவருடைய பரிதி பதிப்பக அரங்கில் சந்தித்தபோது, அங்கும் என்னுடைய 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பல நூல்களுக்கு சிறப்புத் தள்ளுபடி விலையை அறிவித்திருந்தார்.

நேற்று மாலை என்னுடைய இன்னொரு நூலான ‘தமிழர்கள் எதில் குறைந்து போய்விட்டார்கள்’ என்ற நூலை தமிழர்த் தேசிய இயக்கத் தலைவரான ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் நேரடியாக வந்து பதிப்பாளரான இளம்பரிதி இடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக டிஸ்கவரி புக் பேலஸ்-க்கு போனபோது அங்கும் பரவலாக வாசகர்கள் கூட்டம் இருந்தது. அங்கும் என்னுடைய மூன்று புத்தகங்கள் குறிப்பாக ‘ஊடகம் யாருக்கானது’ என்ற புத்தகம் உட்பட மூன்று புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

நண்பரும் எழுத்தாளருமான இந்திரனை அவருடைய அரங்கில் பார்க்க முடிந்தது. எப்போதும் போல உற்சாகம் பொங்கிய குரலோடு உரையாடிக் கொண்டிருந்தார் இந்திரன். இதேபோல் நா.வே. அருள் உட்பட பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.

முகநூல் வழியாக அறிமுகமாகிய பல நண்பர்களையும் புத்தகக் காட்சியில் பார்க்க முடிந்தது.

புத்தக விற்பனையைப் பொறுத்தவரை நேற்றுதான் விற்பனை சற்று கூடியிருப்பதாக பதிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இருந்தாலும் பரவலாக இளைஞர்கள் அதிகமாக பார்வையாளராக அங்கு வந்திருப்பதை பார்ப்பது ஒரு மகிழ்வான தருணமாக இருக்கிறது.

– மணா

You might also like