‘ஆதிமூலம் அழியாக் கோடுகள்’.
1998 ஆம் ஆண்டு மறைந்த நவீன ஓவியரான கே.எம். ஆதிமூலம் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வந்ததைப் பற்றி தற்போது நினைக்கும் போதும் பல ஆச்சரியங்கள்.
நினைவில் அழுந்திப் பதிகிற விதத்தில் பழகியவரான ஆதிமூலம் அவர்களின் மறைவு, என்னைப் போன்ற நண்பர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தியது.
அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய ஒரு நூலைக் கொண்டு வர வேண்டும் என்ற வேகம் மனதில் எழுந்திருந்தது.
அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் போது, பல எழுத்தாளர்கள், பல ஓவியர்கள், ஆதிமூலத்தின் பல நண்பர்கள் பேசிய அஞ்சலிக் கூட்டத்தில் அவர்களுடைய பேச்சைப் பதிவு செய்திருந்தேன்.
அதன் பிறகு அடுத்தடுத்து அவருடன் நெருங்கிப் பழகிய பல நண்பர்கள், அவருடைய நெருங்கிய உறவினர்கள், அவருடைய குடும்ப வாரிசுகள் உட்பட அனைவரையும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தித்து, அதை ஒளிப்பதிவு நாடாவில் பதிவு செய்தேன்.
அது எழுத்து வடிவம் பெற்றபோது, மனதில் எப்படியாவது அந்த நூலை விரைவில் கொண்டு வர வேண்டும் என்கின்ற முனைப்பு மட்டுமே முதன்மை பெற்றிருந்தது.
கையெழுத்துப் பிரதியாகவே முழுக்க எழுதியதில் வலது கையின் ஆள்காட்டி விரல் வீக்கம் கண்டிருந்தது.
பிறகு டைப் செய்து, அதை லே அவுட் செய்து, அதை நூல் வடிவில் கொண்டு வருவதற்கு பல நண்பர்கள் பெரிதும் உதவினார்கள்.
ஆதிமூலத்தின் நண்பரும் நவீன ஓவியருமான ட்ராஸ்கி மருது கொடுத்த உழைப்பு அபாரமானது.
அதேபோல் தான் அவருடைய நெருங்கிய சகாவும் நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமியும் நண்பர் புதுவை இளவேனிலும் ஆதிமூலத்தை வித்தியசமாக எடுத்த பல கருப்பு வெள்ளை புகைப்படங்களை அளித்து அந்த நூலுக்கு பெருமை சேர்த்தனர்.
ராயப்பேட்டை அலுவலகத்தில் உள்ள லே அவுட் ஆர்டிஸ்டான பஷீரின் அலுவலகத்தில் மிக விரைவாக மூன்று நாட்களுக்குள் அந்த புத்தகம் இரவு பகலாக வடிவமைக்கப்பட்டபோது ட்ராஸ்கி மருது, நண்பர் கூத்தலிங்கம் உள்ளிட்ட பலர் ஒத்துழைப்பு அளித்தனர். இதேபோல், இடைவிடாமல் உற்சாகம் கொடுத்தார் ‘உயிர் எழுத்து’ பதிப்பகத்தை அப்போதுதான் துவக்கி இருந்தவரான நண்பர் சுதிர் செந்தில்.
அவருடைய ‘உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவந்தது ‘ஆதிமூலத்தின் அழியாக் கோடுகள்’ என்கின்ற நூல்.
ஆதிமூலம் மறைந்த பிறகு 15 நாட்களுக்குள் நூலாக்க வேலைகளை நிறைவு செய்து, அச்சுக்கு அனுப்பி 25 நாட்களுக்குள் சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் அதற்கான வெளியீட்டு விழாவும் நடந்தபோது அதற்கு பெரிதும் ஒத்துழைப்புக் கொடுத்தவர் ஓவியரும் திரைக் கலைஞருமான சிவகுமார் அவர்கள்.
ஆதிமூலத்தின் குடும்பத்தினருடைய பங்களிப்பு மிகவும் மகத்தானதாக இருந்தது.
எழுத்தாளர்கள் பிரபஞ்சன், மாலன், சா.கந்தசாமி, திரைக்கலைஞர் நாசர் மற்றும் நவீன ஓவியர்கள் இவர்களுடன், முந்தின தினம்தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையிலும் வந்து கலந்து கொண்டவர் ஜெயகாந்தன்.
அப்போது ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்த போதும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு, அந்த நூலை பெற்றுக்கொண்டு ஆதிமூலத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர் திரை கலைஞரான கமலஹாசன்.
230 பக்கங்களுக்கு மேல், பல்வேறு நினைவுப் பதிவுகளுடன் ஆதிமூலத்தின் வண்ண ஓவியங்களும், கோட்டோவியங்களும் நிறைந்த இந்த நூலைப் பற்றி தன்னுடைய முகநூல் பதிவில் பாராட்டி எழுதியிருந்தார் எழுத்தாளரான ஜெயமோகன்.
முழுக்க ஒரு மனநிறைவு தந்த விழாவாக அது அமைந்திருந்தது. சுமார் 16 ஆண்டுகளைத் தாண்டியும் தற்போது நினைவில் ஒரு அற்புதத்தை தருவதுபோன்ற ஒரு உணர்வுடன் அந்த வெளியீட்டு விழாவும் வெளியிட்ட நூலும் அமைந்திருக்கிறது என்றால், அதற்கு முதற்காரணமாக அதை வெளியிட்ட நண்பர் ‘உயிர் எழுத்து’ சுதிர் செந்திலுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும்.
அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயகாந்தன், மேடையில் தனக்கு அருகிலிருந்த கமலிடம் இப்படிச் சொன்னார்:
“என்ன இவன் நூல் வெளி வருவதற்கு முன்பே மேடையிலேயே ராயல்டி வாங்குறான்…” என்று சிரித்தபடியே.
காரணம் அந்த விழா நடந்த மேடையிலேயே பதிப்பாளரும் நண்பருமான சுதிர் செந்தில் காசோலையாக அளித்த ராயல்டி தொகைதான்.
சில நினைவுகள் அழியாத ஓவியத்தை போல எப்போதும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன.
இதை சாத்தியப்படுத்திய நண்பர் சுதிர் செந்திலுக்கு காலம் கடந்தும் நன்றி சொல்ல வேண்டும்.
16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூல், தற்போது 48-வது சென்னை புத்தகக் காட்சியில், உயிர்மை அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கிறது.