தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.
இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.
இந்த விவகாரத்தில், ஒன்றிய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டில் இதுவரை இலங்கை கடற்படையினர் மொத்தம் 554 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், 72 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. .
தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.