ஒரு வெற்றிப் படத்தை ரீமேக் செய்யும் கலாச்சாரம் நீண்டகாலமாகத் திரையுலகில் இருந்து வருகிறது. புதிதாகக் கதை திரைக்கதை வசனத்தை எழுதி ஒரு படத்தை ஆக்குவதைவிட, வேறு மொழியில் வெற்றி பெற்ற படத்தை அப்படியே இன்னொரு மொழிக்கு நகலெடுப்பது எளிது என்பதே அதன் பின்னிருக்கும் காரணம்.
உரிய அனுமதியோ, உரிமையோ பெற்று ரீமேக் செய்வதற்கு நடுவே, எதையும் செய்யாமல் ‘சுட்டு’ எடுக்கும் போக்கும் இடையே புகுந்தது.
அதனால், குறிப்பிட்ட படத்தின் மையக்கதையை அல்லது சில காட்சிகளை, கதாபாத்திரங்களை மட்டும் அப்படியே வழிமொழிந்து, மீதமனைத்தையும் புதிதாக வடிக்கும் போக்கும் வந்தது.
தற்போது பல வடிவங்களில் ‘ரீமேக்’குகள் நம்மை வந்தடைகின்றன.
என்ன ஆனாலும், ‘ஒரிஜினல் படம் மாதிரி இருக்கிறதா’ என்று ஒப்பிடும் ரசிகர்களின் மனப்பாங்கு எல்லா காலத்திலும் அப்படியே இருக்கிறது.
அந்த வகையில், விஜய்யின் வெற்றிப்படமான ‘தெறி’யின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது?
கதை சொல்லணுமா?
கேரளாவில் மகள் குஷி, நண்பர் ஜாக்கி உடன் வசித்து வருகிறார் ஜான். ரொம்பவே பயந்த சுபாவம் உள்ளவராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறார்.
குஷியின் ஆசிரியையான தாரா (வாமிகா கபி), ஒருநாள் பெண் கடத்தலில் ஈடுபடும் கும்பலைப் பற்றிய உண்மைகளை அறிகிறார்.
அவர்களால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டுக் காவல்நிலையம் சென்று புகார் அளிக்கிறார். அப்போது, குஷியும் ஜானும் அவருடன் இருக்கின்றனர்.
தற்செயலாகக் காவல் நிலையத்துக்குள் நுழையும் ஜான் தனது அடையாளங்களை மறைக்க முயல்கிறார்.
ஆனால், அங்கிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி அவரைக் கண்டதும் ‘உங்களை நான் டேராடூன் ஐபிஎஸ் ட்ரெய்னிங்ல பார்த்திருக்கேன்’ என்கிறார். அதனைத் தாராவும் கவனிக்கிறார்.
அன்றிரவு, ஜான் வீட்டுக்கு அந்தக் கடத்தல் கும்பல் வருகிறது. ‘போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தது நீதானே’ என்று அடித்து உதைக்கிறது.
அப்போது, அந்தப் போலீஸ் அதிகாரி அங்கு வருகிறார். புகார் தந்த பெண்ணும் அவருடன் இருக்கிறார்.
‘அந்தப் பெண்ணை ஒப்படைச்சிட்டு உன்னோட மகளை அழைச்சிட்டு போ’ என்கிறார் அந்தக் கும்பலின் தலைவன். அப்போது, கடத்தப்பட்ட அந்தப் போலீஸ் அதிகாரியின் மகள் அழுதுகொண்டே வெளியே வருகிறார்.
அந்த நேரத்தில், அந்தக் கும்பலில் உள்ள ஒருவரை அந்தப் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்கிறார். உடனே, அனைவரையும் தீர்த்துக்கட்டும்படி கத்துகிறார் அந்தக் கும்பலின் தலைவன். அவ்வளவுதான்.
அமைதியின் உருவமாக இருக்கும் ஜான் ரௌத்திர வடிவம் எடுக்கிறார். அப்புறமென்ன? அதகளம் தான்.
‘இனிமேலும் கதை சொல்லணுமா’ என்பது போல, ‘தெறி’ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் அடுத்தடுத்து திரையில் ஓடுகின்றன.
ஜானின் உண்மையான பெயர் சத்ய வர்மா (வருண் தவன்). அவருடன் இருக்கும் ஜாக்கி, ஒரு கான்ஸ்டபிள். அவரது பெயர் ராம் சேவக் (ராஜ்பால் யாதவ்).
பெரிய ரவுடியான நானாஜி எனும் பப்பர் ஷேர் (ஜாக்கி ஷெராஃப்) உடன் சத்ய வர்மா மோதுவதும், கொடூரமான குற்றமொன்றில் ஈடுபட்ட காரணத்திற்காக அவரது மகன் அஸ்வினைப் பிடிக்க முயல்வதும் பிளாஷ்பேக் ஆக வருகின்றன.
அதனிடையே, டாக்டர் மீராவை (கீர்த்தி சுரேஷ்) சந்தித்து சத்யா காதலில் உருகுவதும், அவர்களது காதலைச் சத்யாவின் தாய் (ஷீபா சத்தா) ஏற்றாரா என்பதும் நிகழ்கின்றன.
அவர்கள் என்னவானார்கள்? மகளுடன் சத்யா ஏன் கேரளாவில் வசிக்கிறார்? நானாஜி என்னவானார் என்பதைத் தனியே சொல்ல வேண்டுமா? ‘தெறி’ படத்தின் ‘ஈயடிச்சான் காப்பி’யாக இப்படம் இருப்பதை இதற்கு மேலும் விளக்க வேண்டுமா?
ஆக, திரையில் முழுமையான ‘கமர்ஷியல்’ பட அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறது இந்த ‘பேபி ஜான்’.
அட்லீ இயக்கிய ‘தெறி’ படமே, பத்தாண்டுகளுக்கு முன்னர் வந்த தமிழ், தெலுங்குப் படங்களின் சாயலைத் தாங்கி நிற்கும்.
அதனால், இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்பச் சில காட்சிகளைச் சேர்க்கிறேன் என்று சிற்சில மாற்றங்களைப் புகுத்தியிருக்கிறார் இயக்குநர் காளீஸ்.
இரண்டு படங்களையும் பார்த்தவர்களால் மட்டுமே, ‘அந்த மாற்றங்கள் ஓகேயா, இல்லையா’ என்று சொல்ல முடியும்.
ஆக்கம் எப்படி?
இந்திப்பட உலகிலுள்ள இளம் நாயகர்களில் கமர்ஷியல் கதைகளாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அவற்றில் கொஞ்சம் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் வருண் தவன்.
இதிலும் ஜான் / சத்ய வர்மா ஆகத் தோன்றியிருக்கிறார். ‘தெறி’ பார்த்த நம்மை, ‘விஜய் அளவுக்கு இல்லை’ என்று சொல்லும்படியாகவே நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகச் செய்திருக்கிறது இப்படம். சமந்தாவை நினைவூட்டாத வகையில் இதில் நடித்திருக்கிறார்.
என்ன, ஒரு பாடல் காட்சியில் அரைகுறையான ஆடைகளில் தோன்றிக் கவர்ச்சி நடனம் ஆடும்போது ‘மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்ட ஆண்’ போன்று தோற்றமளிக்கிறார்.
தனது உடற்பயிற்சி முறைகளில் அவர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
வாமிகா கபி இதில் இன்னொரு நாயகி. ஒரிஜினல் படத்தில் வந்த ஏமி ஜாக்சனை விட இதில் அவருக்கு அதிக முக்கியத்துவம். ஆனால், அந்த மாற்றங்கள் நமக்கு போரடிக்கின்றன என்பதே உண்மை.
‘தெறி’யில் முதுமை ததும்பும் வில்லன் வேடத்தில் இயக்குனர் மகேந்திரன் தோன்றியதே ‘ப்ளஸ்’ ஆக இருந்தது. இதில், அந்தப் பாத்திரத்தைத் தெலுங்கு மசாலா படங்களே தோற்கும் அளவுக்கு வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் காளீஸ். அப்பாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப் தோன்றியிருக்கிறார்.
வழக்கம்போல, தனது வில்லத்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார் ஜாக்கி. ஆனால், அதுதான் இப்படத்தின் யுஎஸ்பியா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். படக்குழு மொத்தமாகக் கோட்டை விட்டிருக்கும் இடம் அது.
இவர்கள் தவிர்த்து வருண் தாயாக வரும் ஷீபா சத்தா, ராஜ்பால் யாதவ், ஜாகீர் ஹுசைன், பிரகாஷ் பெலவாடி உட்படப் பலர் இதிலுண்டு.
வருணின் குழந்தையாக நடித்துள்ள ஸார ஜியன்னா தனது ‘க்யூட்’ பாவனைகளால் கவர்கிறார். ஆனால், ‘மீனா பொண்ணு’ நைனிகா அளவுக்கு இல்லை.
இவர்களோடு நம்மூர் காளி வெங்கட்டும் ஜாபர் சாதிக்கும் தலைகாட்டிச் சிறிதளவில் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.
இறுதியாக, ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கிறார் சல்மான்கான். ‘பதான்’ படத்தில் ஷாரூக்கானோடு தோன்றுவாரே, அப்படி இதிலும் ‘லந்து’ பண்ணியிருக்கிறார். அது கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறது.
கிரண் கௌசிக்கின் ஒளிப்பதிவு திரையில் பிரமாண்டத்தை உணரச் செய்கிறது. வெவ்வேறு களங்களை அழகாகவும் காட்டியிருக்கிறது.
ரூபனின் படத்தொகுப்பில் காட்சிகள் சீராகத் திரையில் விரிந்து, ஒரு கதையைச் சொல்ல உதவியிருக்கின்றன.
முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு, ஒரிஜினலில் வந்த பல களங்களைத் திரையில் மறுஆக்கம் செய்திருக்கிறது. ஒரு கமர்ஷியல் படத்தில் களங்கள் எப்படி வடிவமைக்கப்படுமோ, அதனைச் சிறப்பாகத் தீர்மானித்திருக்கிறது.
இசையமைப்பாளர் தமன், தனது மொத்த வித்தையையும் இறக்கிச் சில பாடல்களைத் தந்திருக்கிறார். கேட்கும்போது, ‘ஓகே ரகம்’ ஆகவே தெரிகின்றன. ஆனாலும், தியேட்டரில் ‘பக்கெட் பாப்கார்ன்’ வாங்க மக்கள் எழுந்து செல்கின்றனர்.
பின்னணி இசையோ, ஏற்கனவே பார்த்த பல தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களை நினைவூட்டுகிறது. ‘தமன் ஏன் இப்படிச் செய்தார்’ என்று தெரியவில்லை. ஆனால், திரையில் பரபரப்பூட்டுவதில் பஞ்சம் வைக்கவில்லை.
இன்னும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன.
‘தெறி’ படமே ‘சத்ரியன்’ உட்படச் சில வெற்றி பெற்ற தமிழ் படங்களின் கலவையாகத்தான் தென்படும். அது போதாதென்று வேறு சில தெலுங்கு, தமிழ் படங்களின் காட்சிகளை, கதாபாத்திரங்களைப் புகுத்தி ‘தெறி பேபி’ என்று சொல்ல முயற்சித்திருக்கிறது இந்த ‘பேபி ஜான்’.
அட்லீயின் திரைக்கதையாக்கத்தோடு, தமிழில் வந்த ‘100’, தெலுங்கில் வந்த ‘விக்ரமார்குடு’ உள்ளிட்ட சில படங்களைத் தழுவிக் காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அதனால், பின்பாதிக் காட்சிகளில் ‘மசாலா’ வாடை மிக அதிகம்.
ஆனால், முதன்முறையாக இக்கதையைத் திரையில் பார்க்கும் ரசிகர்களால் அதனை உணர முடியாது.
அதனைப் புரிந்துகொண்டு, இந்தப் பிரமாண்டமான தயாரிப்புக்குத் திரை வடிவம் தந்திருக்கிறார் இயக்குனநர் காளீஸ்.
‘தெறி’ அனுபவம் கிடைக்கிறதா?
இதற்கு மேல் இடம்பெறுபவை ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், ‘அது வேண்டாமே’ என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.
உண்மையில், திரையில் ரசிகர்கள் ‘தெறி’க்கும் அனுபவத்தைத் தருகிறதா என்றால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
‘தெறி’ படத்தைப் பார்க்கும் எவருக்கும், கடைசி அரை மணி நேரக் காட்சிகள் கொஞ்சம் போரடிப்பதாகத் தென்படும். காரணம், அந்த கதையை முடிக்க வேண்டும் என்கிற அவசரம் திரையில் தெரியும்.
அது ‘பேபி ஜான்’ படத்தில் இருக்காது என்ற நம்பிக்கை, இப்படம் வரும் முன்னர் சில ரசிகர்களிடம் இருந்தது.
சூர்யாவின் ‘கஜினி’க்கும், அமீர்கான் ‘கஜினி’க்கும் இருக்கும் வேறுபாட்டை அறிந்தவர்கள் மட்டுமே இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை பாராட்டுவார்கள். ஆனால், அது போன்ற பாராட்டைப் பெறத் தவறியிருக்கிறார் இயக்குநர் காளீஸ்.
‘இதெல்லாம் க்ளிஷேவாக தெரியுதே’ என்று ‘தெறி’ ரசிகர்கள் புலம்பும்போது, அதில் இன்னும் கொஞ்சம் க்ளிஷேக்களை அள்ளித் தெளிக்கிற காரியத்தை அவர் செய்திருக்கிறார்.
வாமிகா கபி பாத்திரத்தின் பின்னணியைச் சேர்த்தது, ஜாக்கி ஷெராஃபை ‘டிபிகல் மசாலா பட வில்லன்’ ஆக காட்டியது, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஆகியன ‘சீக்கிரம் படத்தை முடிங்க சாமி’ என்று சொல்ல வைக்கிறது.
அனைத்துக்கும் மேலே, ‘தெறி படத்தின் இந்தி டப்பிங் பதிப்பு யூடியூப்பிலேயே கிட்டத்தட்ட 8 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டிருக்கின்றன’ என்பதை ‘பேபி ஜான்’ குழு மறந்திருக்கிறது.
‘என்ன, அப்படியே எடுத்து வச்சிருக்காங்க’ என்று சொல்லத்தக்க வகையிலேயே படம் இருக்கிறது.
அவர்களைப் பொறுத்தவரை, மேற்சொன்ன மாற்றங்கள் எல்லாம் ‘எறும்பு கடித்தாற் போல’த்தான்.
அதேநேரத்தில், ‘இல்லீங்க, இந்த ட்ரீட்மெண்ட் எனக்கு பிடிக்குது’ என்பவர்கள் ‘பேபி ஜான்’ படத்தைக் கொண்டாடுவார்கள். அவர்கள் இதனை வெற்றிப் படம் ஆக்குவார்கள்..!
-உதயசங்கரன் பாடகலிங்கம்
#இயக்குநர்_காளீஸ் #Director_Kalees #பேபி_ஜான் #Baby_john #விமர்சனம் #Review #தெறி_இந்தி_ரீமேக் #Theri_hindi_remake #வருண்_தவன் #Varun_dawan #கீர்த்தி_சுரேஷ் #Keerthi_suresh #ராஜ்பால்_யாதவ் #Rajpal_yadav #வாமிகா_கபி #Wamiqa_gabbi #ஜாக்கி_ஷெராஃப் #Jackie_shroff #ஷீபா_சத்தா #Sheeba_chaddha #ஜாகீர்_ஹுசைன் #Jaheer_hussain #பிரகாஷ்_பெலவாடி #Prakash_belawadi #காளி_வெங்கட் #Kali_venkat #சல்மான்கான் #Salman_khan #கிரண்_கௌசிக் #Kiran_kowshik #இசையமைப்பாளர்_தமன் #Musicdirector_thaman