தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியத் திரையுலகுக்குச் சென்று புகழ் பெற்ற நடிகைகள் என்று வஹிதா ரஹ்மான், வைஜெயந்தி மாலா, ஜெயபிரதா, ஸ்ரீதேவி, ரேகா என்று ஒரு சிலரை மட்டுமே சொல்ல முடியும்.
ஆனால், அங்கிருந்து இங்கு வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகைகள் என்று கணிசமான பேரைக் கூற முடியும். அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர் நடிகை நக்மா.
‘கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கவர்ச்சி டான்ஸ் ஆடுபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
வில்லி பாத்திரங்களை ஏற்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்றிருந்த வரையறைகளை உடைத்துச் சுக்குநூறாக்கிய பெருமை இவரைச் சேரும்.
குஷ்பு, ரோஜா, மீனா, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா என்று பெரும்படையே தமிழ், தெலுங்கு படங்களை ஆக்கிரமித்திருந்தபோது, அவர்களுக்கு நடுவே தனித்து ஜொலித்தார் நக்மா.
அதற்கு, சல்மான்கான் ஜோடியாக அவர் நடித்த முதல் இந்திப் படமான ‘பாஹி’ பெருவெற்றி பெற்றிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது.
அந்தப் பெருமையோடு வந்தவரைத் தெலுங்கு திரையுலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.
’பெட்டிண்டி அல்லுடு’ படத்தில் சுமன் ஜோடியாக நடித்த நக்மா, அதன்பின்னர் கில்லர், கரண மொகுடு, அஸ்வமேதம், மேஜர் சந்திரகாந்த், வாரசுடு, கொண்டபள்ளி ராஜா, அல்லாரி அல்லுடு என்று பல வெற்றிப்படங்களில் இடம்பிடித்தார்.
நாகார்ஜுனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், என்.டி.ராமாராவ், ராஜசேகர் என்று முன்னணி நாயகர்களோடு ஜோடி சேர்ந்தார்.
அந்தப் படங்களில் பல, நக்மாவை நல்ல உடற்கட்டு கொண்ட அழகியாக வெளிப்படுத்தின.
அலெக்ஸ் பாண்டியன், பிரதிநிதி, எங்க ஊர் சிங்கம், சூப்பர் போலீஸ், மனிதா மனிதா, வீரபுத்ரன், கலாட்டா மாப்பிள்ளை என்ற பெயர்களில் வெளியான சில தெலுங்கு படங்களின் தமிழ் பதிப்புகள் இங்குள்ள ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன.
இந்த காலகட்டத்தில் இந்தியிலும் ‘கிங் அங்கிள்’, ‘யால்கார்’ போன்ற படங்களில் தலைகாட்டினார்.
காண்டனீஸ், மாண்டரின், சீன மொழிகளில் தயாரான ‘க்ரீன் ஸ்நேக்’ படத்திலும் நடித்தார் நக்மா.
மேற்கண்ட வெற்றிகளே, தமிழில் மிகப்பிரமாண்டமான படத்தில்தான் அறிமுகமாக வேண்டுமென்ற கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
அதற்கேற்றாற்போல, ‘காதலன்’ படத்தில் நக்மாவை ஒரு தேவதையாகக் காட்டியிருந்தார் இயக்குனர் ஷங்கர்.
அதனைப் பார்த்த ரசிகர்கள் ‘என்னவளே.. என்னவளே..’ என்று உருகினர்.
ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கேமிரா பார்வையில், அந்தப் படத்தில் இடம்பெற்ற அளவுக்கு வேறெதிலும் நக்மா அழகழகாக வெளிப்பட்டதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
காரணம், அவருக்கான அறிமுகக் காட்சி முதல் பாடல்கள், இதர காட்சிகள் என்று எல்லாவற்றிலும் அழகாகத் தோற்றமளித்திருப்பார்.
அதனை மனதில்கொண்டே ஷங்கர், ஜீவா கூட்டணி அக்காட்சிகளை ஆக்கியிருந்தது.
’காதலன் படத்தில் இடம்பெற்ற நக்மாவா இது’ என்று கேட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது ‘பாட்ஷா’ படக்குழு.
அதனால், அவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடல் காட்சிகள் ஆக்கப்பட்டன. ‘தங்க மகனென்று’, ‘அழகு’ பாடல்களில் அதனை உணர முடியும்.
இவ்விரு படங்களை அடுத்து ‘ரகசிய போலீஸ்’ படத்தில் ‘மயில்தோகை அழைத்தால்’ என்று நடனமாடியிருந்தார் நக்மா. அதில் ‘பம்பாய் ரிட்டர்ன்’ பெண் ஆகவே வந்து போயிருந்தார்.
அந்த நேரத்தில்தான், ‘தெலுங்கு படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடிக்கிறாரே நக்மா’ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.
’அந்தக் குறையை நான் தீர்க்கிறேன்’ என்று தான் இயக்குனராக அவதாரமெடுத்த ‘வில்லாதி வில்லன்’ படத்தில் நக்மாவை நாயகியாக்கினார் சத்யராஜ்.
தமிழில் நக்மா நடித்த படங்களில், அவரை அதீத கவர்ச்சியில் காட்டிய படம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
1996இல் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மேட்டுக்குடி’ படங்களில் நடித்தார் நக்மா.
இவ்விரண்டிலும் காட்சிகளை விட பாடல்கள் ரசிகர்களிடையே பிரபலமானது.
அதன் தொடர்ச்சியாக பெரியதம்பி, அரவிந்தன், ஜானகிராமன், பிஸ்தா, வேட்டிய மடிச்சு கட்டு படங்களில் நடித்தார் நக்மா.
பிறகு முழுமையாக நாயகி வாய்ப்புகள் அருகி ‘தீனா’வில் ‘வத்திகுச்சி பத்திக்காதுடா’ பாடலில் அஜித்துடன் நடனமாடினார்.
அவரது வேண்டுகோளுக்கிணங்க, ‘சிட்டிசன்’ படத்தில் சிபிஐ அதிகாரியாக வந்து நம்மைச் சோதித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி உட்படச் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்தவர் நக்மா.
2005க்கு பிறகு மெல்ல திரையுலகை விட்டு ஒதுங்கியவர் அரசியலில் ‘பிஸி’ ஆனார். இப்போதும் காங்கிரஸ் கட்சியில் செயலாற்றி வருவது தனிக்கதை.
’பூவே உனக்காக’ படத்தில் ‘ஓ பியாரி பானிபூரி பம்பாய்நாரி நீதானேடி நக்மா.. நக்மா..’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இதனை எழுதியவர் கவிஞர் வாலி.
அவரே வர்ணிக்கும் அளவுக்கு அழகுப் பதுமையாக விளங்கியவர் நக்மா என்பதை மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களிடையே அவர் எந்த அளவுக்குப் புகழ் பெற்றிருந்தார் என்பதையும் இதன் வழியே அறியலாம்.
‘டைட்டானிக்’ படம் பார்த்தவர்களில் சில ரசிகர்களுக்கு எப்படி கேட் வின்ஸ்லெட் மீது காதல் பிறந்ததோ, கிட்டத்தட்ட அதற்கிணையான தாக்கத்தை ‘காதலன்’ படம் வழியே தந்தவர் நக்மா.
இன்று, அவர்கள் இருவருக்குமே அப்படங்களில் அவர்கள் காண்பது பிம்பங்களைத்தான்.
ஏனென்றால், தேவதைத்தனமான அழகு என்பது காலம் ஒருவருக்கு வழங்கும் மாயப்பொன்னாடை.
இளமையும் மகிழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்து உள்ளுக்குள் கிளைவிடும்போது, புறவுலகுக்கு அது அவ்வழகாக வெளிப்படும்.
இன்றளவும் அதற்கான உதாரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறார் ‘காதலன்’ காலத்து நக்மா.
அவருக்கு வயது 50 என்றால், அவரது தீவிர ரசிகர்களுக்கு நம்பக் கடினமாகத்தான் இருக்கும்.
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலகட்டத்தில் அழகாகக் காட்சியளிப்பார்கள்.
தன்னம்பிக்கையும் தற்சார்பும் மிகுந்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த வயதுக்குரிய அழகோடு மிளிர்வார்கள்.
காலம் அப்படிப்பட்ட வரத்தை நக்மாவுக்கு வழங்கட்டும்..!
மாபா