தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?

தேனிசை செல்லப்பா கேள்வி.

பதினொரு வயதில் அப்பா தவசிக்கண்ணு இறந்ததும் சட்டென்று நிர்க்கதியான நிலை செல்லப்பாவுக்கு. படித்துவந்த ஐந்தாம் வகுப்புப் படிப்பு அதோடு போயிற்று. நன்றாக இருந்த குடும்பத்தில் மரணம் திடீர் சரிவை ஏற்படுத்திவிட்டது.

அடுத்து என்னசெய்வது? வீட்டிலேயே அம்மா முத்தாத்தா வடை, பயிறு வகைகளைச் செய்து கொடுக்க, அதைப் பக்கத்துக் கிராமங்களுக்குப் போய் விற்று விட்டு வருவது செல்லப்பாவின் வேலை.

மேற்குத் தொடர்ச்சி மலையோரம் கடைய நல்லூருக்கு அருகில் உள்ள சிங்கிலிப்பட்டியிலிருந்து பக்கத்துக் கிராமங்களுக்கு நடந்தே விற்கப்போகிறபோது கிராமத்திலிருக்கும் ஊர்ச் சாவடிகளில் பெரியவர்கள் கூப்பிட்டுப் பாடச் சொல்வார்கள்.

பி.யூ. சின்னப்பா போன்றவர்களின் பாட்டை அப்படியே செல்லப்பா பாட, வியாபாரமும் நடக்கும். விற்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும்.

அலைச்சலான அந்த வாழ்க்கைதான் செல்லப்பாவுக்கு அடித்தளம்.

“எங்கப்பாவுக்கு அண்ணாமலைச் செட்டியாரின் காவடிச் சிந்து மனப்பாடம். அவர் பெரிய முருக பக்தர். வீட்டிலே ராகத்துடன் பாடுவார். அவருடன் கோயிலுக்குப் போகும்போது அவருடன் சேர்ந்து குழந்தையாக இருந்த நானும் பாடியிருக்கிறேன். அதனால் இந்த இசையும், தாளமும் சிறுவயதிலேயே பழக்கமாகிவிட்டது.

‘குபேர குசேலா’ படத்தில் பி.யூ. சின்னப்பாவின் பாடல்கள் வெளிவந்த நேரம். ரேடியோவில் எப்போதாவது போடுவார்கள். போய்க் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டு பாடுவேன்.

பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ‘ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்’ என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்.

தூத்துக்குடியில் நாடகம் போட நடிகவேள் எம்.ஆர். ராதா வருவதாக நோட்டீஸ் கொடுத்தார்கள். ஒருவழியாக தூத்துக்குடியில் போய் அவர் தங்கியிருந்த இடத்திற்குப் போனேன்.

நாடகத்திற்குக் கிளம்பிக் கொண்டிந்தார். பார்த்தேன். விசாரித்தார். நன்றாகப் பாடுவேன் என்று சொன்னேன். நேரே நாடகத்திற்கு வரச் சொன்னார்.

நாடகம் முடிந்ததும் திருச்சி சங்கிலியாண்ட புரத்திலிருக்கும் அவருடைய வீட்டுக்கு வந்து நாடகத்தில் சேரச் சொன்னார். அதற்கான பணவசதியில்லை. கிராமத்திற்குத் திரும்பிவிட்டேன். அப்போது எனக்கு வயது பதின்மூன்று.

ஒரு வருஷத்தில் வியாபாரத்தில் கொஞ்சம் காசு சேர்த்திருந்தேன்.

அம்மாவிடம் சொல்லிவிட்டு நேராக திருச்சிக்கு ரயிலில் கிளம்பிவிட்டேன். ராதாவின் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை.

வெளியே கடைக்காரர் ஒருவர் அறிமுகமாகி உள்ளே போனேன். சொன்னதும் அவருக்கு நினைவு வந்துவிட்டது.

இசைக்குழு இருக்கிற அறைக்குப் போகச் சொன்னார். முண்டாசு கட்டிக் கொண்டு எம்.ஆர்.ராதா வந்து தபேலா வாசிக்க… நான் பாடினேன். பாடுவதற்கு முன்பு ‘என்ன சுதியில் பாடுவீங்க’ ஆர்மோனியம் வாசிக்கிறவர் கேட்டார்.

‘நாலு கட்டை வைங்க’ என்று சொன்னேன். ”பரவாயில்லை சுதியெல்லாம் சொல்றானே” பாராட்டினார் ராதா.

‘மங்கையர்க் கரசி’ படத்தில் வந்த பாட்டைப் பாடினேன். அவருக்குப் பிடித்துவிட்டது. ”அப்படின்னா மூணு இட்லி கொடுத்துக் கம்பெனியில் சேத்துக்கங்கடா” சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

போனதும் முதலில் கோரஸ் பாடினேன். ரத்தக் கண்ணீர், லட்சுமிகாந்தன் என்று பல நாடகங்கள் நடக்கும். நாடக மேடைப் படுதாவில் ‘திராவிடத் தொழிலாளர்களே… ஒன்று சேருங்கள்’ என்று எழுதியிருக்கும்.

தமிழுணர்வுப் பாடல்களும், பெரியாரைப் பற்றியப் பாடல்களும் நாடகத்தில் பாடப்படும். பிறகு சின்னச்சின்ன வேஷங்கள் கொடுத்தார்கள். கலைஞர் எழுதிக் கொடுத்திருந்த ‘தூக்குமேடை’ நாடகத்தில் ராதாவின் மகன் வாசுவுடன் சேர்ந்து நடிப்பேன்.

அப்போது சம்பளமெல்லாம் கிடையாது. வாராவாரம் எல்லோரும் எண்ணெய்த் தேய்ச்சுக் குளிப்போம். வாரம் ஒரு ஆடு அடித்துச்சமைப்பார்கள். சில சமயம் கலைவாணர் கறிச்சோறு போட்டிருக்கிறார்.

ராதா தீபாவளியெல்லாம் கொண்டாட மாட்டார். பொங்கலைக் கொண்டாடுவார். அன்றைக்கு நாடகத்தில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் இரண்டு சட்டை, வேட்டிகள் கிடைக்கும். நூறு ரூபாய் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் போய் ஓரிரு மாதங்கள் தங்கி நாடகங்கள் போடுவோம். இரண்டரை மணி நேரம் நாடகம் நடக்கும். ஒரே கதைதான். ஆனால் அன்றன்றைக்குள்ள சமூக, அரசியல் விஷயங்களைச் சொல்லிக் கிண்டல் பண்ணுவார். பாத்திரமாக இருந்தபடியே விமர்சனம் பண்ணுவார்.

எல்லா ஊர்களிலும் அதற்கு நல்ல வரவேற்பிருக்கும் சாதாரணமாகக் கிணற்றுத் தவளையாகக் கிராமத்தில் இருந்த என்னைத் திராவிட இயக்கச் சிந்தனைகள் பக்கம் திருப்பியவர் ராதா.

அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. வசனத்தை யாராவது படித்துக் காட்டினால் போதும். அதைக் கிரகித்து அவர் பாணியில் அதைச் சரியாகப் பேசிவிடுவார். அவருடன் பத்து வருடங்கள் இருந்தேன்.

அவருடைய காரில் திராவிடர் கழகக் கொடி பறக்கும். ‘ரத்தக் கண்ணீர்’ சினிமாவாக வந்த பிறகும் நாடகம் போட்டுக் கொண்டிருந்தார். சினிமா, நாடகம் இரண்டையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கும், அவருக்கும் மோதல் வந்து ஜெயிலுக்குப் போனப் பிறகு அவருடைய நாடகக் குழு கலைக்கப்பட்டு விட்டது.

1960-ல் மன்னார்குடியில் தந்தை பெரியாரும் சி.பா. ஆதித்தனாரும் சேர்ந்து ‘சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டை நடத்தினார்கள். அதில் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

அந்த மாநாட்டில்தான் முதல் முறையாக நானே தனிக்குழுவை அமைத்து பாரதிதாசன் பாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினேன். நிறையப் பாராட்டுகள். தேனிசை என்கிற பட்டத்தை அதற்கு முன்பே எனக்குக் கொடுத்தவர் ஆதித்தனார்தான். பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன.

சென்னையில் பாரதிதாசனிடம் ஒரு முறை அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பாடலைப் பாடச் சொன்னார். அவருடைய பாடலை இசையோடு பாடிக் காட்டினேன். உச்சரிப்புக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்துப் பாராட்டினார். தொடர்ந்து கழகத் தோழர்களின் திருமண விழாக்களில் பாடப் போனேன்.

முழுக்கத் தமிழுணர்வை ஊட்டக் கூடிய எழுச்சியான பாடல்களைத்தான் பாடிக் கொண்டிருந்தேன். இருந்தும் 1967க்குப் பிறகு அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தப் பிறகு அவர் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றும் ‘பார்ப்பனர்கள் – தமிழர்கள்’ என்றும் சொல்ல ஆரம்பித்தப் பிறகு அவற்றுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.

அதனால் பெரிய இடைவெளி. அதனால் வானொலி, வெளி நிகழ்ச்சிகளில் வில்லுப் பாட்டு பாடிக் கொண்டிருந்தேன்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு பெரியார் திடலில் பல நிகழ்ச்சிகள் நடத்தினேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டாக நடத்தி இருக்கிறேன். ஒலிநாடாவாகவும் அவை வெளிவந்திருக்கின்றன.

என்னுடைய அவருடைய ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கொள்கையே ‘உலக உருண்டையில் தமிழனுக்குகென்று சொந்த நாடு வேண்டும்; அவனுடைய கொடி ஐக்கிய நாடுகள் சபையில் பறக்க வேண்டும், அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்’ என்பதுதான்.

தமிழ்த் தேசியத்திற்குத் தெளிவாக வழிவகுத்துக் கொடுத்தவர் ஆதித்தனார். அவருடைய தமிழ் தேசியத்திற்குப் பின் இந்திய தேசியத்தின் மீதோ, திராவிட தேசியத்தின் மீதோ எனக்கு ஈடுபாடு ஏற்படவில்லை.

அன்றைக்கு ஆதித்தனார் சொன்னதைத்தான், இப்போது பல குழுக்கள் பிரிந்து நின்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த உணர்வோடு நானும் பாடிக் கொண்டிருந்தேன்.

1983-ல் நடந்த கலவரத்துக்குப் பிறகு இலங்கையில் பல குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போராடின. அதற்கு இந்திய அரசு அப்போது ஆதரவாக இருந்தது. அப்போது காசி ஆனந்தனின் உணர்ச்சிமயமான பாடல்களைப் பாடிப் பதிவு பண்ணிக் கொடுத்தேன். அந்த ஒலி நாடாக்கள் கவனிக்கப்பட்டன.

அதற்குப் பெரும் வரவேற்பு உருவானதற்குக் காரணம், அதிலிருந்த தமிழுணர்வும், வேகமும்தான். 90-ல் என்னை இலங்கைக்கு அழைத்திருந்தார்கள். அப்போது வி.பி.சிங் பிரதமராகி இலங்கையிலிருந்த இந்திய அமைதிப் படையை வாபஸ் வாங்கிய கால கட்டம். பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அப்போது ஓரளவு உடன்பாடு இருந்தது.

தமிழீழப் பகுதிகளுக்குப் போனேன். யாழ்ப்பாணம் முற்றவெளியில் முதல் கச்சேரி. அதற்குப் பிறகு கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா, முல்லைத் தீவு, மட்டக்களப்பு என்று எட்டு மாவட்டங்களுக்கும் போனேன்; இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினேன்.

காசி ஆனந்தனின் பாடல்களும் பாரதிதாசன் பாடல்களும், அப்போதிருந்த தமிழுணர்வுக்கு உரம் போட்டுத் தீனிப் போடுகிற மாதிரி இருந்தன.

போகிற இடங்களில் எல்லாம் பெருத்த வரவேற்பு. தமிழர்கள் புலம்பெயர்ந்து போன பல நாடுகளுக்கெல்லாம் எனது ஒலி நாடாக்கள் செல் சென்றன.

1994-ல் ஐரோப்பிய நாடுகளான நார்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்சு உட்பட போராடின செய்து, எல்லா இடங்களிலும் பாடினேன்.

‘கொலைவாளினை எடடா’ என்கிற பாரதிதாசனின் பாட்டைத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்பார்கள்.

‘பொறி கக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம், போராட நாள் குறித்தோம்’ என்கிற எழுச்சிப் பாடல்கள் இசைத்தட்டுகளாக அங்கு பிரபலம்.

‘அழகான அந்தப் பனைமரம், அடிக்கடி நினைவில் வரும்’ என்கிற பாட்டைப் பாடும்போது பலர் நெகிழ்ந்து போவார்கள்.

1996-ல் கனடாவில் அங்குள்ள எல்லா மாகாணங்களுக்கும் போய்ப் பாடினேன். கனடா தலைநகரான டொரண்டோவில் லேம்போர்டு ஸ்டேடியத்தில் முன்பு மைக்கேல் ஜாக்சனுக்குத் திரளான கூட்டம் கூடியிருக்கிறது.

அதற்குப் பிறகு, அதே ஸ்டேடியத்தில் என்னுடைய நிகழ்ச்சி. அதைவிட அதிகமான மக்கள் கூட்டம் பலரைத் திரும்பியனுப்பி இன்னொருநாள் வரச்சொல்லும்மளவுக்குக் கூட்டம். அதனால் அந்த ஸ்டேடியத்தையே ‘தேனிசை அரங்கம்’ என்று அழைக்கிறார்கள்.

‘நயாகரா’ நீர்வீழ்ச்சி விழக் கூடிய இடத்தில் தமிழில் ‘நல்வரவு’ என்று எழுதியிருந்ததைப் பார்த்தபோது பரவசமாயிருந்தது.

பிறகு லண்டனுக்குப் போய் பிபிசியில் பாடினேன். தமிழர்களுடைய உணர்வும், பண்பாடும் வெளிப்படக்கூடிய இசை வடிவங்களை அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

தமிழகத்திற்கே உரித்தான நாட்டுப்புற பாடல்களையும் கொண்டு போனேன். அதை வெளிப்படுத்தியதின் மூலம் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.

“தங்க மாலைக் கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள், நஞ்சு மாலைக் கழுத்துக்களை நினைவில் கொள்ளுங்கள். களத்தை மறக்கலாமா? தமிழ் நிலத்தை மறக்கலாமா?” என்கிற பாடலை ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரத்தில் பாடி முடித்ததும் ஒரு வயதான அம்மாள் தன் கழுத்தில் போட்டிருந்த நகைகளைத் தட்டில் வைத்துவிட்டு தலையில் அடித்தபடி அழுதார்.

என்னை உலுக்கி வாட்டி எடுத்துவிட்டது அந்தச் சம்பவம். வெறும் பொழுதுபோக்காக அதை நினைத்து அவர்களால் நகர்ந்துவிட முடியவில்லை.

எங்கோ நெல்லை மாவட்டத்துக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், அவர்களுடைய உணர்வுகளுடன் நெருங்கிப் போனேன்.

அந்த அளவுக்கு நேசம் இருந்ததால்தான் ‘நீங்கள் இறந்தாலும் எங்க மண்ணுக்கு வந்துதான் இறக்க வேண்டும்’ என்று சொல்கிற அளவுக்கு நெருக்கம் பாராட்டிய தமிழ் உள்ளங்களே நான் சம்பாதித்த பெரும் சொத்து.

தமிழ் நாட்டில் தமிழுணர்வு பற்றிய கூப்பாடுகள் அதிகமிருந்தாலும் பள்ளிகளில் இன்னும் தமிழைக் கட்டாயப் பாடமாக்க முடியவில்லை.

இங்கிருக்கிற அரசுகளும் அதற்காகப் பெரிதும் முயற்சிக்கவில்லை. தமிழ்நாடு என்று சொல்கிறோமே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழின உணர்விருக்கிறதா? தமிழன் என்கிற அடையாளம் இருக்கிறதா? இதுதான் பாடல்கள் வழியாக வைக்கிற எங்களைப் போன்றவர்களின் உணர்வு.

இதுவரை நான் பாடிய 1500 பாடல்களும் ஒலித்தகடுகளாகி உலக அளவில் சென்றிருக்கின்றன. ஆலயங்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப் பிரச்சினை வந்ததும் அதற்கும் உடனடியாகப் பாடியிருக்கிறேன்.

எப்போதும் தமிழுணர்வுதான் எனது பாடல்களின் மையமாக இருந்து வந்திருக்கிறது” என்றார்.

இரண்டு மகள்கள், ஒரு மகன், பேரன்கள் என்றிருக்கிற தேனிசை செல்லப்பாவுக்கு வயது 62. இப்போதும் வலுவான குரல் வளத்துடன் பாடுகிறார். “எந்தக் கலையில் ஈடுபட்டிருந்தாலும் தனி மனித ஒழுக்கம் முக்கியம்” என்கிறார் குரல் எழுச்சியுடன்.

“பல துன்பங்களிலிருந்து படிப்பினையைப் பெற்று விழிப்புடன் இருக்க வேண்டியத்திருக்கிறது. இன்றையக் காலகாட்டத்தில் இது முக்கியம்” என்கிறார் சில அனுபவங்கள் உருவாக்கிய ரணங்களுடன்.

– மணா ‘கனவின் பாதை’ நூலிலிருந்து ஒரு கட்டுரை.

#தேனிசை_செல்லப்பா #Thenisai_chellappa #பியூ_சின்னப்பா #PU_Chinnappa #இசை #Music #நடிகவேள்_எம்ஆர்_ராதா #Nadigavel_MR_Radha #குபேர_குசேலா #Kubera_kusela #ஆதித்தனார் #Adhithanar #நாடகம் #Drama #எம்ஜிஆர் #MGR #பெரியார் #Periyar #கலைவாணர் #Kalaivanar #காசி_ஆனந்தன் #Kasi_anandhanan #பாடல் #Song #பாரதிதாசன் #Bharathidasan

You might also like