சமூகநீதி வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு!

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய சர்ச்சையான விவாதங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் நீரை மகேந்திரன் எழுதி, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கலைஞர் இயக்கவியல்’ என்கின்ற திராவிட கருத்தியல் சார்ந்த நூலிலிருந்து ஒரு கட்டுரை.

*************

“டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு வீட்டுக்கு வீடு கொண்டு செல்லப்பட வேண்டும். அம்பேத்கர் ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல. எல்லா மக்களுக்கும் அவரைப் பாராட்ட உரிமை இருக்கிறது”.

1958-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் சிலை அமைப்பதற்காக சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் நடைபெற்ற நாடகத்தில், தலைமை வகித்த அண்ணா ஆற்றிய உரை இது.

அதுமட்டுமல்ல, சென்னையில் அண்ணல் அம்பேத்கருக்கு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும் அப்போது குறிப்பிட்டவர் பேரறிஞர் அண்ணா.

இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களிடம் அண்ணல் அம்பேதகர் குறித்த மிக அறிவார்ந்த சித்திரத்தை உருவாக்கியதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு முக்கியமானது. 1958-ஆம் ஆண்டில் அண்ணாவின் அந்த உரை அதற்கு ஒரு சான்று.

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கான தலைவராக மட்டுமல்ல அனைத்து மக்களுக்கான தலைவராகவும் அண்ணல் அம்பேத்கர் கொண்டு செல்லப்பட வேண்டும் என ஈடுபட்ட இயக்கம் தி.மு.க.

பெரியாரும் அம்பேத்கரும்:

தமிழ்நாட்டின் சமூக நீதி சமத்துவ வரலாற்றில் பெரியாரைப் பற்றிப் பேசுவது போல், இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் அண்ணல் அம்பேத்கரின் பங்கினை உயர்த்திப் பிடித்தது திராவிட இயக்கம்தான். அம்பேத்கரின் பணியை 1929-ஆம் ஆண்டிலேயே பதிவு பணியை செய்கிறார்.

‘பம்பாயில் சுயமரியாதை முழக்கம்’ என மத்திய மாகாணங்கள் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையைக் ‘குடிஅரசு’ இதழ் பதிவு செய்கிறது.

கருத்தியல் ரீதியாக பெரியாரும் அம்பேத்கரும் கொண்டிருந்த இந்த ஓர்மை சாதி ஒழிப்புக்கும். சனாதன தர்மத்துக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டத்தைக் கொண்டிருந்தன.

அம்பேத்தர் சாதி ஒழிப்பு என்கிற தனது ஆவணத்தைப் பெரியாருக்கு அனுப்பி, பெரியார் அதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்.

அம்பேத்கரைப் பற்றி அறிவார்ந்த தளத்தில் கொண்டு சென்றதில் பெரியாரின் பங்கு கணிசமானது. இதற்குப் பின் அந்தப் பொறுப்பை தி.மு.கழகம் ஏற்றது.

1956-ஆம் ஆண்டு, அம்பேத்கர் பௌத்தம் தழுவிய போது, அதை வரவேற்றுப் பாராட்டியும் புகழ்ந்தும் ‘திராவிட நாடு’ இதழில் விரிவான கட்டுரை எழுதுகிறார் அண்ணா.

அம்பேத்கரின் மதமாற்றம் குறித்து தமிழ்நாட்டில் இருந்து வெளியான விரிவான எதிர்வினை அண்ணாவுடையது என இதைப் பதிவு செய்கிறார் எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமன முனைவர். துரை ரவிக்குமார்.

“தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்கள்” என்று அதைப் பதிவு செய்கிறார் அண்ணா.

சனாதனத்துக்கு எதிராக அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்களையும், அவரின் வாழ்க்கையையும் தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டு செல்வதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் அண்ணா.

“அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு போர் வீரனைப் போல தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார். மிக மிக ஒடுக்கியாளப்பட்டு வந்த மக்கள், தாங்கள் ஏன் அப்படி ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கவும் அச்சப்பட்ட காலத்தில்,

தாங்கள் ஒடுக்கப்படுவதற்கு யார் காரணம் என்பதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லாமல் இருந்த காலத்தில்,

பயந்து வாழ்க்கை நடத்திய மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி உரிமை வேட்கையை உணர்த்தி, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடையே குனிந்து குனிந்து வாழ்த்தவர்களை நிமிரச் செய்து விழியைத் திறந்து பார்க்க அஞ்சுபவர்களுக்கு விழிப்புணர்ச்சியைத் தந்து,

பேசாதவர்களைப் பேச வைத்து போராடச் செய்து வந்தார் டாக்டர் அம்பேத்கர்” என்று 1950-இல், சென்னை சேத்துப்பட்டில் அம்பேத்கர் நினைவு மன்றத்தில் இந்த உரையை ஆற்றுகிறார் அண்ணா.

கலைஞரும் அம்பேத்கரும்:

கழகத்தின் ஆட்சிக்குப் பின்னர், அம்பேத்கரை தமிழ்நாடு எங்கும் விதைக்கும் பணியைக் கையில் எடுக்கிறார் கலைஞர்.

1972-ஆம் ஆண்டு அம்பேத்கர் பெயரில் கல்லூரி, மும்பை மராத்வாடா பல்கலைக்கழகத்துக்குப் பெயரைச் சூட்டுவதற்கான தந்தி அனுப்பும் போராட்டம், அம்பேத்கர் நூற்றாண்டு விழா என அம்பேத்கரின் புகழைக் கொண்டு சேர்ப்பதில் சளைக்காமல் நின்றவர் கலைஞர்.

மராத்வாடா தந்தி அனுப்பும் போராட்டம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கான தலைவராக, வட மாநிலங்களில் இன்னமும் பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் நுட்பமாக அவரைப் பொதுத் தலைவராகக் கொண்டு சேர்த்ததில் மராத்வாடா தந்திப் போராட்டம் மிக முக்கியமானது.

அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், அம்பேத்கர் நினைவு மண்டபம் எனத் தொடர்ச்சியாகப் போற்றியும் புகழ்ந்தும் அண்ணலின் வரலாற்றை, தமிழ்நாடு எங்கும் சேர்த்த இயக்கமாக தி.மு.கழகம் இருந்துள்ளது.

பெரியார், அண்ணா, கலைஞர் மட்டுமல்ல அவர்கள் வழியில் தொடரும் ‘திராவிட மாடல்’ அரசும் அம்பேத்கரின் சிந்தனைகளை அடுத்தத் தலைமுறைக்கு நகர்த்துகிறது.

அம்பேத்கர் மணி மண்டபத்தில் சிலை நிறுவியது மட்டுமல்ல, அவர் பிறந்தநாளான ஏப்ரல் 14, தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை மொழிபெயர்த்து தமிழ்நாடு அரசு செம்பதிப்பாக வெளியிடவும் உள்ளது.

சாதி சமய ஏற்றத்தாழ்வுகள், சமூகக் கொடுமைகள், சனாதனக் கொடூரங்களுக்கு எதிராக சமூகநீதி, சமத்துவம் பேசிய மக்கள் இயக்கம் அம்பேத்கரைக் கொண்டாடியதில், உயர்த்திப் பிடித்ததில் வியப்பில்லை.

பெரியாரைப்போல் அம்பேத்கரும் இங்கே விதைக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது.

நூல்: கலைஞர் இயக்கவியல்
எழுத்தாளர்: நீரை மகேந்திரன்
முத்தமிழறிஞர் பதிப்பகம்
விலை: ரூ. 150/- 

தொடர்புக்கு – 9003324473 

You might also like