‘பிசாசு’ தந்த தனித்துவமான திரையனுபவம்!

தனித்துவமான திரைமொழியோடு, ‘இது இந்த இயக்குனரின் படம்தான்’ என்று ரசிகர்கள் தீர்மானமாகச் சொல்லும் வண்ணம் படைப்புகளைத் தருகிற இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

திரையில் தெரியும் கதாபாத்திரங்களும் காட்சிக்கோணங்களும் திரைக்கதை நகர்வுமே அவர்களை அடையாளப்படுத்துவதாக அமையும்.

அப்படியொரு இயக்குனராகத் தமிழ் திரையுலகில் திகழ்பவர் மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ முதல் ’சைக்கோ’ வரை இவர் இயக்கிய படங்கள் வெவ்வேறு கதையமைப்பைக் கொண்டிருந்தபோதும், அவற்றில் அவரது முத்திரையை நம்மால் காண முடியும்.

அந்த வகையில், அவர் தற்போது இயக்கிவரும் ‘ட்ரெய்ன்’ படம் குறித்த அப்டேட்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி வருகின்றன.

போலவே, அவர் இயக்கத்தில் உருவான ‘பிசாசு 2’ படம் ஏன் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்ற கேள்வியும் அவர்களிடத்தே உள்ளது.

அந்தக் கேள்வி சமூகவலைதளங்களில் உலா வரும்போதெல்லாம், ‘பிசாசு’ படம் குறித்த சிலாகிப்புகளும் பெருகி நிற்பதைக் காண முடியும்.

அப்படிப்பட்ட ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் ஆகின்றன.

பழி வாங்காத ‘பிசாசு’!

ஒரு இளைஞர். வயலின் கலைஞராக இருக்கிறார். திடீரென்று தனது வாழ்க்கையில் ஒரு அமானுஷ்ய சக்தி புகுந்திருப்பதாக உணர்கிறார். அது தன்னையே சுற்றி வருவதை அறிகிறார்.

அது என்னவிதமானது என்று அறிய முற்படுகையில், சில நபர்களைச் சந்திக்கிறார். அதேநேரத்தில், அவரைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்விலும் சில மாற்றங்கள் அந்த அமானுஷ்ய சக்தியால் நிகழ்கின்றன.

சில நாட்களில் ஒரு விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் ஆன்மாவே தன்னைச் சுற்றி வருவதாக உணர்கிறார் அந்த இளைஞர்.

தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அவர் அறியும்போது, அந்த பிசாசு அவரை விட்டு விலக முனைகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ்.

பெரிதாகத் திருப்பங்கள் இல்லாமல், பேய்படங்களுக்கே உரித்தான ‘பழிக்குப் பழி’ எண்ணத்திற்கு இடம் தராமல், இப்படத்தில் காதலே மேலோங்கி நின்றது. அப்படியொரு பார்வைதான் இப்படத்தின் பெரும்பலம். அதுவே இயக்குனர் மிஷ்கினை ரசிகர்கள் கொண்டாடச் செய்தது.

மீண்டும் ராதாரவி!

கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகில் நீடித்து வருபவர் நடிகர் ராதாரவி. ‘கம்பேக்’ என்றும் சொல்லும் அளவுக்குத் தனது திரை வாழ்வில் அவர் இடைவெளியே கண்டதில்லை. ஆனாலும், 2000-க்கு பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது.

வழக்கமான அண்ணன், அப்பா, தாத்தா, வில்லன் வேடங்களில் தொடர்ந்து நடித்தது ரசிகர்களுக்கும் போரடித்தது. போலவே, அவருக்கும் அது அயர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

அதனால், பிற நடிகர்கள் ஏற்கத் தயங்குகிற அல்லது தயாராக இல்லாத பாத்திரங்களில் மட்டுமே அவர் ஏற்று நடித்தார். மாயக்கண்ணாடி, தில்லாலங்கடி, சிங்கம், சூது கவ்வும் என்று அதற்குச் சில உதாரணங்களைக் காட்ட முடியும்.

அப்படிப்பட்ட ராதாரவியை மீண்டும் நாயகியின் தந்தையாகக் காட்டியது ‘பிசாசு’. ஆனால், அதற்கு முன் அவர் நடித்த எந்தப் படத்தின் சாயலும் அதில் தென்படவில்லை என்று அவரது ரசிகர்களே பாராட்டும்படியாக அது அமைந்தது.

கிளைமேக்ஸ் காட்சியில் அவர் கதறியபோதே, எதற்கும் கலங்காத 2கே கிட்ஸ்களே கண்ணில் நீர் வடித்தார்கள்.

தந்தை பாத்திரத்தையும் அதில் வெளிப்படுத்துகிற நடிப்பிலும் பெரிதாக வித்தியாசத்தைக் காணாத ராதாரவி கூட, “பிசாசு படத்திற்காக எனக்குக் கிடைத்த பாராட்டுகள் ஆச்சர்யத்தைத் தந்தது” என்றார்.

அந்த வகையில், அவருக்கு ‘எனர்ஜி’ அளித்த படம் என்று இதனைச் சொல்லலாம்.

நல்லதொரு அனுபவம்!

மிஷ்கின் பாணி திரைமொழிக்கு முக்கியத்துவம் தந்த ரவி ராயின் ஒளிப்பதிவு, திரைக்கதையில் மிளிரும் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் தந்த கோபிநாத்தின் படத்தொகுப்பு, இயக்குனரின் உலகிற்கு உருவம் தந்த லட்சுமிநாராயணனின் தயாரிப்பு வடிவமைப்பு, அனைத்துக்கும் மேலாக அரோல் கரோலியின் பின்னணி இசை ஆகியன ஒன்று சேர்ந்து வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. அது சிறப்பானதாகவும் அமைந்தது.

இதில் நாகா நாயகனாக நடித்திருந்தார். அவரோடு அஸ்வத், ராஜ்குமார், வினோதினி வைத்தியநாதன், கல்யாணி நடராஜன், ஹரிஷ் உத்தமன், சூப்பர்குட் சுப்ரமணி உட்படப் பலர் நடித்திருந்தனர்.

மலையாள நடிகை கனி குஸ்ருதி இதில் ஒரு பாத்திரத்தில் இடம்பெற்றிருந்தார். நாயகியாக பிரயாகா மார்ட்டின் தோன்றியிருந்தார்.

இந்தப் படத்தைத் தயாரித்தது இயக்குனர் பாலா என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.

’பிசாசு’ படத்தின் வெற்றி, இதனை கன்னடம், இந்தியில் ‘ரீமேக்’ செய்யும் முடிவுக்கு வழிவகுத்தது.

இதோ இப்போது, ஆண்ட்ரியாவின் நடிப்பில் ‘பிசாசு2’ தயாராகிச் சில பிரச்சனைகள் காரணமாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.

பிசாசு படத்தின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, அப்படம் திரைக்கு வருவது பொருத்தமாக இருக்கும். சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தான் அது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும்..!

  • மாபா
You might also like