இந்திய அணியின் மிக முக்கிய வீரராகக் கடந்த 14 ஆண்டுகளாக ஆடி வந்தவர் அஷ்வின். ஒரு கட்டம் வரைக்கும் குறுகிய வடிவ போட்டிகளில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருந்தவர், அதன்பின் ரெட் பால் கிரிக்கெட்டிலும் ரெக்கார்ட் மேல் ரெக்கார்டாக படைக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக, இந்திய மைதானங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு எதிரணிகளுக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்தியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
சமீபத்தில்தான் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஆடியிருந்தார். டெஸ்ட் ஆடும் ஒரு வீரருக்கு 100 போட்டிகள் என்பது இமாலய மைல்கல்.
இந்நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் வைத்து திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார் அஷ்வின். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆகியிருக்கும் நிலையில், அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இன்று (18.12.2024) காலையிலிருந்தே முக்கியமான கிரிக்கெட் பத்திரிகையாளர்களெல்லாம் ஒரு பெரிய வீரர் ஓய்வை அறிவிக்கப்போகிறார் என ட்வீட் செய்து வந்தனர். அதேமாதிரி, அஷ்வினும் ட்ரெஸ்ஸிங் ரூமில் எல்லா வீரர்களுக்கும் கைகொடுத்து நெகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த வீடியோவும் வெளியாகியிருந்தது.
குறிப்பாக, விராட் கோலியுடன் ரொம்பவே எமோஷனலாக பேசி அவரை கட்டியணைத்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. இறுதியில் யூகித்தப்படியே அஷ்வின் ஓய்வையும் அறிவித்தார்.
காரணம் என்ன?
அஷ்வினுக்கு இப்போது 38 வயதாகிறது. இந்திய அணிக்காக ரெட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே ஆடி வருகிறார். நடப்பு ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பிறகு இந்திய அணி கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து ஜூனில்தான் டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கிறது.
இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும். ஏற்கனவே கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதே இந்திய அணி அஷ்வினை லெவனில் எடுக்கவே இல்லை. பென்ச்சில்தான் வைத்திருந்தார்கள்.
இந்த முறையும் லெவனில் இருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்தத் தொடர் முடிந்த பிறகு அக்டோபரில்தான் இந்திய அணி மீண்டும் சொந்த மண்ணில் டெஸ்ட் ஆடுகிறது.
அஷ்வின் அடுத்ததாக டெஸ்ட் ஆட வேண்டுமெனில் 10 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டும்.
அதனால்தான் அஷ்வின் இப்போதே ஓய்வை அறிவித்திருக்கக் கூடும். ஓய்வுக்கான சமிஞ்சையை சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் ஆடிய போதே அஷ்வின் தெரியப்படுத்தினார்.
சேப்பாக்கத்தில், தான் ஆடும் கடைசிப் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்பது போல பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேசியிருந்தார்.
தொடருக்கு நடுவே முடிவை எடுக்கக் காரணம் என்ன?
பார்டர் கவாஸ்கர் தொடர் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருக்கிறது. எனில், அந்தப் போட்டிகளும் முடிந்த பிறகு ஓய்வை அறிவித்திருக்கலாமே எனும் சந்தேகம் அனைவருக்குமே எழுந்திருக்கிறது.
ஆனால், எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலுமே கூட அஷ்வினுக்கு லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் ஆடியிருந்தார். சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
இப்போது முடிந்திருக்கும் பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும் அஷ்வினுக்கு பதில் ஆடிய ஜடேஜா நன்றாக ஆடியிருக்கிறார். அடிலெய்டில் டெஸ்ட்டில் ஆடிய அஷ்வின் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை.
எனில், அடுத்த இரண்டு டெஸ்ட்களுக்குமே லெவனில் அஷ்வினை விட வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவும்தான் முதல் வாய்ப்பாக பார்க்கப்படுவர்.
இதனால்தான் அஷ்வின் இந்தப் போட்டியோடே கூட ஓய்வை அறிவித்திருக்கக்கூடும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுமே ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடிக்கொண்டிருந்த போதுதான் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால்தான் சர்வதேச போட்டிகளின் அத்தனை பார்மட்களிலிருந்தும் ஓய்வை அறிவிப்பதாக அஷ்வின் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருக்கிறார்.
அஷ்வின் இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த வீரர் என்பதை யாராலுமே மறுக்க முடியாது.
நன்றி: ஆனந்த விகடன்.