சி.வி.குமார் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், அசோக் செல்வன், ரமேஷ் திலக், அருள்தாஸ், சஞ்சிதா, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜேபீ உட்படப் பலர் நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’.
தமிழில் வெளியான சில ‘ஒரிஜினல் மாஸ்டர்பீஸ்’களில் அப்படமும் ஒன்று. அதன் அடுத்த பாகமாகத் தற்போது வெளியாகியிருக்கிறது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’.
இதில் பிரதான பாத்திரத்தில் சிவா நடிக்க, அவருடன் கல்கி, கவி, வாகை சந்திரசேகர், ஆடுகளம் நரேன், கராத்தே கார்த்தி, ஹரிஷா ஜெஸ்டின் ஆகியோர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை இணைக்கும்விதமாக கருணாகரன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜேபீ, அருள்தாஸ் உட்படப் பலர் இதிலுண்டு.
இதன் எழுத்தாக்கத்தை எஸ்.ஜே.அர்ஜுன், டி.யோகராஜா ஆகியோர் கையாண்டிருக்கின்றனர். இதனை இயக்கியிருக்கிறார் எஸ்.ஜே.அர்ஜுன்.
சரி, இப்படம் முதல் பாகத்தை மிஞ்ச முயற்சித்திருக்கிறதா அல்லது அதனைத் தொட முடியாமல் எக்கிக் கொண்டிருக்கிறதா?
முதல் பாகத்தை நினைவூட்டும்..!
ஒரு திருடன். சில ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு வீடு திரும்புகிறார். ‘தானுண்டு தன் போதை உண்டு’ என்று வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் குருநாத் (சிவா).
குருநாத் சிறை செல்லக் காரணமாக இருந்த குற்றத்தோடு தொடர்புடைய இரண்டு பேர் அவரைத் தேடி வருகின்றனர். அவர்கள் அவரது சிஷ்யர்கள் தாம்.
அவர்களுக்காக, மீண்டும் சில குற்றச் செயல்களில் ஈடுபட முடிவு செய்கிறார் குருநாத். சாதாரண பின்னணி கொண்ட நபர்களைக் கடத்தி ஆயிரம், பத்தாயிரம் எனப் பணம் பிடுங்குகின்றனர்.
இந்த நிலையில், ஒருநாள் நிதி அமைச்சராக இருக்கும் அருமைப்பிரகாசத்தை (கருணாகரன்) கடத்த எண்ணுகிறார்.
அவரது சிஷ்யர்களோ, ‘அது வேண்டவே வேண்டாம்’ என்கின்றனர். ஆனால், குருநாத்தோ ‘எனது காதலி அம்மு சாக இவன் தான் காரணம்’ என்கிறார்.
அம்மு என்பவர் வேறு யாருமல்ல; குருநாத்தின் மூளையில் ஏற்படும் ‘ஹாலுசினேஷன்’ காரணமாக, அவரது கண்களுக்கு மட்டுமே தெரிகிற ஒரு மாயப் பெண் தான்.
எந்நேரமும் போலீசாரின் பாதுகாப்போடு, கூடுதலாகத் தன்னைச் சுற்றியிருக்கும் பாதுகாவலர்களோடு திரிகிறார் அருமைப்பிரகாசம். அவரைத் தங்களால் கடத்த முடியாது என்று தயங்குகின்றனர் குருநாத்தின் சிஷ்யர்கள்.
ஆனால், அவரோ ‘அருமைப்பிரகாசமே நம்மைத் தேடி வருவது நிகழலாம்’ என்று காத்திருக்கிறார்.
குருநாத் நினைத்தது நடக்கிறது. உடனே, அருமைப்பிரகாசத்தைக் கடத்தி தங்கள் இடத்திற்குக் கொண்டு செல்கின்றனர். ஆனால், இந்த விவகாரம் வீடியோ ஆதாரங்களோடு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.
அருமைப்பிரகாசத்தைக் கைது செய்யும் நோக்கோடு அவரது நெருங்கிய கையாட்கள் இரண்டு பேரைக் கடத்திச் செல்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேபீ).
அதேநேரத்தில், தான் மனநல மருத்துவமனைக்குச் செல்லக் காரணமாக இருந்த குருநாத் கும்பலைக் கொலை செய்யும் வேட்கையோடு திரிகிறார் இன்னொரு முன்னாள் போலீஸ் அதிகாரியான தேவநாதன் (கராத்தே கார்த்தி).
பிரம்மா ஏன் அருமைப்பிரகாசத்தைப் பிடிக்க நினைக்கிறார்? குருநாத்தை ஒழித்துக் கட்ட தேவநாதன் நினைப்பது ஏன்? இவ்விரண்டு விஷயங்களுக்கும் நடுவே அரசியல் களத்தில் அருமைப்பிரகாசத்தின் தந்தை ஞானோதயத்தின் காய் நகர்த்தல்கள் பலன் தந்தனவா? இது போன்ற பல கேள்விகளுக்கு நின்று நிதானித்துப் பதிலளிக்கிறது இந்த ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம்.
முதல் பாகம் 2013இல் நடப்பதாகக் காட்டப்பட்டிருந்தது. இப்படம் 2008இல் தொடங்கி 2024இல் முடிவதாகக் காட்டப்படுகிறது. இந்த தகவலைச் சொல்வதே தவறுதான்.
ஆனால், இந்த ஒரு விஷயமே இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தோடு இணைக்கிறது. அந்த இணைப்பு ‘ஆஹா ஓஹோ..’ என்று சொல்லும்படியாக இல்லையென்றாலும், கவலைப்படுகிற வகையில் பலவீனமாக இல்லாதது ஆறுதல்.
அதற்கேற்ப அருமைப்பிரகாசம், ஞானோதயம், அவரது மனைவி, முதலமைச்சர், போலீஸ் அதிகாரி பிரம்மா, டாக்டர் ரவுடி உள்ளிட்ட பல பாத்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
வாய்விட்டுச் சிரிக்கலாம்!
முதல் பாகத்தை இப்படத்தோடு ஒப்பிடக் கூடாது என்று படக்குழு கண்டிப்பாகச் சொன்னாலும், இரண்டும் ஒரே இழையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், துருத்தலாகத் தெரியாத அளவுக்குத் திரையில் கதை சொல்லியிருக்கிறது இயக்குநர் அர்ஜுன் – யோகராஜா கூட்டணி.
முதல் பாகத்தில் ‘கிளாசிக்’ ஆக அமைந்திருந்தது கதாபாத்திர மற்றும் காட்சி ஆக்கம். இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது.
அதனால் லாஜிக் மீறல்கள், கதாபாத்திர வார்ப்பின் நேர்த்தி, காட்சியை வடிப்பதில் இருக்கும் புதுமை உள்ளிட்ட பலவற்றைப் புறந்தள்ளிவிட்டுச் சிரிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், வாய் விட்டுச் சிரிக்கும் அளவுக்குச் சில காட்சிகளும் வசனங்களும் அமைந்துள்ளதைச் சொல்லியாக வேண்டும்.
ஆன்ட்டி ஹீரோவாக வரும் அருமைப்பிரகாசத்தோடு நம்பிக்கை கண்ணன், உத்தமன் ஆகிய இரண்டு பாத்திரங்கள் வருகின்றன. அதிலொன்றை நாம் முதல் பாகத்தில் கண்டிருக்கிறோம்.
இதில் அருமைப்பிரகாசம் என்ற பெயர் எப்படி வந்தது? அதனை வைத்தது யார்? அந்த நபர் முதல் பாகத்தில் ஏன் இல்லை? போலீஸ் அதிகாரி பிரம்மா ஏன் அதிகம் பேசுவதில்லை என்று ‘சூது கவ்வும்’ படத்தில் இருந்த ‘கிளாசிக்’ அம்சங்களுக்கு இதில் காரணம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். அவை உண்மையிலேயே சிரிப்பூட்டும் விதமாக இருக்கின்றன.
ராம.நாராயணன், சுந்தர்.சி படங்கள் போன்று மொத்தப்படமும் நகைச்சுவை அனுபவத்தைத் தருகிறது. அதேநேரத்தில், இதில் சில அரசியல் நையாண்டிகளும் இருக்கின்றன.
’சூது கவ்வும்’ பாணியில் சீரியசான காட்சியமைப்போடு சிரிப்பை வரவழைக்கிற முயற்சியிலான திரைக்கதை ட்ரீட்மெண்டை உணர்ந்து, கதையில் யதார்த்தத்தின் அளவை ரொம்பவே குறைத்துக் காண்பிக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை. பளிச்சென்று எந்த பிரேமும் இல்லை.
படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ் அஸ்வின் உழைப்பில், காட்சிகள் மிகச்சரியாகத் தொகுக்கப்பட்டு சீராகக் கதை திரையில் விரிய உதவியிருக்கின்றன.
’இது செட் தான்’ என்று தெரியும் அளவுக்குக் காட்சிகளின் பின்னணியை வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் கே.கே.சுரேந்திரன்.
காட்சிகள் நகரும் விதம், கதாபாத்திரங்களின் உணர்வுகளில் நம் கவனம் இருப்பதால், அவை துருத்தலாகத் தெரிவதில்லை.
பின்னணி இசை அமைத்திருக்கும் ஹரி எஸ்.ஆர், காட்சிகளின் தன்மையை அடிக்கோடிடும் இசையைத் தந்திருக்கிறார்.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் கதையோடு பொருந்தி நிற்கின்றன.
இவை தவிர்த்து டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பு என்று பாராட்டத்தக்க அம்சங்கள் பல உண்டு.
இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன், முடிந்தவரை முதல் பாகத்தை நம் நினைவூட்டாத வண்ணம் சுவையாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
அதேநேரத்தில், ‘அந்தப் படம் ஒரு கல்ட் கிளாசிக்’ என்று அங்கலாய்ப்பவர்களுக்கு இந்த இரண்டாம் பாகம் ஏற்புடையதாக இருக்காது.
நல்லதொரு ‘காஸ்ட்டிங்’!
விஜய் சேதுபதியைக் கொஞ்சம் கூட ஒப்பிட வழியில்லாத வகையில், அதே போன்றதொரு பாத்திரத்தை வேறுமாதிரியாகத் திரையில் காட்டியிருக்கிறார் மிர்ச்சி சிவா. வழக்கமான தனது பாணியில் இருந்து சற்றே விலகி, ஒரு வயதான கேங்க்ஸ்டர் என்று உணரச் செய்திருக்கிறார்.
அவரது சகாக்களாக வரும் கல்கி மற்றும் கவி இருவரும் தங்களது நடிப்பால் மெல்ல நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அதுவும் சாக்கடையில் அவர் மூழ்குகிற ஷாட் குழந்தைகளைக் கவரக்கூடியது.
சஞ்சிதா போலவே இதில் ஹரிஷா ஜெஸ்டின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பெர்பார்மன்ஸும் அதே ரகம் என்றபோதும், கொஞ்சம் ‘ப்ரெஷ்’ஷான உணர்வைத் தருகிறார்.
வாகை சந்திரசேகர் சீரியசான பாத்திரத்தில் தோன்றி கொஞ்சமாய் நம்மைச் சிரிக்க வைக்கிறார். பிளேடு சங்கர் ஒரு காட்சியில் தோன்றினாலும், சில வசனங்களில் சிரிப்பூட்டியிருக்கிறார்.
இவர்களோடு ‘டாக்டர்’ படப்புகழ் கராத்தே கார்த்தியும் இதிலுண்டு.
இவர்கள் தவிர்த்து ராதாரவி, கருணாகரன், அருள்தாஸ், யோக் ஜேபீ, எம்.எஸ்.பாஸ்கர், அவரது மனைவியாக நடித்தவர், நம்பிக்கை கண்ணனாக நடித்தவர் என்று பலர் தலைகாட்டியிருக்கின்றனர்.
அந்த வகையில் இதில் ‘காஸ்ட்டிங்’ பாராட்டுக்குரியது. அவர்கள் திரையில் வெறுமனே அணிவகுக்காமல், காட்சி ஒழுங்கோடு நேர்த்தியாக வந்து போயிருப்பது பாராட்டுக்குரியது.
ஏற்கனவே இப்படக்குழுவினர் சொன்னபடி ‘சூது கவ்வும்’ படம் போன்றே இதுவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இதனைப் பார்க்கக் கூடாது.
மாறாக, அதிலுள்ள காட்சிகள், சில கதாபாத்திரங்களை நினைவில் இருத்திக்கொண்டு இதனைக் காண வந்தால் நல்லதொரு ‘சிரிப்பனுபவம்’ கிடைக்கும். சில ‘கடி’ ஜோக்குகள் கடுப்பேத்தவும் செய்யும்.
முதல் பாகத்தின் இலக்கணத்தை வைத்துக்கொண்டு, இப்படத்தின் இரண்டாம் பாதி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நேரெதிரான உள்ளடக்கம் இதிலிருக்கிறது.
அவற்றில் பாராட்டுக்குரியதாகச் சிலவும், விமர்சனங்களுக்கு உரியதாகச் சிலவும் இருக்கின்றன.
அப்படியொரு முயற்சியில் இறங்கியிருப்பது சாதாரண விஷயம் அல்ல..!
அந்த வகையில், இயக்குனர் அர்ஜுன் ரொம்பவே நம்பிக்கை தருகிறார்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்