வாசகனை வசீகரிக்க ஒவ்வொரு சஞ்சிகைளும் உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று ஏகப்பட்ட திட்டங்களுடன் அன்று முதல் இன்று வரை பயணித்துக்கொண்டே இருக்கின்றன.
எண்ணத்தில் விளைந்த எழுத்திலும் ஓவியத்திலும் சிறப்பை வெளிப்படுத்தி ஏற்றம் கண்டு வாசகர் நெஞ்சங்களை கவர்பவை ஒரு புறம்.
மற்றொரு புறம் அவ்வாறே செயல்கள் இருப்பினும் இன்னுமொரு படி மேலேறி சில மாறுபட்ட சிந்தனைகளின் வெளிப்பாட்டினால் வாசகர்களைக் கவர சில திட்டங்களைப் புகுத்தி அதில் வெற்றியும் கண்ட பத்திரிகைகள் உண்டு.
அவ்வாறான சில ஆச்சர்யமூட்டும் விதத்தில் வெளி வந்த சில பத்திரிகைகளைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
வாசம் வீசும் பத்திரிகை: மரிக்கொழுந்துவாசம் வீசும் இதழ்
ஒவ்வொரு பத்திரிகையும் அதனுள் உள்ள உள்ளீட்டின் காரணமாக நமது மனங்களில் வாசம் செய்யும். ஆனால், அதனை படிக்கையில் மணங்களில் வாசம் வீசும் பத்திரிகை ஒன்று வெளிவந்தது.
அந்த பத்திரிகை அந்த ஒரு இதழில் மட்டுமே அவ்வாறு வெளிவந்தது.
மரிக்கொழுந்து வாசனையுடன் வெளிவருகிறது என்று அதற்கு முந்தைய இதழில் இருந்தே விளம்பரம் பட்டையைக் கிளப்பியது.
அந்த மரிக்கொழுந்து வாசம் வீசும் இதழை வாங்க பெரும் போராட்டமாக போய்விட்டது.
எப்படியோ அடித்துப் பிடித்து இரண்டு பிரதிகளை வாங்கி வந்துவிட்டேன் வெற்றிகரமாக.
அது வாசம் போகாமல் இருக்க கவரில் போட்டு கொடுத்தார்கள்.
எல்லோரும் அதை வாங்கிய உடனேயே ரோட்டிலேயே அவசர அவசரமாக கவரைக் கிழித்து வாசம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர், ஆவலில்.
கண்ணால் படித்தது போய் மூக்கால் நுகர்ந்தனர். அப்புத்தகதின் நுகர்வோர் சிலர் வாசம் இல்லையே என வினாவ கடைக்காரர் அதற்கு பதில் உரைத்தார்.
“சார், இத்தனாம் பக்கத்தில் பாருங்கள். அதில் செய்தியோடு இருக்கும்” என்று கூறினார்
அவசர கதியில் பக்கம் புரட்டப்பட்டு மூக்கிட்டு முகரப்பட்டது. அப்பக்கத்தில் “ஆமாம்ப்பா… நேஜமாலுமே வாசனை வருது” என்று கூறி தமது பணம் வீணாகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்.
இதில் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விட்டார்கள் வாசகர்கள்.
அந்த வாசம் வீசும் பக்கங்கள் மீது அதன் விசேஷம் குறித்த செய்தி இருந்தது. அதனை படித்து நுகர்ந்து ரசித்தனர் எல்லோரும்.
பெரும்பான்மையான வாசகர்கள் எல்லோரும் அந்தப் புத்தகத்தை படித்தால் வாசம் ஓடி விடும் என்று பயந்து அந்த இதழில் வந்த ஏனைய அனைத்துப் பகுதிகளையும் படிக்காமலேயே விட்டு விட்டனர்.
ஒரே ஒரு பக்கம் மட்டும் வாசனையுடன் படிக்கப்பட்டு வீட்டில் கிடத்தப்பட்டது அந்த பத்திரிகையின் அவ்விதழ்.
அந்த இதழில் கதை, கட்டுரை, கேலி சித்திரம் படங்கள், ஓவியம். விமர்சனம் என ஏனைய பகுதிகளை எழுதிய நபர்களின் உழைப்பு வீணாகப் போனது என்னமோ உண்மை.
பிறிதொரு நாளில் படிக்கலாம் என்று கிடத்தப்பட்ட தீபாவளி மலர் போல அந்த வாசனை பத்திரிகை யாரும் படிக்காமலேயே தனித்து விடப்பட்டது.
சில காலம் கழிந்து அதன் வாசனையும் கரைந்து மறைந்து போனது.
அப்படி ஒரு பத்திரிகையின் இதழ் வந்தது மறந்தே போனது.
மேலும் பல விசேஷ பத்திரிகைகளும் வந்தன.
இலவச வெகுமதிகள் தாங்கிய இதழ்கள்.
மற்றவர் நமக்கு முன் படித்துவிட்டு விற்பனைக்கு வைக்காத வகையில் பாதுகாக்கப்பட்டு கவரில் சீல் செய்யப்பட்டு வரும் கைபடாத இதழ்கள்.
போட்டிகள் நடத்தி நம்மை பணக்காரர் ஆக்கும் பத்திரிகைகள்.
இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லும் பத்திரிகைகள்.
நமது ஆஸ்தான கதாநாயகரின் ஆளுயர படத்தினை அன்பளிப்பாக தரும் இதழ்கள்
இன்னும் நிறைய நிறைய நிறைய….
– ராமஸ்வாமி பாலசுப்ரமணியன்
நன்றி : முகநூல் பதிவு
#பத்திரிகை #இதழ் #மரிக்கொழுந்து_இதழ் #பொங்கல்_மலர் #தீபாவளி_மலர் #ஆண்டு_மலர் #செய்தித்தாள் #magazines #marikozhunthu_magazine #pongal_malar #deepavali_malar #aandu_malar #news_papers