மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்க உள்ள இந்த காலத்தில் உடல் நலத்தில் அக்கறை அவசியம் தேவை. குளிரின் தாக்கத்தால் சருமம் வறட்சி, அரிப்பு, சருமம் கருமை அடைவது மற்றும் சில உடல் நல பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில் உடல் வெப்பம் சீராக இருக்காது.
இதன் காரணமாக உடல் நலனில் பாதிப்பு உண்டாக்கும். கால நிலைக்கு ஏற்றது போல் உணவு முறைகளிலும் அக்கறையுடன் இருப்பது நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
பொதுவாக குளிர் காலத்தில் செரிமான பிரச்சனை இருக்கும் என்பதால் அசைவ உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.
குளிர்காலத்தில் உடல் வறட்சியாகவும், சோர்வாகவும், உடல் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும். உடலுக்கு போதுமான ஆற்றல் இல்லாமல் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும்.
இதனால் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக் கொள்வது குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய சூப் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக குளிர் காலத்தில் மூக்கடைப்பு, சளி, தொண்டை வலி, கை, கால் மரத்து போதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கு தீர்வாக குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறி மற்றும் கீரை சூப் வகைகள் பற்றி பார்க்கலாம்.
பாலக்கீரை சூப்:
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை – 1 கப்
சின்ன வெங்காயம்- 5
பூண்டு – 2
தக்காளி – 1 சின்ன அளவு
கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லித்தழை – தே.அ
வெண்ணெய் – தேவைக்கேற்ப
மிளத்தூள் – தே.அ
உப்பு – தே.அ
செய்முறை: முதலில் கீரை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு பொடியாக நறுக்கிய கீரை, தக்காளி, மிளகாய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போடவும் பின் தட்டிய பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த கீரை தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிவந்ததும் கான்பிளவர் மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்க்கவும். கொதிவந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் கீரை சூப் ரெடி.
பாலக்கீரையில் 90 சதவீதத்திற்கும் மேலாக நீர்ச்சத்தும் மற்றும் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடல்நலனை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் வறட்சியை போக்கும் காய்கறி சூப்:
குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறிகள் என்று பார்த்தால் உருளைக்கிழங்கு, கேரட், நூக்கல், காலிபிளவர், முட்டைக்கோஸ், கீரை போன்று பல காய்கள் உள்ளன. இவற்றில் அதிக அளவு நீர் சத்துக்கள் நிறைந்திருப்பதோடு சுவையும் அதிகம். இந்த காய்கறிகளை வைத்து எளிமையாக சூப் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1 கப்
பூண்டு – 1
கோஸ், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 1 கப்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1
உப்பு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கான்பிளவர் -1 ஸ்பூன்
செய்முறை: அடுப்பில் பாத்திரம் வைத்து வெண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய், பச்சைப் பட்டாணி மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். காய் பாதி வெந்ததும் உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
காய் வெந்ததும் மிளகுத்தூள், உப்பு கரைத்து வைத்த கான்பிளவர் சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
குளிர்காலத்தில் பல தொற்று நோய் பரவும் என்பதால் இந்த சூப் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
காய்ச்சல் இருக்கும் போது காய்கறி சூப் குடுப்பதால் உடல் சோர்வு நீங்கும். தோல் வறட்சியாக இருக்கும் போது தினமும் காய்கறி சூப் எடுத்துக் கொள்ளும் போது வறட்சி நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
சளிக்கு ஏற்ற தூதுவளை சூப்:
தேவையான பொருட்கள்:
தூதுவளை – 1 கைப்பிடி அளவு
துளசி – 1 கைப்பிடி அளவு
வெற்றிலை – 1
சுக்கு – சிறு துண்டு
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
திப்பிலி – அரை டீஸ்பூன்
சிட்டிகை – உப்பு
வெண்ணெய் – 1 ஸ்பூன்
பூண்டு – 2 பல்
கான் பிளார் – 1 ஸ்பூன்
செய்முறை: மேலே கூறிய அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும் இதனுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் கரைத்து வைத்துள்ள கான்பிளவர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் சூப் ரெடி.
தூதுவளையின் பயன்கள்:
நோய் தொற்று காரணமாக உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றுகிறது. தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், மார்பு சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து உடலுக்கு புது தெம்பை கொடுக்கிறது.
ஆகவே குளிர்காலத்தில் உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.
– யாழினி சோமு