கம்பன் மட்டுமல்ல நா.முத்துக்குமாரையும் சொல்லலாம்!

“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை”

“பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..”

நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால் அழகு பெறுகின்றன என்கின்றார் புலவர்.

இதுவே, சீதையைப் பற்றி, சூர்ப்பணகை இராவணனிடம் சென்று சொல்வதாக கம்பர் இப்படி வர்ணித்திருப்பார்.

இராவணா!,

“வில் ஒக்கும் நுதல் என்றாலும்,
வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;
சொல்லல் ஆம் உவமை உண்டோ?
“நெல் ஒக்கும் புல்” என்றாலும்,
நேர் உரைத்து ஆகவற்றோ!”

அதாவது,

“இராவணா, அந்த சீதை எப்படி இருக்கிறாள் தெரியுமா?

அவள் நெற்றி வில் போல் இருக்கும்,
அவள் விழி வேல் போல் இருக்கும்,
அவள் பல் முத்துப் போல் இருக்கும்,
அவள் இதழ்கள் பவளம் போல் இருக்கும்,

– என்றெல்லாம் சொன்னாலும், சொல்வதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது உண்மை இல்லை. அவளின் அழகுக்கு உவமையே இல்லை. இந்த நெல் இருக்கிறதே அது புல் மாதிரி இருக்கும் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா? இருக்காதல்லவா? அது போலத் தான் இந்த உவமைகளும் என்று சொல்கிறாள்.

அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை என்று சொல்வதாய் கம்பன் பாடுகிறான்.

கம்பனின் பாதிப்பு தமிழ்ப் பாடல்களிலும் கவிகளிலும் ஊறிப்போய் இருப்பது நிதர்சனமான உண்மை.

“பேரழகி என்றேதான்
பெண் அவளைச் சொன்னாலோ
சூரியனை பிறை என்று
சொல்லுவதைப் போல் ஆகும்” – என்ற பாடல் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

அது சரி, உண்மையில் அழகென்றால் என்ன?

அழகென்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால், பெரும்பாலான பாடல்கள் கம்பனின் கண்ணோட்டத்திலேயே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நா.முத்துக்குமாரின் பார்வையில் இயக்குநர் வசந்த பாலனின் பார்வையில் எங்கே வேறுபட்டதாய் அமைந்தது தெரியுமா?

‘அங்காடித் தெரு’ படத்தில், “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” பாடல்.

ஒரு பெண்ணின் அழகை வர்ணித்து எழுதியதில் மிகச் சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக் கூற வாய்ப்பே இல்லை.

“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை”

உங்கள் பார்வையில் அவள் பேரழகியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவளுக்கு இணையாக இங்கு யாரும் இல்லை அழகிலும் அன்பிலும். அவள் தோல் வேண்டுமென்றால் அடர் நிறமாய் இருக்கலாம். ஆனால் அதில் என்ன குறையிருக்கின்றது.

அவள் இந்த புத்தகப் பாடமெல்லாம் பெரிதாகப் படிக்கவில்லை, ஆனால், வாழ்க்கையை நன்றாகப் படித்திருக்கின்றாள், அவளை நான் படிக்கவே என் ஆயுள் வேண்டும்.

“அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை”

“அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை”.

“அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை”.

அவள் தங்க ஆபரணங்கள் எதுவும் அணிவதில்லை, சாதாரண உடையிலேயே என் கவனத்தை ஈர்ப்பாள். அவளின் எளிமை தானே அவளுக்கு அழகு.

“அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை”

– அவள் மிக சாதாரணமானவள், அவ்வளவு தான் அதுதான் எனக்குப் பிடித்திருக்கின்றது.

“அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை”.

“அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை”

என் வாழ்க்கை முழுவதும் ஒன்றாய்ச் செல்ல ஓர் துணையாய் உன் விரல்கள் போதும். அதில், தங்க மோதிரம் வேண்டாம். உன்னைத் தவிர்த்தால் எனக்கு யாரடி துணை. என் சொந்தம் எல்லாம் நீ தானே. உன்னைப் போல் என் மீது அன்பும் உரிமையும் உள்ளவர் இந்த உலகில் வேறு யார் இருக்கின்றனர்.

“அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை”.

ஆம், நான் கம்பனின் உவமைகளும் ஒப்பனைக் கவிகளுக்கும் ரசிகன் தான். ஆனால் நா.முத்துக்குமார் என்னை எதார்த்தத்தில் வாழக் கற்றுக் கொடுக்கின்றார்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like