நாட்டுப்புறவியலின் தந்தை நா.வானமாமலை!

“நா.வா” என்று இன்றும் அன்போடு அழைக்கப்படும் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிறந்தவர்.

மார்க்சிய சிந்தனையாளர். வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, அறிவியல் நூலாக்கம், தத்துவம் என்று நா.வா.வின் திறன் பரந்துபட்டது.

தமிழ் நாட்டார் கதைப் பாடல்களில் மண்ணின் மாண்புகள் உள்ளன என்பதை உணர்ந்தபடியால் அவற்றை ‘தமிழர் பாமரர் பாடல்கள்’ என்ற தலைப்பில் 1960-ல் பதிப்பித்து வெளியிட்டவர்.

தமிழில் ஏட்டியிலக்கிய மரபு மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்த அன்றைய சமூக சூழலில் வாய்மொழி இலக்கியங்களைத் திரட்டி மக்களின் வட்டார வழக்கு சொற்கள் மாறாமல் நூல் வெளியிட்டு, அவற்றிக்கு அங்கீகாரம் ஏற்படுத்தித் தந்தவர். தமிழக நாட்டார் பாடல்கள் புத்தக வடிவில் நமக்கு கிடைக்க அவரே காரணம்.

1969-ல் ‘ஆராய்ச்சி’ என்ற காலாண்டு ஆய்விதழை தொடங்கியதோடு ‘நெல்லை ஆய்வுக் குழு’ என்ற அமைப்பை தொடங்கி இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தியவர்.

தமிழ்நாட்டின் இலக்கியம், பண்பாடு, மானிடவியல், சமூகவியல் ஆகிய துறைகளில் தற்கால சமுதாய மாற்றங்களுக்கும், மக்கள் சிந்தனைப் போக்குகளுக்கு உள்ள தொடர்பை அறியும் ஆய்வுகளை முன்னெடுக்க அடித்தளம் அமைத்ததோடு, கல்விக்கூட ஆய்வுகளைத் தாண்டி மக்களுக்கு பயன்தரும் வகையில் ஆய்வுகள் அமைய அரும்பாடுபட்டவர்.

தமிழுக்கும், நாட்டார் எழுத்துக்கும் அவர் செய்த தொண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு நா.வானமாமலைக்கு நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும்.

ஆய்வாளர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், செந்தீ நடராஜன், முனைவர் நா.இராமசந்திரன், தோழர் நல்லகண்ணு, தோழர் சி.சொக்கலிங்கம், முனைவர் தி.சு.நடராஜன், பேரா.கா.சுப்ரமணியன், ஆ.சுப்ரமணியன், எழுத்தாளர் பொன்னீலன், பேரா.எஸ்.தோதாத்ரி போன்றோர் நா.வா-வின் மாணாக்கர்களும், நண்பர்களும் ஆவர்.

தமிழக நாட்டார் வழக்காற்றியலின் தந்தை நா.வானமாமலை அவர்களை நாமும் போற்றுவோம்.

– நன்றி: சித்திரவீதிக்காரன் முகநூல் பதிவு.

You might also like