குக்கரில் சமைக்கக் கூடாது 6 உணவுகள்!

மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன.

இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது.

உலை கொதித்து, அரிசியைப் போட்டு சோறு வெந்து வடிப்பதற்குள்அரை மணி – முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது.

ஆனால், அரிசியைப்போட்டு, தண்ணீரை ஊற்றி, இரண்டு விசில்வைத்து எடுத்தால், பத்தே நிமிடங்களில் சாதம் தயாரிகிவிடும் என்பதால், பல வீடுகளில் சாதம் தயாரிப்பதற்கு குக்கர்தான் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது பிரஷர் குக்கரின் வரிசையில் எலெக்டிரிக் ரைஸ் குக்கர், கஞ்சியைப் பிரித்தெடுக்கும் பிரஷர் குக்கர் என வகை வகையாகப் பல்வேறு குக்கர்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

அதுவும் இதுவரை சாதத்தை குக்கரில் சமைத்தது போக, தற்போது சமையலை விரைவில் முடிக்க வேண்டுமென்று குக்கரிலேயே அனைத்து உணவுகளையும் மக்கள் சமைக்கத் தொடங்கிவிட்டனர்.

குக்கரில் சமையல் செய்வதால் ஊட்டச்சத்துகளும் மருத்துவப் பயன்களும் கிடைக்குமா என்றால், இல்லை என்பதுதான் பதில். அதன் பயன்பாட்டை ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை.

அரிசியில் ஸ்டார்ச் அதிகமாகக் காணப்படும். குக்குரில் சமைக்கும்போது அதிலிருக்கும் ஸ்டார்ச் வெளியேறாமல் தங்கிவிடும்.

அந்த ஸ்டார்ச் மிகுந்த சோற்றைச் சாப்பிடும்போது உடலில் கார்போஹைட்ரேட் அதிகம் சேர்ந்துவிடும். தொடர்ந்து கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற வாழ்வியல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் உடல் எடை அதிகரிப்பதுதான் முக்கியக் காரணமாக உள்ளது.

ஒருவர், உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறாரா என்பதை உடல்நிறை குறியீட்டெண்ணின் (BMI – Body Mass Index) மூலம் கணக்கிட முடியும்.

தற்போது சரியான பி.எம்.ஐ-யில் உடலைப் பராமரிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

நூற்றுக்கு 90 பேர் சரியான எடையைப் பராமரிப்பதில்லை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு இதுபோன்ற உணவுப்பழக்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதுதான் நல்லது.

குழந்தைகளுக்கு குக்கரில் சோறு வைத்துக் கொடுக்கலாமா?

பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் குக்கரில் சமைத்த சோற்றைக் கொடுப்பது நல்லதல்ல. குழந்தைகள் தற்போது திறந்தவெளியில் அதிகம் விளையாடுவதில்லை.

வீட்டுக்குள்ளேயே வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட்போனில் வீடியோ பார்ப்பது என நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

அவர்களுக்கும் உடலுழைப்பு இல்லாத சூழ்நிலையில் குக்கரில் சமைத்த கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சோற்றைச் சாப்பிட்டால் சிறுவயதிலேயே உடல்பருமன் பிரச்னைக்கு (Childhood Obesity) ஆளாகிவிடுவார்கள். குழந்தைகள் வளரும்போதே அவர்களை ஆரோக்கியமற்றவர்களாக வளர்க்க வேண்டாம்.

காய்கறிகளைக் குக்கரில் சமைக்கலாமா?

காய்கறிகளில் தண்ணீரில் கரையக்கூடிய நிறைய வைட்டமின்கள் இருக்கும். குக்கரில் அதிகமான தண்ணீர் வைத்து காய்கறிகளை வேகவைத்து, விசில் அடித்து தண்ணீர் எல்லாம் வெளியேறிவிட்டால் அவற்றில் இருக்கும் சத்துகள் நீங்கிவிடும்.

பொதுவாகவே காய்கறிகள் எளிதாக வெந்துவிடும். அவற்றை வேகவைக்க அதிக அழுத்தத்துடன்கூடிய குக்கர் தேவையில்லை.

மூடியுடன்கூடிய அகலமான பாத்திரத்தில் அவற்றைச் சமைத்தாலே போதுமானது. அதில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்கூட, நீரை வடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் தூவி சூப் போன்று அதைக் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ குடிக்கக் கொடுக்கலாம்.

எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர், கஞ்சியை வடிகட்டும் குக்கர் நல்லதா?

சாதாரண பிரஷர் குக்கரோடு ஒப்பிடும்போது கஞ்சியை வடிகட்டும் பிரஷர் குக்கர், ரைஸ் குக்கர் போன்றவை ஓரளவு சிறந்தவைதான் என்றாலும், அவற்றையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக் கூடாது.

காரணம் அதிக அளவில் தண்ணீர் வைத்து, கஞ்சியை வடிக்கும்போதுதான் அதிலிருக்கும் ஸ்டார்ச் முறையாக வெளியேறும். குறைவான தண்ணீரில் சாதத்தைச் சமைக்கும்போது ஸ்டார்ச் முழுவதும் வெளியேறாது.

அரிசியில் இருக்கும் ஸ்டார்ச்சை நீக்கிவிட்டால் அதில் உடலுக்கு நன்மை தரும் நார்ச்சத்துகள் மட்டுமே காணப்படும்.

அதனால் சாதாரண பானையில் அதிகம் தண்ணீர் வைத்து அரிசியைச் சமைத்து, கஞ்சியை வடித்துவிட்டுப் பயன்படுத்திய நமது பழைய முறையைப் பின்பற்றுவதே நல்லது. எப்போதாவது அவசரத்துக்கு குக்கரில் ஒரு வெரைட்டி சாதமோ வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குப் பிரியாணியோ சமைப்பதில் தவறில்லை.

ஆனால், தினமும் குக்கரில் சமைப்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பிரஷர் குக்கர் மட்டுமில்லாமல் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் அவற்றின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. மீறினால்தான் ஆபத்து.

இந்நிலையில், என்ன தான் குக்கர் நமது வேலையை எளிதில் முடிக்க உதவினாலும், குக்கரில் அனைத்துவிதமான உணவுகளையும் சமைப்பது நல்லதல்ல.

ஏனெனில் சில உணவுப் பொருட்களை குக்கரில் வேக வைக்கும்போது, அந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்து, உணவு குப்பைக்கு சமமாகிவிடும்.

மேலும் எந்த உணவுகளையெல்லாம் குக்கரில் சமைக்கக்கூடாது மற்றும் அதற்கான காரணம் என்னவென்பதையும் தெரிந்து கொண்டு, அந்த உணவுகளை குக்கரில் சமைப்பதை தவிர்த்திடுங்கள். குக்கரில் சமைக்கக்கூடாத சில உணவுகளும், அதற்கான காரணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

1. பால் பொருட்கள்

பால் அடிப்படையிலான எந்த ஒரு உணவுப் பொருட்களையும் குக்கரில் சமைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை சமைத்தால், அதன் சுவை பாழாவதோடு, சில சமயங்களில் திரிந்து போய் அதன் அமைப்பே மாறிவிடும்.

எனவே க்ரீம், சீஸ், குளிர்ச்சியான பால் போன்றவற்றை குக்கரில் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மேலும் பால் பொருட்களை ஒரு உணவில் சேர்ப்பதாக இருந்தால், எப்போதும் அவற்றை இறுதியில் சேர்த்திடுங்கள். இதனால் உணவின் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.

2. பாஸ்தா

பாஸ்தா விரைவில் வேகக்கூடிய உணவுப் பொருள். இந்த பாஸ்தா அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், பின் அது குலைந்து உணவின் அமைப்பையும், சுவையையும் பாழாக்கிவிடும்.

எனவே பாஸ்தாவை சமைப்பதாக இருந்தால், அதை பாத்திரத்தில் போட்டு சமைத்து சாப்பிடுங்கள். முடிந்தவரை நீரில் தனியே வேக வைத்து, பின் அதை மசாலாவுடன் சேர்த்து கலந்து 1 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள்.

3. உறைய வைக்கப்பட்ட உணவுகள்

உறைய வைக்கப்பட்ட உணவுகளை சூடேற்றும் போது, அது அதிகப்படியான நீர் வெளியேறி, உணவின் அனைத்து பகுதிகளும் சரிசமமாக வேகாமல் போகலாம்.

அதுவும் இந்த வகை உணவுகளை குக்கரில் வேக வைக்கும் போது, உணவின் சில பகுதிகள் அதிகமாக வெந்தோ, பிற பகுதிகள் சரியாக வேகாமலோ போகலாம்.

எனவே உறைய வைக்கப்பட்ட உணவுகளை சமைப்பதாக இருந்தால், அவற்றை சமைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே வெளியே வைத்து, அறைவெப்பநிலைக்கு வரவழைத்து, அதன் பின் சமைத்திடுங்கள்.

4. பச்சை இலைக் காய்கறிகள்

குக்கரில் சமைக்கக்கூடாத மற்றொரு உணவுப் பொருள் என்றால் அது கீரை, கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் தான்.

இந்த வகை இலை உணவுகளை குக்கரில் சமைத்தால், அது சுவை மற்றும் அமைப்பை பாழாக்கிவிடும்.

பச்சை இலை காய்கறிகளை அதிகமாக சமைத்தால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும். பின் அந்த உணவுகளை சாப்பிடுவதே வேஸ்ட் தான்.

5. முழு தானியங்கள்

பார்லி, திணை போன்ற சில தானிய வகைகளை சமைக்க வெவ்வேறு நேரங்கள் தேவைப்படும். ஆனால் இந்த வகை தானியங்களை குக்கரில் சமைத்தால், அதன் அமைப்பு பாழாகிவிடும்.

தானிய வகைகள் அதிகப்படியான நீரை உறிஞ்சக்கூடியவை. இந்த வகை முழு தானிய வகை உணவுகளை பாத்திரத்தில் சமைப்பது தான் எப்போதும் சிறந்தது.

6. மென்மையான காய்கறிகள்

அஸ்பாரகஸ், நீர் பூசணி, குடைமிளகாய் போன்ற மென்மையான காய்கறிகளை குக்கரில் சமைக்கக் கூடாது. அப்படி சமைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படுவதோடு, அதன் அமைப்பும், சுவையும் மாறிவிடும்.

எனவே இந்த வகை காய்கறிகளை குக்கரில் சமைக்காமல், பாத்திரத்திலேயே வேக வைத்து சாப்பிடுங்கள்.

நன்றி: வேல்ஸ் மீடியா இணையதளம்

You might also like