அருமை நிழல்:
கும்பகோணத்தில் திட்டையை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ தித்தாய் சீனிவாசன் ராஜகோபாலன், பூஜைப் பொருட்கள், சந்தனம், ஊதுபத்தி மற்றும் பன்னீர் தயாரிக்கும் நிறுவனத்தைத் T.S.R & Co (Thittai Srinivasan Rajagopalan & Company) துவங்கினார்.
வாசனை திரவியங்களைத் தயாரிப்பதில் அவர் முன்னோடியாக இருந்தார். அனைத்து பொருட்களிலும் சந்தனமே பிரதானமாக இருந்தது.
ஸ்ரீ டி.எஸ்.ஆர், வேளாண்மை மற்றும் உற்பத்தி மற்றும் வணிகத் துறையில் ஈடுபட விரும்பினார், இதனால் 1909-ம் ஆண்டில் தொழில் ரீதியாக முன்னேறிய நகரமாக இருந்த கும்பகோணத்தில் வணிக முயற்சியைத் தொடங்கினார். கும்பகோணத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் முன்னோடி இவரே என்பது கூடுதல் தகவல்.
அப்படிப்பட்ட T.S.R நிறுவனம், 1956-ல் கோகுல் சாண்டல் டால்கம் பவுடரை (அந்தக் காலத்தில் கோகுல் சாண்டல் டாய்லட் பவுடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது) உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதற்காக சென்னை ராமாபுரத்தில் தொழிற்சாலையைத் துவங்கியது.
கும்பகோணத்தில் இருந்துகொண்டு சென்னையில் மிகப்பெரிய வணிக நிறுவனத்தைத் தொடங்கிய சீனிவாசன் ராஜகோபாலன் அவர்களையும், அந்த நிறுவனத்தையும் கௌரவிக்கும் வகையில் ஒரு தெருவிற்கு கும்பகோணத்தில் T.S.R பெரிய தெரு எனப் பெயரிடப்பட்டது.
இந்த பவுடரை பயன்படுத்தாதவர்கள் மிக அரிது எனலாம். இந்த பவுடரை நினைத்தாலே அதன் வாசனை நம் நினைவலைகளில் வந்து செல்லும்.
இன்று எத்தனையோ பன்னாட்டு நிறுவனங்களின் பல பவுடர்களுடன் இந்த பவுடரும் நிலைத்து நிற்பதே அதன் தரத்திற்கு சான்று.
இந்த நிறுவனம் துவங்கப்பட்ட காலகட்டத்தில், நடிகை சரோஜாதேவி கோகுல் சாண்டல் பவுடர் விளம்பரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
– நன்றி: முகநூல் பதிவு.