நான்காயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்!

படத்தில் இருக்கிறாரே இந்த புத்தகக் கடை உரிமையாளர் இவரது பெயர் முகமது அசிஸ். வயது 72.

மொராக்கோ நாட்டின் தலைநகரமான ரபாத்தில் இவர் கடை வைத்திருக்கிறார். உலகத்தில் அதிக அளவில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட புத்தகக் கடைக்காரர், நூலகர் இவர்தானாம்.

முகமது அசிஸ், மொராக்கோ நாட்டில் புத்தகக் கடை நடத்துவதே ஒரு சாதனைதான். காரணம், மொராக்கோ மக்களில் 26 விழுக்காடு பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.

முகமது அசிஸ் மட்டும் படிக்கத் தெரிந்தவரா என்று கேட்பீர்கள். ஆறு வயதில் அப்பா, அம்மா இல்லாமல் ஆதரவற்ற நிலைக்குப் போனவர் முகமது அசிஸ். பாடநூல்கள் விலை அதிகம் என்பதால் பள்ளிப்படிப்பைக்கூட இவரால் முடிக்க முடியவில்லை.

அதனால் என்ன? பதினைந்து வயதில் ஒரு மரத்தின் அடியில் பாய் விரித்து வெறும் 9 புத்தகங்களுடன் தனது முதல் புத்தகக் கடையை இவர் தொடங்கியிருக்கிறார். இன்று இவரிடம் பல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன.

புத்தகங்களுடன் புழங்கி புழங்கி இவர் அரபி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் என நான்கு மொழிகளில் வாசிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார். இந்த நான்கு மொழிகளில் இதுவரை நான்காயிரம் புத்தகங்களை இவர் வாசித்திருக்கிறாராம்.

(இந்த நேரம் நம்ம தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் உங்கள் நினைப்பில் வந்துவிட்டு போவார். அவரை மறந்து விட்டு பதிவைத் தொடர்ந்து படியுங்கள்)

‘நான்காயிரம் புத்தங்களை வாசித்ததன் மூலம் நான்காயிரம் வாழ்க்கைகளை நான் வாழ்ந்திருக்கிறேன்’ என்கிறார் முகமது அசிஸ்.

43 ஆண்டுகளாக ஒரே இடத்தில் கடைவைத்திருக்கிறார் இவர். பெரிய அளவில் கொள்வாரில்லை என்றாலும் கடையைக் கட்ட இவருக்கு மனமில்லை.

இவரது புத்தகங்களில் பாதி, கடைக்கு வெளியே நடைபாதையில் வைக்கப்பட்டிருக்கும். ‘யாரும் திருடிக் கொண்டு போய்விட மாட்டார்களா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்கிறார் முகமது அசிஸ்.

‘படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் தேவைப்படாது. படித்தவர்கள் புத்தகங்களைத் திருட மாட்டார்கள்’ என்கிறார் முகமது அசிஸ்.

மொராக்கோ ரொம்ப நல்ல நாடு போலிருக்கிறது. இதுவே நம்ம நாடாக இருந்தால் புத்தகங்களை எடுத்து எடைக்குப் போட்டுவிடுவார்கள்.

அப்புறம் இன்னுமொரு கசப்பான விடயம். நம்ம நாட்டில் படித்தவர்கள்தான் அதிக அளவில் திருட்டு புரட்டுகளில் ஈடு படுகிறார்கள்.

‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று மகாகவி பாரதியையே சொல்ல வைத்தவர்கள் அல்லவா நம் நாட்டுக்காரர்கள்.!

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.

You might also like