பெரியார் பேசாத, எழுதாத பொருளே இல்லை!

பெரியாரின் இரங்கல் உரைகள்

நூல் அறிமுகம்: பெரியாரின் இரங்கல் உரைகள்!

* தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் தினமும் பேசினார், தினமும் எழுதினார். தனது முந்தைய நாள் பொதுக்கூட்ட உரைகளை தனது குடிஅரசு / விடுதலை நாளிதழ்களில் அடுத்த நாளே வெளியிட்டு அவைகளை உலகுக்கு அறியச் செய்தார்.

இப்படிச் செய்த தலைவர் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே வேறொருவரும் இல்லை என்பதை மறந்துவிடலாகாது !

* பெரியார் எழுதாத பொருள் இல்லை. அவர் எழுதாத நிகழ்வுகளும் இல்லை. முக்கியமாக அரசியல், சமூக நிகழ்வுகளைப் பற்றி உடனுக்குடன் தனது கருத்தையும் சேர்த்து எழுதுவதிலும் அவரை மிஞ்ச முடியாது!

அத்தோடு அவர் தன்னோடு பயணித்த தோழர்கள் பற்றியும், தலைவர்கள் பற்றியும், அகில இந்திய தலைவர்கள் பற்றியும், உலகத் தலைவர்கள் பற்றியும், தான் கண்டதை, கேட்டதை, பேசியதை தவறாமல் தினமும் பதிவு செய்தார் !

* அதுபோலவே அவர்களின் மறைவுச் செய்திகளையும் அவர்களுக்கான இரங்கல் உரைகளையும் அவ்வப்போது எழுதி வெளியிட்டார்.

அந்த இரங்கல் உரைகளில் அந்த ஆளுமைகள் பற்றிய பல தகவல்களையும் அவர்கள் மீது பெரியார் கொண்டிருந்த அன்பு, மரியாதை, உயர்வான எண்ணங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது !

* அவ்வாறு பெரியார் தனது குடிஅரசு மற்றும் விடுதலை நாளிதழ்களில் வெளியிட்ட பல்வேறு இரங்கல் உரைகளிலிருந்து 67 இரங்கல் உரைகளைத் தொகுத்து இந்த நூலை தந்துள்ளார் தோழர் இக்லாஸ் உசேன்.

அவரது சிறப்பான பணியைப் பாராட்டி இந்த நூல் அறிமுகவுரையை தருகிறேன் !

* இந்த நூலில் தரப்பட்டுள்ள 67 இரங்கல் உரைகளிலிருந்து சில உரைகள் எந்த ஆளுமைகளுக்காக எழுதப்பட்டுள்ளது என்று அவர்களின் பெயர்களை அறியும்போது, இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கே தோன்றும்! அந்த ஒரு சில ஆளுமைகளின் பெயர்கள் :

* சர். பிட்டி. தியாகராயர் செட்டியார் | பனகல் அரசர் சர். இராமராய நிங்கவாரு | லாலா லஜபதி ராய் | பண்டித மோதிலால் நேரு | புரட்சியாளர் பகத் சிங் | நாகம்மையார் | அன்னா உவியானோவா (லெனின் சகோதரி) | சின்னத் தாயம்மாள் (பெரியாரின் தாயார்) | வ. உ. சிதம்பரம் பிள்ளை | டாக்டர் நடேசன் |

* சர். ஏ. டி. பன்னீர் செல்வம் | மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி | முகம்மது அலி ஜின்னா | பட்டுக்கோட்டை அழகிரி சாமி | ஜோசப் ஸ்டாலின் | திரு வி க | டாக்டர் அம்பேத்கர் | டாக்டர் வரதராஜுலு நாயுடு | பண்டித ஜவஹர்லால் நேரு | லால் பகதூர் சாஸ்திரி | அறிஞர் அண்ணா | பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் | இராஜாஜி |

* இந்த பட்டியலில் உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை; காங்கிரஸ் தலைவர்கள் முதல் கம்யூனிச தலைவர்கள் வரை; குடும்ப உறவுகள் முதல் கொள்கை உறவுகள் வரை;

திராவிட இனத் தலைவர்கள் முதல் திராவிடர் கழகத் தொண்டர்கள் வரை – எல்லாப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பற்றியும் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துபோன பின்னர் அந்த பிரிவின் தாக்கத்தைப் பற்றியும் இரங்கல் உரைகளாக, இரங்கல் இலக்கியமாக பெரியார் படைத்திருப்பதை அறிய முடிகிறது !

* ஆங்கிலேய அரசு புரட்சியாளர் பகத்சிங்கை 23.03.1931 அன்று அன்றைய பஞ்சாபின் லாகூர் சிறையில் தூக்கிலிட்டு கொன்றார்கள். வீரமரணம் அடைந்தார் தோழர் பகத்சிங். அந்த புரட்சியாளருக்காக பெரியார் எழுதிய இரங்கல் உரையும் புரட்சிகரமாக இருந்தது !

அதில் சில துளிகள் :

* “திரு பகத் சிங் தூக்கிலிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுவதற்கு ஆதாரமே இருந்திருக்காது.

அன்றியும் பகத்சிங்கை தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தியத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்வோம் !

* சும்மா தானாகவே நோய் கொண்டு அவஸ்தைப்பட்டுச் செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத் சிங்குக்கு, இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும் சாந்தியும் அளிக்கத் தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத்தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது !

* சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெறும் பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம் !
பாராட்டுகின்றோம் ! !
பாராட்டுகின்றோம் ! ! ! ”

(குடிஅரசு  – தலையங்கம் – 29.03.1931)

* பெரியாரோடு கள்ளுக்கடை மறியல் போராட்டம் முதல் வைக்கம் போராட்டம் வரை எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்த அவரது துணைவியார் நாகம்மையார் நோய்வாய்ப்பட்டு 11.05.1933 அன்று இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்காக பெரியார் எழுதிய இரங்கல் உரையை ‘இரங்கல் காவியம்’ என்றே பலரும் வியந்து பாராட்டி வருவதை நாம் அறிவோம்!

பெரியார் தனது உள்ளத்தைத் திறந்து அதில் உள்ளதை எவ்வித ஒழிவும் மறைவும் இல்லாமல் எழுதியதையே காவியமாகவும் இலக்கியமாகவும் கருதுகின்றார்கள்!

பெரியாரின் வலிகளைச் சொல்லும் சில வரிகள் :

* “நாகம்மையார் மறைந்தது
எனக்கு ஒரு –
அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா ?
ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா ?
இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா ?
உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா ?
ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா ?
எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா ?
எதுவும் விளங்கவில்லையே! ” என மிக நீண்டதொரு இரங்கல் உரையை எழுதியிருந்தார்!
(குடி அரசு – தலையங்கம் – 14.05.1933)

* பெரியார் யார் மீதாவது மிகமிக மரியாதையும் மதிப்பும் உயர்வான எண்ணமும் வைத்திருந்தார் என்றால் அது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் மீதுதான்.

“இந்த நாட்டுக்காக தனது வாழ்க்கையையும் சொத்தையும் சுகத்தையும் இழந்த ஒரே தேசாபிமானி வ.உ.சிதம்பரம் பிள்ளை!” என்று பல மேடைகளில் பேசியுள்ளார். அந்த தியாக உருவம் வ.உ.சி 18.11.1936 அன்று மறைந்தார் !

* வ.உ.சியின் மறைவுக்காக பெரியார் எழுதிய இரங்கல் உரை ஒவ்வொரு தேசாபிமானியையும், பார்ப்பனரல்லாதாரையும் அவர்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு தூண்டியது என்று சொன்னால் மிகையாகாது !

அதிலிருந்து இதோ :

* “அரசனை விஷ்ணுவாகக் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழ வேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்கக் காலத்தில், மற்றும் தண்டனை சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும் துன்பமாகவும் இருந்த காலத்தில்,

தென்னாட்டில் முதல் முதல் வெளி வந்து, அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து, துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து, சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்றுக் கலங்காமல், மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில், முதன்மை வரியில், முதன்மை இலக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம்!

* தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் – லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டடம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பர நாதர் கோயில், சிதம்பரம் பண்டு (Fund), காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்துச் சிலை, சிதம்பரம் உருவப் படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார் !

* ஆனால் அவரோ (வ.உ.சி) பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளையானாலும் ‘சூத்திரப் பிள்ளை’ ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்ததோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டு கூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது!” 
(குடி அரசு – தலையங்கம் – 22.11.1936 )

* பெரியாரின் இரங்கல் உரைகள் தொகுப்பு நூலிலிருந்து புரட்சியாளர் பகத் சிங், அன்னை நாகம்மையார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆகியோரின் மறைவிற்குப் பின் எழுதப்பட்ட இரங்கல் உரைகளை அறிமுகம் செய்து வைத்தேன்.

அதைப் போன்றே மற்ற ஆளுமைகளின் மறைவுக்கு பெரியாரின் இரங்கல் உரைகளும் நிறைய தகவல்களோடும் நிறைய உண்மைகளைப் பேசுவதாகவும் அமைந்துள்ளது.

இந்த நூல் முழுவதையும் படித்துப் பயன் பெறுவீர் !

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.
 
*************

நூல்: பெரியாரின் இரங்கல் உரைகள்!
தொகுப்பு: இக்லாஸ் உசேன்
வெங்காயம் பதிப்பகம்
முதல் பதிப்பு: 2023
பக்கங்கள்: 202
விலை: ரூ. 210/-

You might also like