டிசம்பர்-2: சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்!
மனித இனம் மண்ணில் மலர்ந்தபோது வாழ்வியலின் அடிப்படைத் தேவைகள் பொது நிலையில் இருந்ததால் அது பொதுவுடைமைச் சமூகம் எனப்பட்டது.
அது சாதி, மத, இன வேறுபாடுகளற்ற, வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற, தன்னலம் தலை தூக்காத சமூக அமைப்பாக இருந்தது.
பொதுவுடைமைச் சமூகம் என்று தனியுடைமைச் சமூகமாக மாறி தனக்கெனச் சொந்தம் கொண்டாடத் தொடங்கியதோ அன்று முதல் தனிநபர்கள் மற்றும் குழுக்களிடையே போட்டிகளும் போராட்டங்களும் உருவாகின.
இதனால் ஒருவர் மற்றொருவர் மீதும், ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தின் மீதும், ஒரு சாதியினர் மாற்றுச் சாதியினர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் மனநிலையும் சூழலும் உருவானது.
சட்டங்களும், சம்பிரதாயங்களும், நிர்வாக அமைப்புகளும் இதனைத் தடுத்திட முனைந்தாலும் சாதி, மதம், இனம், மொழி, நிறம், அரசியல், கலாசார, பொருளாதாரக் காரணிகள் பின்னிப் பிணைந்து ஒரு பலமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்ததால் அத்தகைய அமைப்புகளில் யாரும் தலையிட்டுத் தீர்வு காண முடியாமல் “அடிமைச் சமூகம்“ உருவாக்கப்பட்டது.
“நாகரிங்களின் தொட்டில்” என வர்ணிக்கப்படும் தொன்மை நாகரிக நாடுகளான கிரேக்கம், எகிப்து, ரோம், அரேபியா, சீனாவிலும் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூகத் தகுதியாகக் கருதப்பட்டது.
பிற நாடுகள் அல்லது இனங்களின் மீது தங்கள் கலாசாரத்தைத் திணித்தல், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளில் பூர்வகுடி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கொன்று குவித்தனர். தப்பித்தவர்களை அடிமைகளாக்கினர்.
அதிகார ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அடிமைகள் உருவாக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் நிறம் மற்றும் கலாசார அடிப்படையில் மனித இனத்தைப் பாகுபடுத்தி பெரும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அடிமை முறையை வளர்த்து உலகமெங்கும் வீரியம் பெறச் செய்தனர்.
அதனடிப்படையில் கருப்பின மக்கள் தாழ்வானவர்களாக, விலங்குகளை விடக் கேவலமானவர்களாக நடத்தப்பட்டனர்.
வசதி படைத்தவர்கள் அடிமைகளை ஷாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டனர். அடிமை வர்த்தகம் உலக அளவில் பிரபலமான தொழிலாக உருவானது. அடிமைகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன.
இவற்றில் “மனிதனை மனிதனே” விற்கும் மாபெரும் அவலம் அரங்கேறியது. இந்த இழி நிலையை முற்றிலும் தடுத்திடும் நோக்கில் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடிமை ஒழிப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
பிரெஞ்சுப் புரட்சி அடிமை முறையைத் தடை செய்ய வழிவகுத்தது. மாவீரன் நெப்போலியன் தலைவரானவுடன் அடிமைத் தனத்தின் பல தடைகளை நீக்கினான். தொடர்ந்து பல நாடுகள் அடிமை முறையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
உலக வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனும் மார்டின் லூதர் கிங்கும் அமெரிக்க அடிமை ஒழிப்பு வரலாற்றில் மறக்க முடியாதவர்களாவர்.
அமெரிக்க தேசத்தையே கட்டி ஆளும் பெரும் பதவியை வகித்த லிங்கனுக்கும் அடிமை அனுபவம் உண்டு.
லிங்கன் ஒரு புத்தகப் பிரியர். குடும்ப வறுமை அவரை சொந்தப் புத்தகம் வாங்கவிடாமல் தடுத்தது.
எனவே நகரங்களில் வாழும் பெரும் செல்வந்தர்களிடம் கெஞ்சிக் கேட்டுப் புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
ஒரு முறை அமெரிக்காவின் விடுதலைக்குக் காரணமான ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
புத்தகத்தை அன்றே படித்துத் திருப்பித் தந்துவிடத் துடித்தாலும் வீட்டு விளக்கில் எண்ணெய் தீர்ந்ததால் அவரால் படித்து முடிக்க இயலவில்லை. எனவே புத்தகத்தைத் தன் குடிசை வீட்டின் கூரையில் செருகி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றார்.
மறுநாள் காலையில் புத்தகத்தைப் பார்த்த போது இரவு பெய்த மழையில் அது நனைந்திருந்தது.
உடனே புத்தக உரிமையாளரிடம் சென்று புத்தகம் நனைந்த விவரத்தைக் கூறினார். உரிமையாளரோ புத்தகத்திற்கான விலையைக் கொடு அல்லது என் பண்ணையில் மூன்று நாள்கள் அடிமையாக வேலை செய் என்றார்.
லிங்கனால் பணம் தர இயலாததால் அவரது பண்ணையில் வேலை செய்யச் சம்மதித்தார்.
மூன்று நாள்களுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தைத் தனக்குச் சொந்தமாக்கித் தழுவிக் கொண்டு கண்ணீர் வடித்தார்.
அந்த அடிமைத்தனத்தின் பாதிப்பால் அமெரிக்க அதிபரானவுடன் அடிமை விலங்கை அறுத்தெறிந்து வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்.
“அமெரிக்காவே நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்களை மிதித்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறாய்.
ஏதோ சில மனிதர்கள் மட்டுமல்ல. எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா. இலக்கு நோக்கித் திரும்ப வா” என போர்க் குரலெழுப்பி, நிறவெறிச் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடிய மக்களின் போராளி மார்டின் லூதர் கிங்கின் பங்களிப்பு ஈடு இணையற்றது. மகத்துவமானது.
உலக நாடுகள் அனைத்திலும் அடிமை முறை அல்லது அடிமைத் தனம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டு நின்றது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
தற்போதைய புள்ளி விவரப்படி இந்தியாவில் 1.8 கோடிப் பேர் எந்தவொரு சிறு கேள்வியும் கேட்க முடியாமல் நவீன அடிமைகளாக வாழ்ந்து வருவதை உலக அடிமைத்தன அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளவில் வெளியிடப்படும் அடிமைத்தனக் குறியீட்டு நாடுகளில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நவீன அடிமைத்தனம் கொத்தடிமை:
கட்டாயம் பிச்சையெடுக்க வைக்கப்படுபவர்கள், வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தபபெவர்கள், பாலியல் தொழிலில் தள்ளப்படுபவர்கள் எனப் பலவாறாக வெளிப்பட்டு நிற்கிறது.
சுதந்திர நாட்டில் மனிதர்களின் சம உரிமை நசுக்கப்பட்டு போராட்டக்களமாக்கப்படும் வெட்கக்கேடு. அழு என்றால் அழுவதற்கும். சிரி என்றால் சிரிப்பதற்கும். விழு என்றால் விழுந்து சாவதற்கும் அவர்கள் ஒன்றும் திக்கற்றவர்கள் அல்ல.
அடிமைகளாயினும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக எல்லாத் தகுதிக்கும் உரிய மனிதர்கள் அவர்கள்.
எனவே அவர்களை மீட்டுப் புதிய சமூகம் படைப்பதில் நாம் ஒவ்வொருவரும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்துவோம் எனச் சூளுரைப்போம்.
இரா. வெங்கடேஷ், உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்.
– நன்றி: தினத்தந்தி