‘கடவுளே.. அஜித்தே..’ டைப்பில் ‘விடாமுயற்சி’ டீசர்!

நடிகர் அஜித்குமாரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள் முதல் ‘அப்டேட்’ குறித்து அலப்பறைகள் கொடுப்பது அவரது ரசிகர்களின் வழக்கம்.

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் நடிகைகள் என்று அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் அத்தகவல்களைக் கேட்ட காலம் மலையேறி, சம்பந்தமே இல்லாமல் அரசியல் தலைவர்கள் வருகையின் போதும் விளையாட்டு மைதானங்களில் நிகழும் கொண்டாட்டங்களின் போதும் அந்த ‘அட்ராசிட்டி’ நிகழ்ந்ததுண்டு.

அதே போன்று படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளிவருவது முதல் படம் வெளியாகிற நாள் வரை பல யூகங்கள் சமூக வலைதளங்களில் உலா வரும்.

திரையுலகோடு இணைந்து பயணிக்கிற பத்திரிகையாளர்கள் தரும் தகவல்களும் ‘இதோ வருது.. அதோ வருது..’ ரகத்தில் இருந்தால், அவையும் கூடச் சூடான செய்தியாக மாறும்.

அந்த வரிசையில், ‘விடாமுயற்சி’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் நடிகைகள் தேர்வு வரை பல தகவல்கள் கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அவற்றில் மிகச்சில மட்டுமே படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தவை.

குறுகிய காலத் தயாரிப்பாக அமையும் என்ற உறுதியோடு தொடங்கப்பட்ட காரணத்தால், வழக்கமான அஜித் படத்தைவிட அதிகமாகவே ‘அப்டேட்’களை எதிர்பார்த்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் அது நிகழவே இல்லை.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டீசர் குறித்த அப்டேட்களும் எப்போது வெளிவரும் என்ற கேள்வி அவர்களிடத்தில் பொங்கிப் பிரவாகமெடுத்தவாறே இருந்தது.

லைகா நிறுவனம், இயக்குனர் மகிழ் திருமேனி தொடங்கிப் பலரிடமும் அது பற்றிக் கேட்பது ஒரு வழக்கமாகிப் போனது.

இந்த நிலையிலேயே, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நவம்பர் 28ஆம் தேதி இரவு வெளியாகியிருக்கிறது ‘விடாமுயற்சி’ டீசர்.

டீசர் காட்டும் உலகம்!

விடாமுயற்சி திரைப்படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜான் நாட்டில் நடந்ததாகவே செய்திகள் வந்தன. அதனைக் குறிப்பிடும் வகையில் இந்த டீசர் தொடங்குகிறது.

ஒரு வெளிநாடு. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு தம்பதி. அவர்களைத் துரத்தும் ஒரு கும்பல். பிறகு, அந்த கும்பலை அந்த ஆண் மட்டும் தனியாகத் தேடியலைகிறார்.

அதுவே, நடந்தது என்ன என்பதைச் சொல்வதாக விரிகிறது ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர். இதில் அவர்களைப் போலவே இன்னொரு தம்பதியும் காட்டப்படுகின்றனர்.

வெளிநாட்டில் நிகழ்வதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு வாழ்பவர்களாகச் சிலர் வந்து போயிருக்கின்றனர்.

‘தெரியாத மொழி, தெரியாத நாடு, அங்கு தனது மனைவியைத் தேடி ஒரு கணவன் அலையும் கதை’ என்பதாக ‘விடாமுயற்சி’ குறித்துச் சில தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. டீசரும் கூட அதையே சொல்கிறது.

இது ‘பிரேக்டவுன்’ எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால், எனக்கு இப்படத்தைப் பார்த்தவுடன் ‘எ பெர்பெக்ட் கெட்டவே’ நினைவுக்கு வந்தது.

நிச்சயமாக அந்தப் படத்தைத் தழுவி எடுத்திருக்க மாட்டார்கள் என்றாலும், அது போன்ற ‘ட்ராவல் த்ரில்லர்’ வகைமைப் படங்களின் தாக்கம் இதில் இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கேசண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்திருப்பது டீசரில் தெரிய வருகிறது. ஓம் பிரகாஷ் இதில் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார். அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

கடவுளே.. அஜித்தே..!

ஒரு திரையரங்க வாசலில் அஜித் ரசிகரிடம் ‘படம் எப்படியிருகிறது’ என்று கேட்கப்பட்டபோது, ஏதேதோ சொல்லி வந்தவர் திடீரென்று ‘கடவுளே.. அஜித்தே..’ என்று சொன்னார். அந்த வீடியோ அஜித் ரசிகர்களிடத்தில் வைரலானது.

அதன் தொடர்ச்சியாக, ஒரு தேனீர் கடையில் ரசிகர் கூட்டமொன்று ‘கடவுளே.. அஜித்தே..’ என்று கூக்குரலிடும் வீடியோ வெளியானது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோக்கள் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்கப்பட்ட காலத்தில் திடீரென்று மீண்டும் மறுசுற்றுக்கு வந்தது.

அதன்பிறகு பல இடங்களில் ‘கடவுளே.. அஜித்தே..’ என்ற அஜித் ரசிகர்களின் கூக்குரல்கள் பெரிதாகின. சமீபத்தில் சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது கூட இந்தக் குரல் கேட்டு விளையாட்டு வீரர்கள் திகைத்துப் போனார்கள்.

அதனை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ, ‘விடாமுயற்சி’ டீசரில் ஒலிக்கும் பின்னணி இசையில் ‘முயற்சி.. விக்டரி..’ என்று அஜித் உரத்த குரல் ஒலிக்கிறது அதே தொனியில்..

கார்களின் கிறீச்சிடும் சத்தம், துப்பாக்கி குண்டு மழைக்கு நடுவே, அதிரும் இசையோடு அந்தக் குரல் ஓலிக்கையில், தியேட்டர்களில் ‘கடவுளே.. அஜித்தே..’ என்றெழும் பெருங்குரல் இப்போதே மனத்திரையில் அதிர்கிறது.

படம் வெளியாகும்போது அந்த மாயாஜாலம் நிகழுமா? வரும் பொங்கல் அன்று அது தெரிந்துவிடும்.

-மாபா

You might also like