அண்ணாவின் ‘நல்லதம்பி’!

என்.எஸ்.கே அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் தனிமரியாதையும் அன்பும் அதிகமுண்டு. ஏனெனில் அவர் சிறைவாசத்தின் போது மக்கள் மனதில் எப்போதும் கலைஞர் என்.எஸ்.கே. அவர்களின் நினைவு இருக்கும் படியாக திராவிட நாடு என்ற ஏட்டில் எழுதி வந்திருக்கிறார்.

காஞ்சீபுரம் போனதும் அண்ணா மிக உற்சாகத்துடன் எங்களை வரவேற்று நாங்கள் வந்த விஷயத்தையெல்லாம் அறிந்து உடனே எங்களுடன் காரில் சென்னைக்குப் புறப்பட்டார்கள்.

நாங்கள் அவரிடம் கொடுத்த குறிப்புகளையும் கதையின் விவரத்தையும் கேட்டு இந்தக் கதையின் ஆங்கிலப் படம் பார்ப்பதற்குக் கிடைக்குமா என்று விசாரிக்கச் சொன்னார்.

என்.எஸ்.கே. அவர்கள் பார்ப்பதற்காக முன்பே நாங்கள் கேட்டபோது அதன் காப்பி கிடைக்காது என்ற தகவல் எங்களுக்குத் தெரிந்திருந்ததால் அதையும் அவரிடம் சொன்னோம்.

அன்று மாலையே ஒரு ஆங்கிலப் படம் பார்க்க வேண்டுமென்று கிருஷ்ணன் – பஞ்சு அவர்களுடன் படம் பார்த்து விட்டு இரவு விருந்து சாப்பிட்டதும் நாங்கள் கொடுத்த குறிப்புகளுடன் காஞ்சிக்குப் புறப்பட்டார்கள்.

போகும்போது என்.எஸ்.கே அவர்களிடம் நான் இதைப் பார்த்து திரைக்கேற்றபடி ஒரு கதையை உரையாடல்களுடன் எழுதி அனுப்புகிறேனென்று சொல்லிப் போனார்கள்.

பைத்தியக்காரன் படம் வெளியான சமயம் ஏவி.எம். செட்டியார் அவர்கள் காரைக்குடியில் தேவகோட்டை ரஸ்தாவிலுள்ள அவரது ஸ்டுடியோவைக் காலி செய்துவிட்டு சென்னையில் மிகப்பெரிய அளவில் கோடம்பாக்கத்தில் தற்போதுள்ள ஏவி.எம். நிறுவனத்தை நிறுவினார்கள்.

இது சமயம் கார் அனுப்பி ஸ்டுடியோவுக்கு அழைத்திருந்தார்கள். நான் போய் அவரைச் சந்தித்தேன்.

செட்டியார் அவர்கள் மிகப் பெருந்தன்மையுடன் ‘நாம் இருவர்’ படத்தில் நான் நடிக்காமல் போனதைப் பற்றி வருந்தாமல், என்.எஸ்.கே. அவர்கள் நலன்பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு கடைசியாக ‘நாம் பழைய விஷயங்களையெல்லாம் மறந்து விடுவோம்.

இப்போது நமது ஸ்டுடியோவில் மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனச் சொல்லி என்னிடம் அதற்கான ரசீது ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி 5000 ரூபாய்க்கான காசோலை ஒன்று கொடுத்தார்கள் அதில் முதல் படம்தான் ‘வாழ்க்கை’ என்ற திரைச் சித்திரம்.

அண்ணா அவர்களும் திரைக்கதையின் ஒரு பகுதியை சுமார் 100 பக்கத்துக்கு மேல் எழுதி அனுப்பியிருந்தார்கள்.

அதைப் படித்துப் பார்த்தோம். உணர்ச்சிகரமான உரையாடல்களும், மிகக் கண்யமான முறையில் நகைச்சுவையும் கலந்து எழுதியிருந்தார்கள்.

அவர் இயற்கையாகவே கொண்டுள்ள லட்சியம் சமுதாயச் சீர்திருத்தம். அதற்கு ஏற்ற கதையாக அமைந்திருந்ததால், அவர் உருவாக்கிய ஒவ்வொரு பாத்திரமும் நாம் வாழ்க்கையில் சமுதாயத்தில் தினசரி சந்தித்துப் பழகுகிறவர்களாகவே இருந்தார்கள்.

அதில் நடிப்பதற்கு திருமதி பி.பானுமதி அவர்களை அவர்களுக்கு பொருந்தக் கூடிய பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.

சுதந்திரம் வந்த வருடம் மதுவை ஒழிக்கும் திட்டம் இருந்ததால் தான் தயாரிக்கும் திரைப்படத்திலும் மது ஒழிப்புக்கு பிரசாரமாகக் கலை நுணுக்கத்தோடு ஓரங்க நாடகம் போன்று தயாரித்து இணைத்தார்கள்.

காலத்துக்கேற்ற கருத்துக்களை சிந்தித்து மேடையிலோ திரையின் மூலமாகவோ சித்தரிக்கும் ஆற்றலும் அறிவுத்திறனும் கொண்ட என்.எஸ்.கே. அவர்கள், அவர் ஒரு கலை மேதையாக இன்றும் மக்கள் உள்ளத்தில் வாழ்வதற்குக் காரணமும் இது தான்.

என்.எஸ்.கே. பிலிம்சால் தயாரிக்கப்பட்ட இரண்டாவது திரைப்படம் ‘நல்ல தம்பி’, பேரறிஞர் அண்ணாவின் கருத்தாழமிக்க உள்ளத்திலிருந்து உணர்ச்சிகரமான உரையாடல்களும், சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கக் கூடிய என்.எஸ்.கே. அவர்களின் நகைச்சுவையுடன் கூடியதும், நாட்டு மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய காட்சிகளும், அந்தக் கட்டுக்கோப்புக்களையெல்லாம் அழகாக ஒளிப்பதிவு செய்த கலை நுணுக்கமும், இயக்குனரின் திறமையும், நடித்த கலைஞர்களின் ஒத்துழைப்பும் இணைந்து படத்தை வெற்றிகரமாக மக்கள் மன்றத்தில் வெளியாக்கியது. பொருளாதார நிலையும் திருப்திகரமாகவே இருந்தது.

– எஸ்.வி.சகஸ்ரநாமம் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற நூலில் இருந்து…

– நன்றி: விகடன்

You might also like