இந்தத் தடவை மழைக்காலம் என் பழைய மழைக்காலங்களில் ஒன்று போலச் சாம்பல் பூத்து இருக்கிறது. மனம் ‘ குடைவண்டி அடித்து’ச் சாய்ந்து கிடக்கிறது.
கதை, கவிதை ஒன்றும் எழுதவில்லை. வரையவில்லை. வாசக சாலையில், ‘குத்துக்கல்’ கதை வந்ததும் உற்சாகமாக இருந்தது. ஒன்றும் பிரமாதமில்லை.
அடுத்தடுத்துச் சிறுகதைகள் எழுதி, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு ஒரு சிறுகதைத் தொகுப்புக் கொண்டுவந்துவிடலாம் என்கிற அளவுக்கு ஒரு துள்ளல் மனதில்.
ஆகாச முத்து ‘தினவு’ இதழுக்குக் கதை கேட்டார். 20 நாள் ‘டயம் கொடுத்தார்’. நான்கு வாரம் ஆகிவிட்டது. இன்னும் எழுதிக் கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில் தமிழ் இந்துவில் வாரா வாரம் ஒரு தொடர் எழுத முடியுமா என்று கேட்டார்கள். நல்ல வேளை ஒப்புக் கொள்ளவில்லை. இயலாமையைச் சொல்லிவிட்டேன்.
இடையில் தமிழ்ச்செல்வன் வீட்டு ‘அப்பா- 95’ க்குப் போய் நான்கு பேர்களைப் பார்த்ததில் மனம் கொஞ்சம் நிமிர்ந்தது.
கண்டராதித்தன் ‘பாடி கூடாரம்’ வாங்கிப் படித்தேன். தேவ தச்சனின் ‘கடைசி டினோஸர்’ மீண்டும் படித்தேன். விசை கூடவில்லை.
தி.ஜானகிராமனின் ‘உயிர்த்தேன்’ மீண்டும் படித்தேன். செங்கம்மா, அனுசுயா, ஆமருவி, கணேச பிள்ளை, பழனிவேலு என்று கொஞ்சம் உயிர் வந்தது.
மரப்பசு அதற்குப் பிறகு படித்தேன். செங்கம்மாவுடன் ஒன்றினது போல அம்மிணியுடன் மனசு ஒன்றவில்லை. இதற்குப் பதில் செம்பருத்தி படித்திருக்க வேண்டும். சரியாக இருந்திருக்கும்.
இந்தச் சமயத்தில்தான் முகநூலில் எம்.டி.முத்துக்குமாரசாமி அவருடைய பதிவு ஒன்றில் என்.ஸ்ரீராமின் ‘துருத்தி நடனம்’, சுதாகர் கத்தக்கின் ‘கைம்மண்’ தொகுப்புகள் பற்றி எழுதியிருந்தார்.
என்.ஸ்ரீராம் எனக்குத் தெரியும். என் செல்ல எழுத்தாளர்களில் ஒருவர். சுதாகர் கத்தக் தெரியாது. படித்ததில்லை. பெயரே கேள்விப்படாத ஒன்றாக, புதிதாக இருந்தது.
‘கைம்மண்’ தொகுப்பைப் பதிப்பித்தது யார் என்று தெரியவில்லை. பரிசல் செந்தில்நாதன் உதவினார். அவர் சொல்லி, சுதாகர் கத்தக்கே தன் வசமிருந்த பிரதிகளில் ஒன்றை அனுப்பி வைத்தார். மிக அருமையான பதிப்பு.
கோவையில் இருந்து ‘பார்வைகள்’ வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது அல்ல. 2012 இல். ஒரு கட்டுரையும் 12 சிறுகதைகளும் இருக்கின்றன. நேற்று வாசித்துமுடித்தேன்.
கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு. நான் இந்தக் கதைகளில் உலகளவு கற்றேன். என்னுடைய உலகு அல்லாத வேறு உலகு அளவு.
பா.செயபிரகாசம், என்.ஸ்ரீராம், சமீபத்தில் நான் படித்த சாரோன், ஒரே ஒரு இணுக்கு வண்ணநிலவன் போன்றோரின் வேறு வகை உலகம். எனக்கு எல்லாக் கதைகளும் கற்பித்தன. எல்லாக் கதை மனிதரும் கற்பித்தனர்.
2012-ல் எழுதிய இந்தப் 12 கதைகளுக்குப் பின் சுதாகர் கத்தக், மேற்கொண்டு வேறு கதைகளோ, நாவலோ எழுதியிருக்கிறாரா, தெரியவில்லை. எழுதியிருக்க வேண்டும். இந்த மாதிரிக் கையால் எழுதாமல் இருக்க முடியாது.
நன்றி: முகநூல் பதிவு